2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், வணிக வளாகம் என 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் சசிகலா 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி ரூ.1,500 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.1,600 கோடி மதிப்பிலான சசிகலாவுக்கு சொந்தமான பினாமி சொத்துகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கம் செய்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு தனியார் நிறுவனம், சசிகலாவின் பினாமி நிறுவனமாக செயல்பட்டு வருவது தெரிந்தது.
இந்த நிறுவனத்தின் மூலம் தான் சசிகலா சென்னையில் போயஸ் கார்டன், தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் போன்ற பகுதிகளில் 65 சொத்துகளை வாங்கி இருப்பதும் தெரியவந்தது.
இந்த சொத்துகளில் சென்னை போயஸ் கார்டனில் வேதா நிலையம் எதிரே சுமார் 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பங்களாவும் ஒன்றாகும் என்று கூறப்படுகிறது.
ரூ.300 கோடி மதிப்பிலான இந்த சொத்துகளை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கம் செய்துள்ளனர். இதுதொடர்பான தகவல் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நோட்டீஸ் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் முடக்கப்பட்ட சசிகலாவின் ரூ.300 கோடி சொத்துக்கான இடங்களில் வருமான வரித்துறை நோட்டீஸ் ஒட்டியது.
சென்னை போயஸ் கார்டனில் சசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டில் சொத்துகளை முடக்கியதற்கான நோட்டீஸை வருமான வரித்துறை ஒட்டியது.