சசிகுமாரின் ‘சுப்ரமணியபுரத்’தை மிஞ்சிய ஒரு கதை அதற்குப்பின் இதுவரை தமிழில் வந்ததில்லை என்று சொல்லலாம். ஏன்..? அவரே கூட அதை மிஞ்சிய ஒரு கதையை இதுவரை எழுதவில்லை.
ஆனால், எதனால் அவர் ரசிக்கப்பட்டாரோ அதை மறந்து தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாகக் காட்டிக்கொள்ள தேய்ந்து தேய்ந்து வழக்கமான கமர்ஷியல் ஃபார்முலாவுக்குள் வந்துவிட்ட அவர் இப்போது ஒரு திருட்டுக்கதையில் நடித்து வருவதாக வந்த செய்தி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
அவரை அப்படி சிக்க வைத்திருப்பவர் இயக்குநர் பொன்ராம். அவர் இப்போது சசிகுமாரை வைத்து இயக்கி வரும் ‘எம்ஜிஆர் மகன்’ என்ற படத்தின் கதைதான் திருட்டுப் புகாரில் சிக்கியிருக்கிறது.
இந்தக் கதையை பத்திரிகையாளர் தேனி கண்ணன் என்பவர் ‘இதய வீணை’ என்ற தலைப்பிட்டு எழுதி அது புகழ்பெற்ற இதழில் பிரசுரம் ஆகியிருக்கிறது.
பொன்ராம் படத்தின் தலைப்பைப் பார்த்து சந்தேகம் கொண்ட தேனி கண்ணன் இதுகுறித்து பொன்ராமின் கதை விவாதக் குழுவில் இருந்த நண்பரிடம் இதுபற்றிக் கேட்டிருக்கிறார். அந்த நண்பருக்கு ‘இதய வீணை’ கதை ஏற்கனவே தெரியுமாம். அதற்கு அவர் “இது வேறு கதை…” என்றதால் இப்போதைக்கு அந்தப் பிரச்சினையை கையில் எடுக்கவில்லை தேனி கண்ணன்.
அத்துடன் படம் முடிந்து திரையில் பார்த்து “இது என் கதை…’ என்று வழக்காடப் போவதில்லை..!” என்று தேனி கண்ணனே தன சமூக வலை தளப் பதிவில் கூறியிருக்கிறார்.
அது அவரது பெருந்தன்மை. ஆனால், கத்தரிக்காய் முற்றி கடைத் தெருவுக்கு வந்து விட்டது. இது குறித்த செய்தி ஒன்று தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றிலும் வெளியாகி இருக்க… இது தேனி கண்ணனின் கதை இல்லை என்று பொன்ராம் விளக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
அது அவருக்கு மட்டுமல்லாது, மிஸ்டர் ‘கிளீன் ஸ்லேட்’டாக இருக்கும் சசிகுமாரின் நற்பெயருக்கும் அதுவே நல்லது..!
“ஓரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அது தேவன் என்றாலும் விடமாட்டேன்…” என்று பாடிய எம்ஜிஆர் பெயரைத் தலைப்பில் வைத்துக்கொண்டு இப்படி ஒரு தவறைத் தெரிந்தே செய்வது சரியல்லவே..?