October 15, 2025
  • October 15, 2025
Breaking News
July 16, 2025

கெவி திரைப்பட விமர்சனம்

By 0 343 Views

கொடைக்கானலுக்கு கீழ் சில கிலோமீட்டர் தள்ளி இருக்கும் பகுதிதான் ‘ வெள்ள கெவி’. இங்கு வாழும் பழங்குடியின மக்களை டோலி தூக்க வைத்துதான் வெள்ளைக்காரர்கள் கொடைக்கானலையே கண்டுபிடித்தார்கள் என்ற முத்தாய்ப்புடன் ஆரம்பிக்கிறது படம். 

சரி… அதற்கு என்ன என்கிறீர்களா?

ஆனால், அப்போதிருந்து அந்த கெவி பகுதி மக்களின் வாழ்வாதாரமும், வாழ்வதற்கான வசதிகளும் கற்காலத்திலேயேதான் இருக்கின்றன. 5 வருடங்களுக்கு ஒரு முறை ஓட்டு போட்டு ஒரு எம்எல்ஏ வை தேர்ந்தெடுத்தாலும் இவர்கள் பகுதிக்கு சாலை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட எந்த வசதிகளும் இன்றுவரை கிடைக்கவில்லை என்பதை கண்ணீரும், ரத்தமுமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் தமிழ் தயாளன். 

ஒரு பக்கம் தேர்தல் வருவதையொட்டி  ஆளுங்கட்சி எம்எல்ஏ அந்தப் பகுதிக்கு ஓட்டு கேட்க போலீஸ் சகிதம் வந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் மலையில் மண் சரிந்து ஐந்து பேர் இறக்கிறார்கள்.

இது பற்றி ஊரில் ஓட்டு கேட்க வந்த எம் எல் ஏ விடம் மலையன் என்கிற ஊர்வாசி உரக்கப் பேசி நியாயம் கேட்க, அது எம்எல்ஏவுடன் வந்த காவல் அதிகாரிக்கு எரிச்சலை ஏற்படுத்தி வாய்த் தகராறு முற்றி போலீஸ் அதிகாரியை மலையன் தள்ளிவிடப் போய் அவர் எம்எல்ஏ மீது சரிந்து எம்எல்ஏவுக்கு அடிபடுகிறது. 

அதில் ஏற்பட்ட கைகலப்பில் அந்த போலீஸ் அதிகாரியின் மீது ஒரு செருப்பு வந்து விழ, அதன் காரணமாக கோபம் உச்சத்துக்கு போய் மலையனை கட்டம் கட்டுகிறார். 

அதற்காக சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் மறுநாள் தேர்தல் என்ற நிலையில் எம்எல்ஏவின் சொல்லையும் மீறி மலையனை போலீஸ்காரர்கள் சகிதம் அடித்து நொறுக்கி கொல்லப் பார்க்கிறார் அதிகாரி.

அதே இரவில் மலையனின் நிறைமாத கர்ப்பிணியான மனைவி பிரசவ வலி வந்து துடிக்க… மலையை விட்டு இறங்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றால்தான் அவளும் வயிற்றில் இருக்கும் குழந்தையும் பிழைக்க முடியும் என்கிற நிலையில்…

போலீஸ் பிடியில் சிக்கிய மலையன் உயிர்பிழைத்தானா, அவன் மனைவி குழந்தையை சுகமாக பிரசவித்தாளா..? போன்ற கேள்விகளுக்கு மீதிப் படம் விடை தருகிறது. 

மலையனாக ஆதவனும் அவரது மனைவி மந்தராவாக ஷீலாவும், போலீஸ் அதிகாரியாக சார்லஸ் வினோதும் முக்கிய பாத்திரங்களை ஏற்றிருக்கிறார்கள். 

ஷீலாவையும், வினோதையம் தவிர மற்ற எந்த முகங்களையும் நாம் அடையாளம் காண முடியவில்லை. 

