July 1, 2025
  • July 1, 2025
Breaking News
May 29, 2025

ஜின் தி பெட் திரைப்பட விமர்சனம்

By 0 170 Views

பட ஆரம்பத்தில் உக்கிரம் பிடித்த ஆவி ஒன்றை ஒரு மந்திரவாதி அடக்கி பெட்டிக்குள் அடைக்கிறார். அப்போதே நமக்குத் தெரிகிறது, அந்தப் பெட்டி ஒரு கட்டத்தில் திறக்கப்பட்டு அதன் உள்ளே இருக்கும் ஆவி வெளியே வந்து அட்டகாசம் செய்யப் போகிறது என்று.

“ஓ…நீங்கள் அப்படி நினைத்து விட்டீர்களா..? ஆனால், இது வேறு கதை..!” என்று இயக்குனர் டி ஆர் பாலா கொஞ்சம் (டெம்) ப்ளேட்டை திருப்பிப் போடுகிறார்.

அதே பெட்டி மலேசியாவில் பழம் பொருட்கள் விற்கும் கடை ஒன்றில் இருக்க அதை படத்தின் நாயகன் முகேன் ராவ் தொடப் போக, அவருக்கு திடீர் அதிர்ஷ்ட பரிசு ஒன்று கிடைக்கிறது. அதே நேரத்தில் அந்தக் கடைக்காரர் பெட்டிக்குள் ஒரு ஆவி இருப்பதாகவும் அதை செல்லப்பிராணியாக வளர்க்க முடியும் என்றும் கூற “நான் வளர்க்கிறேன்..!” என்று இந்தியாவுக்கு வாங்கி வருகிறார் முகேன். 

அப்பா, அம்மா, தங்கை, தங்கை கணவர், மனைவியான காதலி என்று இருக்கும் முகேன் ராவின் வாழ்க்கை அந்த ஜின்னால் எப்படி திசை மாறிப் போகிறது என்பதுதான் மீதிக் கதை. 

பாதிப் படம் வரை ஜின்னைக் கண்ணிலேயே காட்டாமல் அருவமாகவே வந்து சில வேலைகளைச் செய்கிறது. இடைவேளை நேரத்தில்தான் ஜின்னின் உண்மையான உருவம் நமக்குக் காட்டப்படுகிறது. அது அவ்வளவு கொடூரமாகவும் இருக்கிறது. 

ஆனால் இரண்டாவது பாதியில் அந்த ஜின்னின் செயல்பாடுகள் எல்லாமே யோகி பாபுவை விட மட்ட ரகமான காமெடியில் இருக்கிறது. இந்தக் காமெடிப் பீசுக்கு எதற்கு இவ்வளவு கொடூரமான முகம் என்று தெரியவில்லை. 

உண்மையில் ஜின் கொடூரமானதா அன்பானதா என்றெல்லாம் நமக்கு மிகப்பெரிய குழப்பம் ஏற்பட கடைசியில் முதல் காதில் சுற்றிய பூ போதாது என்று இன்னொரு கெட்ட ஜின் இருப்பதாக நம் இன்னொரு காதிலும் பூச்சுற்றுகிறார்கள்.

கடைசியில் என்ன..? பேய்க்கும் பேய்க்கும் சண்டைதான். 

இதை குழந்தைகள் ரசிப்பார்கள் என்று பெருமளவில் நம்பி இருக்கிறார் இயக்குனர் அதுதான் படத்தின் யூஎஸ்பி என்றால் அந்த ஜின்னை கொஞ்சம் லட்சணமாக வடிவமைத்திருக்கலாம். 

அல்லது பழைய நடிகர் அசோகன் போல காமெடியான உருவம் கொடுத்து ஒரு நடிகரை அதில் நடித்திருக்க முடியும். 

முகேன் ராவுக்கு எளிதான வேடம். இயல்பாக நடித்து விட்டுப் போகிறார். ஆனால் சண்டைக் காட்சிகளில் அற்புதமாக வேகம் காட்டியிருக்கிறார். 

நாயகி பவ்யா டிரிக்காவுக்கும் பவ்யமான வேடம். அவர் அறிமுகக் காட்சியில் ஃபிளைட்டில் இறங்கி வந்து சொந்தக்காரில் போகும்போது, கோடீஸ்வரன் மகளாகத் தெரிகிறார். ஆனால் அடுத்த காட்சியிலேயே அவர் ஒரு மருத்துவமனையில் நர்ஸ் என்கிறார்கள். நம்புற மாதிரியா இருக்கு..?

காமெடி கேரக்டர் தான் உங்களுக்கு என்பதை பால சரவணனனிடம் யாரும் சொல்லவில்லை போலிருக்கிறது.

முகேனின் அப்பாவாக இமான் அண்ணாச்சி வருவதையும் நம்ப முடியவில்லை. அவர் வழக்கமாக எதையெல்லாம் செய்வாரோ அதை எல்லாம் இதிலும் செய்திருக்கிறார். 

முகேனின் சகோதரியாக வினோதினி, பாட்டியாக வடிவுக்கரசி என்று அவரவர்கள் அந்தந்த பாத்திரங்களில் பொருந்தி இருக்கிறார்கள். 

வில்லனாக ராதாரவியுடன் நந்து ஆனந்தம் களம் இறங்கி இருக்கிறார். அவர்களும் வழக்கமான வில்லங்கங்களாகவே வந்து போகிறார்கள்.

ஒளிப்பதிவு கச்சிதமாக இருக்கிறது. இசையும் துருத்தாமல் ரசிக்க வைக்கிறது. 

ஆனால் தீபாவளி பாம்பு மாத்திரையில் வரும் கருப்பு வஸ்து போல இருக்கும் அந்த ஜின்னின் உருவம்தான் நம்மை ரொம்பவே டிஸ்டர்ப் செய்கிறது. 

ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு ஒரு ஜின்னை வளர்த்துக் கொண்டிருந்தார்கள் என்று இயக்குனர் பாட்டுக்கு அடித்து விட்டிருக்கிறார்.

குடிகாரர்களுக்கு மட்டும் திரவ ஜின்னை பிடிக்கும். ஆனால் இந்த திடமான ஜின்னை குடும்பத்தினர் அனைவருக்கும் பிடிக்கும் என்று இயக்குனர் நம்பியது நலமானால் நல்லது. 

ஜின் – பட்டணத்தில் (நவீன) பூதம்..!

– வேணுஜி