திரைப்படங்களில் வரும் சூப்பர் ஹீரோக்கள் சாகசங்களைச் செய்வதுபோல் பலருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கும் அவர்களைப் போல் சாகசம் செய்ய ஆசை பிறப்பது இயல்பு.
அப்படி சிறிய வயதில் சூப்பர் ஹீரோ ஆக ஆசைப்படும் சிவகார்த்திகேயன் அந்த முயற்சியில் தோல்வியடைய வளர்ந்ததும் வாழ்க்கைப் போராட்டத்தில் நம்மால் அப்படியெல்லாம் ஆக முடியாது என்று கண்டுகொள்கிறார். ஆனால், ஒரு சந்தர்ப்பத்தில் எந்தக் குழந்தையையும் அவர்கள் கனவுப்படி வளரவிட்டால் ஒவ்வொரு குழந்தையும் சூப்பர் ஹீரோ ஆக முடியும் என்று கண்டுகொள்வதுதான் படத்தின் கதைக் கரு.
அதிலும் முக்கியமாக நம் கல்வி, தொழில் முறைகளில் தகுதிச் சான்றிதழ்களுக்கும், மதிப்பெண்ணுக்கும் கொடுக்கப்படும் மரியாதை குறித்தும் படத்தில் விவாதிக்கப்படுகிறது. அதன் விளைவாக எல்லா மாணவர்களும் அவர்களது தனித்திறமைகளுடன் வளர முடியாமல், மதிப்பெண் இல்லாத காரணத்தால் திறமையிழந்தவர்களாகக் கருதப்படும் அவலத்தையும் சுட்டிக்காட்டுகிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன்.
ஒரு உயரிய கருத்தைச் சொன்ன அவருக்கு வந்தனங்கள்.
தனக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிவகார்த்திகேயனின் இப்படியான கதைத் தேர்வு வியக்க வைக்கிறது. அவர் படங்களில் வேலைக்காரனுக்குப் பிறகு சமூக விழிப்புணர்வுப் படமாக அமைந்திருக்கிறது இந்தப்படம். இதன் மூலம் அவர் பெரும்பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்களின் முகத்திரையைக் கிழித்து அவர்களுக்கு எதிரானவராகக் கருதப்படும் அபாயம் இருக்கிறது. ஆனால், மக்கள் நாயகனாக அவர் போற்றப்படுவது நிச்சயம்.
ஒரு சூப்பர் ஹீரோ எல்லா சண்டைக்களத்திலும் வெற்றி பெற்றவராகவே இருப்பார். ஆனால், இதில் சிவகார்த்திகேயன் அப்படி ஒன்றும் பராக்கிரம சாலியாக காட்டப்படவேயில்லை. அதுவே அவரை மக்களுடன் நெருங்கிய சூப்பர் ஹீரோ ஆக்குகிறது. அவரது அப்பாவித்தனமான நடிப்பும் நல்லவர்களுக்குப் பிடிக்கும்.
அவரை மிஞ்சும் ஒரு வேடத்தில் அர்ஜுன் வருகிறார். அவர் ஆரம்பத்தில் காலைத் தாங்கித்தாங்கி நடந்து வர, ‘ஆக்ஷன் கிங்’கான அவரை இப்படி முடமாக்கிவிட்டார்களே என்று நமக்கு பதற்றமாக இருக்கிறது. ஆனால், அதற்கெல்லாம் சேர்த்து இன்னும் சொல்லப்போனால் ஹீரோ சிவகார்த்திகேயனைவிட அவர்தான் அதிரிபுதியாக ஆக்ஷனில் கலக்குகிறார். அத்துடன் சிவாவை மோல்ட் செய்து மோடிவேட் செய்யும் நபராக அர்ஜுன் வருவது அவர் கேரக்டருக்குண்டான பலம்.
இவர்களுக்கு நிகரான வேடம் வில்லன் அபய் தியோலுக்கு. அலட்டிக்கொள்ளாமல் அவர் ஒவ்வொரு திறமைசாலியையும் கண்டுபிடித்து அவர்களைக் கொல்லாமல் அவர்களை அறிவில் முடமாக்கும் செயல் கொலைகளைவிட அதிர்ச்சியளிக்கிறது. மக்களுக்கான கண்டுபிடிப்புகள் எல்லாமே இவர்களைப் போன்ற பணம் தின்னும் கழுகுகளால் செயலிழக்கின்றன என்ற சுடும் உண்மை இவரைப் பார்க்கும்போது உறைக்கிறது.
நாயகி கல்யாணி பிரியதர்ஷனுக்கு பெரிய வேலையில்லை. கொஞ்சமே அழகாக வந்து சிவாவை காதலித்துவிட்டு மறைந்து போகிறார். அதற்காக பின்பாதியில் ஒரு காட்சியிலும் அவர் தேவைப்படவே இல்லையென்பது ஒரு குறையே.
சிறு வயது விஞ்ஞானிகளாக வரும் சிறுவர் சிறுமியர் அனைவருமே அற்புதமாக நடித்திருக்கிறார்கள். அதிலும் ஏரோநாடிக்கல் எஞ்சினீயராக விரும்பும் சிறுமி இவானா மனம் முழுதும் நிறைகிறார்.
ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் நேர்த்தியான ஒளிப்பதிவும், யுவனும் பின்னணி இசையும் சேர்ந்து ஒரு ஆங்கிலப்படம் பார்க்கும் பிரமிப்பை நம்முள் விதைக்கிறது.
காணாமல் போன பொருள் கிடைக்காவிட்டால் குப்பைக் கூடையில் தேடச் சொல்வார்கள். அப்படி நம் குழந்தைகளின் வெளியில் தெரியாத திறமைகள் ‘ரஃப் நோட்’டில் வெளிப்படும் என்று சொல்லியிருக்கும் இயக்குனர் எல்லா பெற்றோரையும் யோசிக்க வைத்திருக்கிறார்.
இன்னும் கொஞ்சம் கமர்ஷியல் அம்சங்கள் சேர்த்து எளிமையாக்ச் சொல்லியிருந்தால் கடைக்கோடி ரசிகர்கள் வரை ரசிக்கும் படமாக இருந்திருக்கும்.
ஹீரோ – தோல்வியுற்றவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் டாக்டர்..!