காதலித்த அர்ஷா பைஜுவின் தந்தை கவிதா பாரதி ஒரு ஒப்புக்கு “உனக்கு ஒரு சொந்த வீடு இருக்கா..?” என்று கேட்ட பாவத்துக்கு படாதபாடு பட்டு ஒரு செகண்ட் ஹேன்ட் பிளாட்டை வாங்குகிறார் நாயகன் தர்ஷன்.
தன்னை நம்பி வந்த காதலியைத் திருமணம் செய்து கொண்டுஅந்த பிளாட்டுக்குள் குடியேறிய தர்ஷனுக்கு வினோத அனுபவங்கள் ஏற்படுகின்றன.
அதெல்லாம் நாம் பல காலமாக பார்த்துப் பழக்கப்பட்ட அமானுஷ்யங்களாக இருக்க, வழக்கமான ஆவி படம்தானே என்ற அலுப்புடன் செல்போனில் மெசேஜ் பார்க்க ஆரம்பிக்கும் நேரம், எதிர்பாராத ட்விஸ்ட் ஒன்றைக் கொடுக்கிறார் இயக்குநர்.
அங்கு நடக்கும் அமானுஷ்யங்கள் எதுவுமே ஆவியால் நடைபெறுபவை அல்ல என்று அதற்கான ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் விளக்கத்தைத் தருகிறார் இயக்குனர்.
டைம் டிராவல், டைம் லூப் என்றெல்லாம் ஹாலிவுட் வழியாக நமக்கு ஏற்கனவே பழக்கப்படுத்திவிட்ட வழியில் இதில் ‘டெசராக்ட் ‘ என்று ஒரு கற்பனை நிலையை அறிமுகப்படுத்துகிறார் அவர்.
அதன்படி 2012, 2022 என்று இரண்டு ஆண்டுகளின் நிகழ்வுகள் ஒரு புள்ளியில் இணைய, அந்த வீட்டில் ஒரே நேரத்தில் அந்தந்த ஆண்டுகளில் வாழ்ந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் ஒரே நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதெல்லாம் எப்படி முடிவுக்கு வந்தன என்பதை ஒரு மாதிரி நமக்குப் புரியவைத்து அனுப்புகிறார்கள்.
அப்பாவியான வேடத்துக்கு தர்ஷன் பொருத்தமாக இருக்கிறார். திருமணத்துக்கு முன்பு அர்ஷா பைஜுவுடன் காதலிக்க வாய்ப்பு இல்லாததால் திருமணத்துக்குப் பிறகான காதலில் தன் இருப்பை நிரூபிக்க முயன்றிருக்கிறார்.
அர்ஷா பைஜுவின் கண்களே நிறைய பேசி விடுவதால் அவர் பேசும் வசனங்களும் குறைவாக இருக்கின்றன. நடிப்பதைவிட பயப்படுவதே அவருக்கு வேலையாக ஆகி இருக்கிறது.
அடுத்த பக்கத்தில் காளி வெங்கட், வினோதினி ஜோடியும் இவர்களுடன் நன்றாகவே மல்லுக் கட்டி இருக்கிறார்கள். காளி வெங்கட் நடிப்பு பற்றிச் சொல்ல வேண்டியதில்லை… ஆனால், அவரை ஓவர்டேக் செய்யும் வினோதினி அங்கங்கே பட்டையைக் கிளப்பி இருக்கிறார்.
அவர்களின் மகனாக வரும் மாஸ்டர் ஹென்ரிக்கும் நன்றாக நடித்திருக்கிறான்.
ஒளிப்பதிவாளர் M.S. சதீஷ் இருவேறு ஒளி அமைப்புகளில் காலக் கட்டத்தை வேறுபடுத்திக் காட்டியிருப்பதை ரசிக்கலாம். அதற்கு உதவி இருக்கும் கலரிஸ்டுக்கும் பாராட்டுக்கள்
ராஜேஷ் முருகேசன் இசை படத்தின் தன்மையைப் பழுதில்லாமல் கடத்தியிருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் டி.ராஜவேல் தமிழுக்குப் புதிய களத்தை அறிமுகப்படுத்தி இருப்பது நல்ல முயற்சி. புரிந்து கொள்வதற்கு சற்றே குழப்பமாக இருந்தாலும் போகப் போக அந்தக் கதைக்குள் நம்மைப் பொருத்திக் கொள்ள முடிகிறது.
ஆனால், கடைசி கடைசியாக ஒரே மனிதன் வேறு வேறு பரிமாணங்களில் வாழ்ந்து கொண்டிருப்பான் என்றெல்லாம் கதை சொல்லியிருப்பது (கதை விட்டிருப்பது ..?) புரிந்து கொள்ள மிகக்கடினமான இருக்கிறது.
ஹவுஸ்மேட்ஸ் – காலப் பங்காளிகள்..!
– வேணுஜி