யோகி பாபுவுக்கு ரசிகர்களிடம் இருக்கும் வரவேற்பை வைத்து அவரை ஹீரோவாக்கும் முயற்சியில் அமைந்த இரண்டாவது படம். அவரது பலம் காமெடி என்பதால் அதை விட்டு விலகாமலும் ரொம்ப அலட்டிக்கொள்ளாமலும் சாம் ஆண்டன் படத்தை இயக்கியிருக்கிறார்.
போலீஸாகும் கனவுடன் இருக்கும் யோகிபாபுவுக்கு அவரது சிறப்புத் தகுதி (!) களால் வேலை கிடைக்காமல் போக, அவரை தகுதித் தேர்வு செய்த காவல் அதிகாரி ரவி மரியாவிடம் “ஒருநாள் உங்களையெல்லாம் என் உதவியை நாடி வரவழைக்கிறேன்..!” என்று சபதம் இட்டுச் செல்கிறார். அது முடிந்ததா என்பது கதை. எப்படி முடிந்தது என்பது விடை.
போலீஸ் கனவு பொல்லாப்பாகிப் போன யோகி பாபு குலத் தொழிலான கூர்கா வேலைக்குப் போகிறார். குலத் தொழில்..? ஆமாம். அவரது தாத்தா ஒரு ஒரிஜினல் கூர்கா. தமிழச்சியான பாட்டியை மணந்து அதன் வழிப் பிறந்தவர்தான் யோகிபாபு என்று ஒரு கதை சொல்கிறார்கள். அப்படி ஒரு மாலில் அவரும், அவரது சகாவான சார்லியும் காவல் காத்துவர, ஒரு தீவிரவாதக் கும்பலின் பிணையில் சிக்கிக் கொன்ட அந்த மாலில் இருந்து பொதுமக்களை எப்படி மீட்கிறார் யோகிபாபு என்பது மீதிக் கதை.
யோகிபாபுதான் ஹீரோ என்பதால் படம் முழுவதும் அவரே வந்து சளைக்காமல் தன் பாணியில் எகத்தாள வசனம் பேசி நடிக்கிறார். பல இடங்களில் அது கவர்கிறது. சில இடங்களில் பிசிறடிக்கிறது. ஆனாலும், அவர் அலட்டிக் கொள்ளாமல் செய்யும் அலப்பறைகள், குடும்பங்களை குறிப்பாக குழந்தைகளை மகிழ்விக்கும் என்பது உண்மை.
யோகிபாபுவுக்கு ஜோடி யாரும் கிடையாது என்பது எதிர்பார்க்கக் கூடியதே. ஆனாலும், அவர் ஒரு அமெரிக்க தூதரக அதிகாரியாக வரும் பெண்மணி மீது காதல் கொள்கிறார். ஏணி அல்ல ஏரோப்ளேன் வைத்தாலும் இருவரின் தகுதிக்கும் எட்டாது என்றிருக்க, தீவிரவாதிகளிடம் சிக்கிக் கொண்ட பணயக் கைதிகளில் அந்த அமெரிக்க அதிகாரியும் இருக்க, அவருக்காகவே களம் இறங்குகிறார் யோகிபாபு.
அமெரிக்க அழகியான எலிஸா பார்வைக்குக் குளிர்ச்சியளிக்கிறார். கிளைமாக்ஸில் யோகிபாபு இறந்துவிட்டதாகத் தெரிய வர, கண்கலங்குவதில் நடிக்கவும் செய்கிறார்.
முழுநீளக் காமெடிப் படம் என்று முடிவு செய்துவிட்டபடியால் யோகிபாபுவுடன் சார்லி, ரவிமரியா, மனோபாலா, மயில்சாமி, நமோ நாராயணன், ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன், டிஎம். கார்த்திக் என்று குட்டியானை கொள்ளாத அளவுக்கு நகைச்சுவை நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். அதில் மயில்சாமியும், சார்லியும் இடம்பெறும் நகைச்சுவை எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும்.
இப்பொதெல்லாம் இதுபோன்ற நகைச்சுவைப் படங்களில் சமகால அரசியலை வைத்து நையாண்டி செய்வது வழக்கமாகி வருகிறது. இதிலும் அப்படி அங்கங்கே சமகால அரசியல்வாதிகளை அடித்துத் துவைக்கிறார்கள்.
வில்லன்களாக முன்னாள் ராணுவ வீரர்களான ராஜ்பரத், ஜேபிஜெய் ஆகியோரைச் சொல்லியிருப்பது நெருடலாக இருந்தாலும் கடைசியில் ஜேய் நல்லவராகவும், ராஜ்பரத் தை ஐஎஸ்ஐஎஸ் கையாளாகவும் காட்டி இந்திய ராணுவத்துக்கு பங்கம் வராமல் காக்கிறார் இயக்குநர்.
கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு படம் நடைபெறும் மாலின் இண்டு இடுக்கெல்லாம் போய் வந்திருக்கிறது. ராஜ் ஆர்யனின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது.
மால் என்று ஓரே இடத்தில் கதை நகர்வதால் ஏற்படும் அலுப்பைத் தவிர்த்திருக்கலாம். அப்படித் தொய்வாகும் இடங்களில் யோகிபாபுவுடன் வரும் நாய் ஒன்று காமெடி செய்து கவர்கிறது.
கூர்கா – யோகிபாபுவுக்கு யோக காலம்..!