நடிப்பில் வழக்கம் போல் முன் நிற்கிறார் ஷீலா. பிரசவ வலி வந்து அவர் துடிக்கும் துடிப்பில் நமது நாடி நரம்பு எல்லாம் விம்ம ஆரம்பித்து விடுகிறது. அவரது பானை வயிற்றை எப்படித்தான் உருவாக்கினார்களோ தெரியவில்லை. 

“என் உயிர் போனாலும் பரவாயில்லை என் குழந்தையைக் காப்பாற்றுங்கள்..!” என்று கிராமத்தினரிடம் அவர் கெஞ்சும்போது படம் பார்க்கும் நாமே கையறு நிலையில் கையைப் பிசைய வேண்டி இருக்கிறது. ஷீலாவுக்கு இந்தப் படம் விருதுகளைத் தரும்.

அப்படியே மலையனாக நடிக்கும் ஆதவனும் ஒரு அனுபவ நடிகரைப் போல தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். போலீஸிடம் சிக்கி அவர் சின்னா பின்னமாகும் போது நமது இதயம் விட்டு விட்டுத் துடிக்கிறது. 

ஆனால் கடைசியில் அவர் ஹீரோயிஸம் காட்டாமல் இருந்திருக்கலாம். அதுவும் போலீஸ் அடித்த அடிக்கு பாகுபலியே ஆனாலும் செத்திருப்பான் என்கிற நிலையில் அவர் திருப்பி அடிப்பதெல்லாம் நம்புகிற மாதிரி இல்லை.

பெரும்பாலும் சார்லஸ் வினோத் வில்லனாகத்தானே வருவார்..? இதிலும் அப்படியே வந்து ‘அடி பின்னி’ இருக்கிறார். 

எம்எல்ஏவாக வரும் காமன் மேன் கணேஷும்  பொருத்தமான தேர்வு. 

இவர்களைப் போலவே மருத்துவராக வரும் ஜாக்குலின் மற்றும் இனன பிற நடிகர்களும் தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் செய்கிறார்கள்.

ஜெகன் ஜெயசூர்யாவின் ஒளிப்பதிவு வேற எநத செயற்கை ஒளியையும் நம்பாமல் அந்த மலைக்காட்டில் படம் பிடித்து நம்பகத்தன்மையைத் தருகிறது.

பாலசுப்ரமணியன், ராஜா ரவிவர்மாவின் இசையில் வைரமுத்து, யுகபாரதி, வினையனின் பாடல்கள் கருத்துடன் ஒலிக்கின்றன.

ஆனால், அந்த கிராமத்தில் மக்கள், ஒருவர் டார்ச் லைட்டைக் கையில் எடுத்தால் எல்லோரும் டார்ச் லைட்டையே எடுத்துக் கொள்கிறார்கள். ஒருவர் லாந்தர் லைட்டை எடுத்தால் எல்லோரும் லாந்தர் லைட்டை எடுத்துக் கொள்கிறார்கள்.

இதெல்லாம் ஆர்ட் டைரக்டரின் ஏற்பாடு என்பது தெளிவாகத் தெரிகிறது.

அதேபோல் கிராமத்தினரின் அல்லல்களை அளவுக்கு அதிகமாகச் சொல்லி அழ விட்டு இருப்பது போல் தெரிகிறது. வெள்ளைக்காரன் காலத்தில் இருந்து மலையில் வாழ பழக்கப்பட்டவர்கள் ஏதோ நேற்றுதான் அங்கு குடியேறியதை போல் தொட்டதற்கெல்லாம் அழுது மாய்கிறார்கள்.

கெவி வாழ் மக்களை இப்படி கேவிக் கேவி அழ விட்டிருக்க வேண்டாம்.

ஆனாலும் அடித்தட்டு மக்களின் வலியை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து ஆவணப்படுத்தி இருக்கும் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள். 

இது போன்ற படங்களுக்கு அரசு விருதுகள் தருவதை விட்டுவிட்டு உண்மையிலேயே இப்படிப்பட்ட மக்களுக்கு உதவிகள் போய் சேரச் செய்வதுதான் உயரிய செயலாக இருக்கும்.

கெவி – ரொம்ப ஹெவி..!

– வேணுஜி