தமிழ்ப்படங்களுக்கு டைட்டில் வைப்பதென்பது எள்ளின் தோலை உரித்து அதன்மேல் ஈயம் பூசுகிற வேலை. அதனால் இருக்கிற தலைப்புகளையே எடுத்து வைத்து ரசிகர்களைத் திணறடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வித்தியாமாக தலைப்பு வைக்கிறேன் பேர்வழி என்று வதைத்துக் கொண்டிருப்பவர்கள் இன்னொரு புறம். இதில் சொந்தமாக எல்லோருக்கும் பிடிக்கிற தலைப்பைப் பிடிப்பவர்கள் வெகு சிலரே. அது கதைக்கும் பொருத்தமாக இருக்க வேண்டுமென்பதுதான் மிக முக்கியம்.
அந்த வகையில் இயக்குநர் வித்யாதரன் தன் படத்துக்கு ‘இட்லி’ என்று தலைப்பு வைத்துள்ளார். காமெடி த்ரில்லர் ஜேனரில் உருவாகியிருக்கும் படத்துக்கு இந்தத் தலைப்பு பொருத்தமானதே.
இப்படம் வருகிற ஜூன் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. காமெடி த்ரில்லராக உருவாகியிருக்கும் ‘இட்லி’க்கு சட்னி, சாம்பாராக இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன் , கோவை சரளா , மறைந்த நடிகை கல்பனா, மனோபாலா , லொள்ளு சபா ஸ்வாமிநாதன் மற்றும் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு 40 நாட்களில் நிறைவுபெற்றதாம். சென்னையில் படமாக்கப்பட்ட படத்தின் பாடல் காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டிருக்கிறது. தரன் இசையமைக்க, கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாபு தூயயவன் மற்றும் G. கார்த்திக் அப்பு மூவீஸ் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
.”இப்படம் வங்கியை கொள்ளையடிக்கும் மூன்று வயதான பெண்களை பற்றிய கதையைச் சொல்கிறது. அதோடு சமூகத்துக்குத் தேவையான கருத்துகளைச் சொல்லும் படமாகவும் இருக்கும். மொத்தத்தில் ‘இட்லி’ குடும்ப ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்..!” என்கிறார் இயக்குநர்.
ஆவி பறக்க இந்த இட்லியை நீங்கள் சுவைக்க வரும் 29ம்தேதி வரை காத்திருக்க வேண்டும். அன்றுதான் படம் ரிலீஸ்..!