ஒருமுறை உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகம், மகாராஷ்டிரம், உத்தப் பிரதேசம் மாநிலங்களில் தடை விதித்திருப்பது தைரியமான நடவடிக்கை என மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில் பிளாஸ்டிக் தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் 14 விதமாக பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலில் உள்ளது. இந்நிலையில் பிஸ்கட், சாக்லேட், சாம்பூ மற்றும் அழகு சாதன பொருட்கள் பொதியப்பட்டுள்ள பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நேஸ்ட்லே, டாபர் இந்தியா, பிரிட்டானியா, பெப்ஸிகோ, ரிலையன்ஸ், ஆச்சி, எம்.டி.ஆர், மற்றும் சக்தி மசாலா, அமுல் டெய்லி, பார்லே, ஆவின் மற்றும் கேட்பரி இந்தியா உள்பட 95 நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, பிளாஸ்டிக் பைகளுக்கு தடைவிதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும், மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து, நெகிழி என்னும் பிளாஸ்டிக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து பிப்.4ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.