ஹாட்ஸ்பாட் படத்தின் சர்ச்சைகளும் அது தந்த வெற்றியும் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்குக்கு மேலும் உற்சாகம் தர அதன் இரண்டாவது பாகத்தையும் வெறும் 2 என்றில்லாமல் 2 மச்சாகவே கொடுத்திருக்கிறார்.
இதில் அவர் எடுத்துக் கொண்டிருக்கும் கதைகள் மூன்று. அந்த மூன்று கதைகளையும் தாங்கிச் செல்லும் நான்காவது கதையும் உண்டு.
கடந்த படத்தை போலவே இதிலும் தயாரிப்பாளரிடம் இந்தக் கதைகளைச் சொல்லுகிறார் பிரியா பவானி சங்கர்.
அதன்படி முதல் கதை சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்களைக் குறி வைக்கிறது. வெறிபிடித்த ரசிகர்களாக இருந்து வாழ்க்கையைத் தொலைக்க வேண்டாம் என்று புத்திமதி சொல்கிறது. சொல்பவர் அப்படி வாழ்ந்து வாழ்க்கையைத் தொலைத்த எம்.எஸ்.பாஸ்கர்.
இரண்டாவது கதை ஆடைகளின் சுதந்திரத்தை பற்றி சொல்கிறது. எங்கள் உடை எங்கள் உரிமை என்று கூறும் இளைய சமுதாயத்தினருக்கு மூத்த சமுதாயத்தைச் சேர்ந்த தம்பி ராமையா எப்படி புத்தி புகட்டுகிறார் என்பதைச் சொல்கிறது.
மூன்றாவது கதை நிகழ் காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் முடிச்சு போடுகிறது. அப்படி எதிர்காலத்தில் இருக்கும் ஒருத்தியை காதலிக்க ஆரம்பித்து அது எங்கே கொண்டு போய் முடிகிறது என்று சொல்கிறது.
இதெல்லாம் சாதாரண லைன் போலத்தானே இருக்கிறது… இதில் எங்கே இருந்து வருகிறது டூ மச்..? என்று கேட்டீர்ககளானால் அதில் தான் தன் சித்து வேலையை காட்டி இருக்கிறார் இயக்குனர்.
இந்த கதைகளுக்குள் லெஸ்பியன், கள்ளக் காதல் என்று இன்ன பிற ஐட்டங்களையெல்லாம் உள்ளே வைத்து சாதாரண பீடாவை பான் பீடாவாக மாற்றியிருக்கிறார் அவர்.
இந்தக் கதைகளுக்குள் நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், அஷ்வின், ஆதித்யா பாஸ்கர், ரக்ஷன், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், தயாரிப்பாளர் கே.ஜெ.பாலமணிமர்பன், பவானி ஸ்ரீ, பிரிகிடா, சஞ்சனா திவாரி ஆகியோர் தங்கள் பாத்திரங்களில் நடிப்பைத் திறம்பட வெளிக் காட்டி இருக்கிறார்கள்.
இவர்களில் முக்கியமாக கவனிக்க வைப்பவர்கள் பிரியா பவானி சங்கர், அஸ்வின், எம் எஸ் பாஸ்கர் மற்றும் தம்பி ராமையா.
கதைகளின் சூத்திரதாரியாக வரும் பிரியா பவானிசங்கரை ரசிக்க முடிகிறது. அஸ்வினின் நடிப்பு மேம்பட்டிருப்பது புரிகிறது.
அதேபோல் தற்கால இளைஞர்களுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்து அறிவுரை சொல்லும் எம் எஸ் பாஸ்கரும் தம்பி ராமையாவும் கவர்கிறார்கள்.
வெவ்வேறு தளங்களில் கதைகள் நகர்ந்தாலும் அவற்றுக்கு தங்கள் ஒளிப்பதிவால் நியாயம் சேர்த்திருக்கிறார்கள் ஜெகதீஷ் ரவி மற்றும் ஜோசப் பால்.
சதிஷ் ரகுநாதன் பின்னணி இசை படத்தின் உணர்வை சரியாக மீட்டியிருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் விக்னேஷ் கார்த்திக், தனது ட்ரெண்டாகவே இதைப் போன்ற விவாதத்தை கிளப்பும் கதைகளை முன் வைக்கிறார்.
ஆனால் இது தொடர்ந்து கொண்டே இருந்தால் அதை ரசிக்க முடியும் என்று தோன்றவில்லை. முதல் பாகம் தந்த விறுவிறுப்பு இதில் மிஸ் ஆகி இருப்பதே அதற்கு காரணம்.
இன்னும் சொல்லப்போனால் இவர் இதில் கையாண்டு இருக்கும் ஒவ்வொரு கதையையும் முழு படமாகவே எடுக்கக்கூடிய அளவிற்கு அதில் விஷயங்கள் இருக்கின்றன.
அப்படி இனி முயற்சி செய்தால் விக்னேஷ் கார்த்திக் தன்னுடைய இருப்பை தமிழ் சினிமாவில் நிலை நிறுத்திக் கொள்ள முடியும்.
ஹாட் ஸ்பாட் 2 மச் – எடுத்துக்கொண்ட விஷயங்கள் நச்..!
– வேணுஜி