November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தெருவோரம் அல்லல் படும் உதவி இயக்குனருக்கு உதவிடுங்கள்
February 27, 2020

தெருவோரம் அல்லல் படும் உதவி இயக்குனருக்கு உதவிடுங்கள்

By 0 703 Views

கோலிவுட்டில் ஒரு உதவி இயக்குநர கண்ணில் பட்ட இன்னொரு வாழ்விழந்த உதவி இயக்குனர் பற்றி இட்டிருக்கும் பதிவு இது…

 ” சென்னை வடபழனி நூறடி சாலை, அம்பிகா எம்பையர் ஹோட்டல் எதிரில் இளையராஜா என்பவரின் தேநீர் கடை அருகில், நிறைய முடியுடனும், அழுக்கு சட்டையுடனும் ஒரு நபர் எப்போதும் எழுதிக்கொண்டே இருந்திருக்கிறார்.

எழுதும் பேப்பரும், நோட்டும் மட்டும் வெள்ளை வெளேரென இருந்திருக்கிறது. யாரவது அந்த நபரிடம் பேசினால், எதற்கும் பதிலளிக்காமலும், எழுதுவது என்னவென்றால், அதையும் காட்டாமல் மறைப்பதுமாக நாட்கள் ஓடியிருகின்றன.

எழுதுவதையும், கனத்த அமைதியையும் மட்டுமே தனக்கு நெருக்கமாக வைத்திருந்திருக்கிறார். தனது இந்த நிலையிலும் தன்னுடன் ஒரு நாயை வளர்க்கிறார்.

கொஞ்சநாட்களுக்கு பிறகு அவர் மெல்லமெல்ல பேச ஆரம்பித்திருக்கிறார். தனது பெயர் #சுதாகர், சொந்த ஊர் #திருச்சி_துறையூர், என்றும், 2001 ல் வெளியான “ #பார்வை_ஒன்றே_போதுமே” என்ற திரைப்படத்தில் #உதவிஇயக்குனராக பணிபுரிந்ததாகவும் சொல்லியிருக்கிறார்.

உதவி இயக்குனர்களின் வாழ்க்கை என்பது ஆபத்துக்குரிய ஒன்றுதான். சுதாகரின் மனநிலையும், அவர் அந்த நோட்டில் என்னவெல்லாம் எழுதியிருப்பார் என்று சிந்தித்தால், சக உதவி இயக்குனரான என்னையும் பதட்டம் தொற்றிக்கொள்கிறது.

சுதாகரின் நிலையை எங்களால் உணர முடிகிறது. எதுவாகினும் சினிமாவை கடந்து மிகப்பெரிய வாழ்க்கை என்று ஒன்றிருக்கிறது.

சுதாகரின் இந்த நிலைமை என்பது மீண்டு வரக்கூடிய ஒன்றுதான் என்று நம்புகிறோம். இங்கிருக்கும் யாரையும் அவர் நம்பத் தயாராக இல்லை. ஒருவேளை தனது குடும்பத்தாரை கண்டால் மனம் மாறக்கூடும் என்று நம்பி இந்த தகவலினை உங்களோடு பகிர்கிறோம்.

மேலே இருக்கும் விபரங்கள் தவிர வேறெதுவும் அவர் தர மறுக்கிறார். இச்செய்தியை படிக்கும் தோழமைகள் தங்களால் இயன்ற தொடர்புகளை உருவாக்கி தாருங்கள். அது சுதாகரை மிகவிரைவாக மீட்கவும் செய்யலாம்.

ஆயுதங்களுக்காகவும், ஆதாயங்களுக்காகவும் இயங்கிடும் மாய உலகில், சக மனிதர்களின் அன்புத்தேவைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது என்பது சமகால நிதர்சனம். நவீனங்களின் உற்பத்திகளில் வாழ்கையை இயந்திரத்தனமாய் உருமாற்றி உருக்குலைந்து கிடக்கிறோம். வாஞ்சையான அன்புகளும், அரவணைப்புகளும் நம்மைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டன.

அதற்கு ஈடாய், அதைவிட பன்மடங்கு வன்மங்களும், வக்கிரங்களும் நம்மை சூழ்ந்துவிட்டன. ஆட்டோவில், டாக்சிக்களில், மனிதர்கள் கூடுமிடங்களில், அலுவலகங்களில், என்று எங்குமே யாரும் யாருடனும் பேசிக்கொள்வது கூட இல்லை.

நம்மிடம் இருக்கும் அன்பு, பாசம், நேசம், அக்கறைப்படுதல் என எல்லாவற்றையும் தராமல் மறைக்கிறோம், அல்லது மறுக்கிறோம். சக மனிதர்களிடம் உரையாடினாலே சுதாகர்கள் உற்பத்தியாக மாட்டார்கள். இருட்டுகளை உருவாக்குபவர்கள் யாராகினும், வெளிச்சம் பாய்ச்சுபவர்கள் நாமாக இருப்போம்…”

சுதாகரை அவர் குடும்பத்தோடு சேர்த்துவிட விரும்பும் தேநீர்கடை தோழர் இளையராஜாவை தொடர்புகொள்ள – 9790812895