“அதென்ன க்ராணி..?” என்று தலைப்பிலேயே அச்சப்பட வேண்டாம். பாட்டி என்பதை ஆங்கிலத்தில் Granny என்று சொல்வார்கள் இல்லையா..? அதுதான் இது..!
வழக்கமாக நாம் அறிந்த பாட்டிகள் எல்லோருமே குழந்தைகள் மீது அன்பு கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் இதில் வரும் க்ராணி ஒரு கிராதகியாக இருக்கிறாள்.
கதை இப்படி போகிறது…
ஐடி துறையில் செய்த வேலை போர் அடித்து போய் தங்களுடைய முன்னோர்கள் வாழ்ந்த காட்டுக்குள் இருக்கும் பழைய அரண்மனை போன்ற பங்களாவில் தங்கி விவசாயத்தை பார்க்க நினைக்கிறார் நாயகன் ஆனந்த் நாக். மனைவி இரண்டு குழந்தைகளுடன் அந்த விசித்திரமான கட்டிடத்தில் குடியேற அந்த கட்டிடத்துக்குள் ஏதோ ஒரு அமானுஷ்யம் இருப்பது புரிகிறது.
அதற்கேற்றாற்போல் அங்கே ஒரு கொடூர கிழவியான வடிவுக்கரசியும் வந்து சேர, ஆரம்பிக்கிறது பயங்கரம்..
பல வருடங்களுக்கு ஒரு முறை அந்த ஊரில் சிறு குழந்தைகள் கொல்லப்படுவதும் அவர்களுடைய இதயம் காணாமல் போவதும் தொடர்கதையாக நடக்கிறது.
இப்போது அங்கு புதிதாக குடியேறியிருக்கும் ஆனந்த் நாக்குக்கும் இரண்டு குழந்தைகள் இருக்க, பயம் பற்றிக்கொள்கிறது.

அந்த பயங்கரங்களுக்கு ஒரு பிளாஷ் பேக் சொல்லப்படுகிறது. காலமெல்லாம் இளமையாக வாழ வேண்டுமென்றால் 30 வருடத்துக்கு ஒரு முறை பூக்கும் ஒரு பூவில் கஷாயம் தயாரித்து ‘இதில் ஒரு குடி குழந்தைகளின் இதயத்தை ஒரு கடி…’ என்று டயட் எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.
அப்படி இளமையாகிறார் கிழவி வடிவுக்கரசியின் கணவன். ஆனால் ஊராருக்கு ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்து அவனை எரித்துக் கொன்று விட அந்த வேலையை மீண்டும் கிழவி செய்ய ஆரம்பிக்கிறாள்
இந்த விஷயங்களை விசாரணையின் மூலம் தெரிந்து கொள்ளும் காவல் அதிகாரி திலீபனும் கான்ஸ்டபிள் சிங்கம் புலியும் அடுத்து நடக்கவிருக்கும் அசம்பாவிதத்தைத் தவிர்க்க முடிந்ததா என்பதுதான் கதை.
வடிவுக்கு அரசி அதாவது அழகுக்கு அரசி என்று பெயர் எடுத்த அவரை இத்தனை கொடூரமான அவலட்சணத்திறகு அரசியாக்க எப்படிதான் இயக்குனருக்கு மனது வந்ததோ?
ஆனால் அந்த மேக்கப் போட்டுக் கொண்டு அதிரி புதிரியாக தியேட்டரை அலற விட்டிருக்கிறார் வடிவுக்கரசி. இரண்டு குழந்தைகளின் இதயம் இருக்கும் பகுதியையும் அவர் தடவி பார்க்கும்போது நம் இதயம் நின்று விடும்போல் இருக்கிறது.
ஆனந்த் நாகும் அவரது மனைவியும் கூட வடிவுக்கரசியின் கொடூரத்திற்கு இறையாகி இறந்து போவது பரிதாபம்.
அட… இன்ஸ்பெக்டராக வரும் திலீபனாவது கிழவியை எதிர்த்து சண்டை போடுவார் என்று பார்த்தால் அவரும் கிழவியிடம் அடிவாங்கி சாய்வது அதிர்ச்சி.
ஏதோ காமெடிக்கு என்று சிங்கம் புலியை படத்துக்குள் சேர்த்து இருக்கிறார்கள் என்று பார்த்தால் அவர்தான் கிளைமாக்ஸை முடித்து வைக்கிறார்.
ஒரு பெரிய மனிதராக வரும் கஜராஜ், சாதி வெறி கொண்டவராக வருவது கதைக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. அப்படி நடந்து கொள்ளும் அவருக்கு எந்த படிப்பினையும் கிடைக்கவில்லை.
சிறப்பு செவித் திறன் கொண்ட குழந்தைகளின் நடிப்பு சிறப்பு.
ஹாரர் படத்துக்கு ஏற்ற ஒளிப்பதிவு செய்துள்ள மணிகண்டனை பாராட்டலாம். கிழவியின் பாயிண்ட் ஆஃப் வியூவுக்கு ஒரு விதமான லென்ஸை போட்டு நம்மை அதிகமாக பயமுறுத்துகிறார்.
சற்று நீளமான காட்சிகள் அலுப்பை ஏற்படுத்தாமல் இருக்க இசையமைப்பாளர் செல்லியா பாண்டியன் நிறையவே உதவுகிறார்.
ஒரு அமானுஷ்ய கதையை அம்புலிமாமா டைப்பில் கொடுக்க நினைத்த இயக்குனர் விஜயகுமாரனின் கற்பனையில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் குழந்தைகளின் இதயத்தை தின்னும் பாட்டி என்பது அதிகபட்சமான கற்பனையாக தோன்றுகிறது.
க்ராணி – ஓ… பாட்டி நல்ல பாட்டிதான்..!
– வேணுஜி