காலம் சிலரின் வாழ்வில் மட்டும் எப்படிக் கொடுமையாக நடந்து கொள்கிறது என்று சொல்ல வந்திருக்கிறார் இயக்குநர் எம்.நாகராஜன்.
சிறிய வயதிலேயே தன் பெற்றோரைப் பறிகொடுக்கும் பிரசன்னா, தன்னைப் போலவே தன் பிறந்த நாளில் அம்மாவைப் பறிகொடுக்கும் கலையரசனின் உற்ற நண்பனாகிறார். இந்த நட்பு அவர்கள் வாலிபம் வரை தொடர்கிறது. அப்பாவுடன் வாழ்ந்து வரும் கலையரசனும் தன் சகோதரன் போலவே பிரசன்னாவை நடத்தி வர, இருவருக்கும் காதலும் முளைக்கிறது.
பிரசன்னா சிருஷ்டி டாங்கேவையும், கலையரசன் சாய் தன்ஷிகாவையும் காதலிக்கிறார்கள். இதனிடையே அந்த ஏரியா கவுன்சிலராக இருக்கும் அடாவடிப் பெண்மணியின் மகன் பள்ளிக்குச் செல்லும் பெண்பிள்ளைகள் மீது கைவைக்க, அதைத் தட்டிக் கேட்கும் பிரசன்னா அவர்களுக்குப் பகையாகிறார்.
நண்பர்களின் காதல்கள் என்ன ஆயின, பிரசன்னாவின் பகை அவரை எந்த அளவுக்குக் கொண்டுசென்றது என்பது மீதிப்படம்.
நாயகர்கள் இருவரும் சிறுவர்களாக வரும் எபிசோட் மனதில் நிறைகிறது. பிரசன்னாவின் சிறுவயதுத் தோற்றத்தில் வரும் சிறுவனின் இறுக்கமான முகம் கண்முன்னாலேயே நிற்கிறது.
எந்தப் பாத்திரமானாலும் மிளிரும் பிரசன்னா இதிலும் அப்படியே. தாடி வைத்தாலும் ஸ்மார்ட்டாக இருக்கிறார். சிருஷ்டி டாங்கேவைப் பெண்பார்க்க தாடியை எடுத்துவிட்டு அவர் நடந்து வரும் மிடுக்கு அசத்தல்.
அவருக்கு இணையாக கலையரசனும் நட்பில் பிரகாசிக்கிறார். நண்பன் காதலுக்காக நியாயம் கேட்கப்போகும் இடம் அதற்குச் சான்று.
காதலிக்கத் தோன்றும் முகம் மற்றும் கேரக்டரைசேஷன் சிருஷ்டிக்கு. தன் பிறந்த நாளில் தனக்குக் குங்குமம் வைத்துவிடச்சொல்லி அவர் பிரசன்னாவிடம் கேட்பதும், அதைத் தொடரும் பாடல் காட்சிகளிலும் காதல் ரசம் வழிகிறது.
சாய் தன்ஷிகாவின் முரட்டுக் காதலையும் ரசிக்க முடிகிறது. ஆனால், அவர் கல்லூரியில் படிக்கிறார் என்பதைத்தான் நம்ப முடியவில்லை.
ஆர்.என்.ஆர். மனோகர், ராஜலஷ்மி, பாண்டி ரவி தங்கள் பாத்திரங்களில் பொருந்துகிறார்கள்.
பிவி ஷங்கரின் ஒளிப்பதிவு அபாரம். ஜஸ்டின் பிரபாகரின் இசை இளையராஜாவின் காலத்தை நினைவுபடுத்தி ரசிக்க வைக்கிறது. அன்பறிவின் ஆக்ஷனும் அபாரம்.
இத்தனை நிறைகள் இருந்தும் யாருக்கும் நன்மையோ மகிழ்ச்சியோ தராத அந்த கிளமாக்ஸ் உறுத்தல். வழக்கமாக நாயகன், நாயகி மட்டுமே பாதிக்கப்படும் துன்பியல் கிளைமாக்ஸ்கள் நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால், அதில் நட்புக்கோ, காதலுக்கோ ஏதாவது ஒரு பெருமை இருக்கும்.
இதில் அப்படி இல்லாமல் போவது ஒன்று மட்டுமே குறை. அதுவும் அவர்களின் பிறந்தநாள் என்றால் ஏதாவது அசம்பாவிதம் நடந்தேயாக வேண்டும் என்பது என்ன விதி..?
காலக்கூத்து – துன்பியல் நட்பு..!