January 23, 2026
  • January 23, 2026
Breaking News
January 23, 2026

ஜாக்கி திரைப்பட விமர்சனம்

By 0 7 Views

மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடக்கும் ஆட்டுக்கிடா சண்டையை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம். ஆனால் இதைத் தமிழ் மண்ணின் கலாச்சாரம் தெரியாத மலையாள சினிமாக்காரர்கள் மதுரைப் பகுதியில் முகாமிட்டு உண்மைக்கு நெருக்கமாக அதை எடுத்திருப்பதுதான் ஆகப் பெரிய விஷயம்.

கதைப்படி வில்லன் ரிதன் கிருஷ்ணா தொடர்ந்து ஆட்டுக்கிடா போட்டியில் வென்று ஜாக்கி என்கிற பதக்கத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர். ஆனால் இறுமாப்புடன் ரவுடியிசம் புரிந்து அந்தப் பெயரைக் கெடுத்துக் கொண்டும்  இருக்கிறார்.

அதே மதுரையில் பரம்பரையாக ஆட்டுக்கடா வளர்த்து வரும் நாயகன் யுவன் கிருஷ்ணா, தேவையற்ற வன்முறையினால் தந்தை மற்றும் சகோதரியின் கணவரை இழந்தவர். 

இந்நிலையில், தான் வளர்க்கும் ஆட்டுக்கடா வை நன்றாக பயிற்சி கொடுத்து ரிதன்  கிருஷ்ணாவுடன் போட்டியிட்டு ஜாக்கி பதக்கத்தை வெல்கிறார். 

ஜாக்கி.பiட்டம் பறி போன விரக்தியில் தன் ஆட்டுக்கிடாவையே கொல்லும் ரிதன்  கிருஷ்ணா, யுவனுக்கு பகையாளியாகிறார். அத்துடன் இழந்த ஜாக்கி பட்டத்தை மீண்டும் வெல்ல வேண்டுமென்று இன்னொரு ஆட்டுக்கடா வாங்கி அதற்கு கொடூர பயிற்சி கொடுத்து அடுத்த போட்டியில் மோதுகிறார். 

அதன் முடிவில் மேலும் இருவருக்கும் பகை மூள இருவரும் மோதிக் கொள்ளும் நிலையில், கிடா சண்டை கமிட்டியின் தலைவரும், பெரிய மனிதருமான மதுசூதன் ராவ் அந்த பகையை கிடா சண்டையை வைத்தே எப்படி முடிவுக்கு கொண்டு வருகிறார் என்பதுதான் கதை.

நாயகன் ராமர் வேடத்தில் நடித்திருக்கும் யுவன் கிருஷ்ணாவுக்கு அடிதடியும் சண்டையும் கை கொடுக்கும் அளவுக்கு நடிப்பு முதிர்ச்சி பெறவில்லை. எல்லா உணர்ச்சிகளுக்கும் ஒரே மாதிரியான முகபாவம் கொண்டிருந்தாலும் படம் முடிவில் அவர் முகம் நம் மனதில் பதிந்து போகிறது. 

அம்மு அபிராமியுடனான காதலிலும் ஓரளவு ஸ்கோர் செய்கிறார்.

இவருக்கும் வில்லனாக நடித்திருக்கும் ரிதன் கிருஷ்ணாவுக்கும் கிட்டத்தட்ட ஆறு வித்தியாசங்கள் மட்டுமே இருக்கலாம். தலைமுடி, தாடி, முக அமைப்பு என்று எல்லா விதத்திலும் இருவரும் இரட்டையர்கள் போலவே தெரிகிறார்கள். ஆனால் அடாவடியான முரட்டு நடிப்பில் வித்தியாசம் காட்டுகிறார் ரிதன். 

நாயகியாக வரும் அம்மு அபிராமி காதலுக்கு உதவும் அளவுக்கு கதைக்கு உதவவில்லை. அவர் யார் எங்கிருந்து வருகிறார் அவர் குடும்பம் எப்படிப்பட்டது ஒரு விவரமும் இல்லை.

நாயகனை மோட்டிவேட் செய்யும்போது மட்டும் கதைக்குள் வருகிறார்.

இயல்பான நடிப்பில் சிறந்தவரான மதுசூதன் ராவ் ரிதன் செய்யும் அத்தனை அடாவடிகளும் தெரிந்தும் அவரை அதிகமாக கண்டிக்காமல் இருப்பது சொந்தக்காரர் என்பதாலோ என்னவோ..?

நாயகனின் கையாள் போலவே வந்து ஒரு கட்டத்தில் முக்கியத்துவம் பெறுகிறார் சித்தன் மோகன்.

நாயகனின் அக்காவாக வரும் சரண்யா ரவி எந்நேரமும் சமைத்துக் கொண்டே இருக்கிறார். மூன்று பேர் கொண்ட குடும்பத்திற்கு எவ்வளவு தான் சமைக்க வேண்டுமோ தெரியவில்லை. 

இவர்களுடன் பத்மன், யோகி, சாய் தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா ஆகியோர் கதாபாத்திரங்களில் ஒன்றி நடித்திருக்கிறார்கள்.

கேமராவுக்கு பின்னால் இருக்கும் நாயகனாகி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் என்.எஸ்.உதயகுமார். அந்த ஆனைமலை பேக் டிராப்பையும் ஆட்டுக்கிடா சண்டையையும் அற்புதமாகப் படமாக்கி கவனம் பதிக்கிறார்.

சக்தி பாலாஜியின் பின்னணி இசையில் ரவி பஸ்ரூரின் சாயல் தெரிந்தாலும் படத்துக்கு உயிராகி இருக்கிறது. பாடல்களும் ஓகேதான்.

படம் சற்றே நீளமாக இருந்தாலும் தொய்வில்லாமல் சுவாரசியமாக தொகுத்து இருக்கிறார் படத் தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த்.

எழுதி இயக்கியிருக்கும் டாக்டர்.பிரகபலின் அசாத்திய முயற்சியைப் பாராட்டலாம். 

ஆகச்சிறந்த இயக்குனரான வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் சேவல் சண்டையை உருவகப்படுத்த நிறைய கிராபிக்ஸ் பயன்படுத்தி இருந்தார். ஆனால் இவரோ கிடா சண்டைக்கு நேரடியான காட்சிகளிலேயே படமாக்கி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. சென்சாருக்கும் எப்படி தப்பினார்கள் என்று தெரியவில்லை.

கிடா சண்டைகளை நுணுக்கமாக ஆராய்ந்து அதை நம்பகமாக காட்சிப்படுத்தி இருப்பதில் முக்கியமான இயக்குனராக தடம் பதிக்கிறார் பிரகபல்.

ஆனால் இந்த அரிய முயற்சிக்கு வழக்கமான விளையாட்டுப் போட்டிகள் கொண்ட கதைகளின் டெம்ப்ளேட்டையே பயன்படுத்தி இருப்பது மட்டும் குறையாக இருக்கிறது.

அடுத்தடுத்த காட்சிகள் இதுவாகத்தான் இருக்கும் என்று எளிதாக அனுமானிக்க முடிகிறது. 

இருப்பினும் பெரு முயற்சி செய்து நேர்த்தியான ஒரு அனுபவத்தைத் தந்த அவருக்குப் பாராட்டுகள்.

ஜாக்கி – மெய்யான ‘ஆடு’ களம்..!

– வேணுஜி