January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • Uncategorized
  • ஐபிஎல் (IPL) திரைப்பட விமர்சனம்
November 30, 2025

ஐபிஎல் (IPL) திரைப்பட விமர்சனம்

By 0 157 Views

ஐபிஎல் என்கிற Indian Penal Law என்ன சொல்கிறது என்றால் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில்தான் தீர்ப்புகள் வழங்க வேண்டும் என்பதே. இந்த விஷயத்தை வைத்துக்கொண்டு எப்படி எல்லாம் அதிகார வர்ககம், சாமானிய மக்களை தங்களது சுயலாபத்துக்காக  கொடுமைப்படுத்துகிறது என்று சொல்லும் படம்.

அப்படி கொடுமைக்கார இன்ஸ்பெக்டராக இருக்கும் போஸ் வெங்கட் தவறுதலாக ஒரு இளைஞனை பிடித்துக் கொண்டு போய் லாக்கப்பில் அடைக்கிறார். தான் லஞ்சம் வாங்கியதை அவன் படம் பிடித்து விட்டான் என்று நினைத்து அவனது மொபைல் போனை சோதிக்கும் போது அதில் முக்கியமான வீடியோ ஒன்று சிக்குகிறது. 

அதன் அடிப்படையில் அவனை சித்தரவதை செய்யும்போது அந்த இளைஞன் இறந்து விட, அந்த கேசில் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக கார் டிரைவராக இருக்கும் கிஷோரை அதில் சம்பந்தப்படுத்துகிறார்.

அதற்கு உதவி கமிஷனராக இருக்கும் ஹரிஷ் பெராடியும் உடந்தையாக… சிக்கலுக்கு உள்ளாகும் கிஷோரின் குடும்பத்தை காப்பாற்ற இருக்கும் ஒரே உபகாரியாக டிடிஎஃப் வாசன் இருக்க… அவரும் கிஷோரின் நன்மதிப்பை பெற முடியாதவராக இருப்பதில் என்ன ஆகிறது என்பது மீதிக் கதை.

நாயகனாக வரும் TTF வாசனின் நல்ல உள்ளம் தான் கதையை நகர்த்தி செல்கிறது என்றாலும், கிஷோரைப் பார்த்து அப்படி ஒரு தகாத வார்த்தையை அவர் சொல்லி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 

ஆனாலும் தன்னால் முடிந்த வரை நல்லவராகவே நடித்து நம் நன்மதிப்பை பெறுகிறார் வாசன்.

ஆனால் ஆரம்ப முதல் இறுதி வரை கிஷோரின் நடிப்பு ராஜ்ஜியம்தான் கொடிகட்டி பறக்கிறது. ஒரு அப்பாவியான சாமானியன் நெருக்கடியில் எப்படி நடந்து கொள்வானோ அந்தப் பதட்டத்துடன் நடித்து பாராட்ட வைக்கிறார் கிஷோர். 

அவரது மனைவியாக வரும் அபிராமி பார்ப்பதற்கு பெரிய இடத்துப் பெண் போல தோன்றினாலும் கணவனின் கஷ்டங்களுக்கு தோள் கொடுத்து நம்மை நெகிழ வைத்து விடுகிறார்.

வாசனை காதலிக்கும் கிஷோரின் தங்கையான நாயகி குஷிதா, குளோசப்பில் பார்க்கும் போது குஷியைத் தருகிறார். 

இவர்களுடன் ஆடுகளம் நரேன், ஜான் விஜய், சிங்கம்புலி போன்றவர்களும் தங்கள் அனுபவ பங்களிப்பை செய்திருக்கிறார்கள். ஆனால் ஜான்விஜய் நடிக்கிறேன் பேர்வழி என்று நம் பொறுமையை ரொம்பவும் சோதித்து விட்டார்.

அதேபோல் காக்கி சட்டையில் இருக்கும் ஒரே நல்ல உள்ளமான திலீபனும் ஓரிரு காட்சிகளில் காணாமல் போய்விடுகிறார்.

படத்தின் உணர்வை பெருமளவு காப்பாற்றுகிறது அஸ்வின் விநாயகமூர்த்தியின் பின்னணி இசை. பாடல்களுக்கான இசையிலும் தன் அடையாளத்தை பதித்திருக்கிறார். 

படத்தில் கிளைமாக்சுக்கு முன் வரும் ஒரு அற்புதமான சேசிங்  ஒளிப்பதிவாளர் எஸ் . பிச்சுமணியின் திறமையை பறைசாற்றுகிறது.

நாடெங்கும் அப்பாவிகள் எப்படி எல்லாம் பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படத்தின் கதையை இயக்குனர் கருணாநிதி எழுதி இருக்கும் நிலையில், உரையாடல்கள் முதற்கொண்டு அதை ஒரு சினிமாவாகவே கொடுத்திருப்பதை தவிர்த்து இருக்கலாம்.

இயல்புத்தன்மை காட்சிகளில் மிகுந்திருந்தால் இன்னும் மனதுக்கு நெருக்கமாக அமைந்திருக்கும். 

ஐபிஎல் – கரை படிந்த காக்கி சட்டை..!

– வேணுஜி