கேரளத்தை இரட்சிக்க வந்த எம்பிரானாக மோகன்லாலை பாவித்து இந்த படத்தின் முதல் பாகமான லூசிபரை இயக்கிய பிருத்திவிராஜ் சுகுமாரனே இந்த இரண்டாவது பாகத்தையும் இயக்கியிருக்கிறார்.
மதக் கலவரத்துடன் வட மாநிலத்தில் தொடங்குகிறது படம். ஒரு இஸ்லாமியரையும் தப்ப விடாமல் குடும்பம் குடும்பமாகக் கொன்று குவிக்கிறது மத வெறியாளர் கூட்டம். அதனை தலைமை தாங்கி நடத்துகிறார் அபிமன்யு சிங்.
அப்படி கொடூரமாகக் கொல்லப்பட்ட ஒரு குடும்பத்தின் ஒரே வாரிசாக நிற்கும் சிறுவனின் அவலக் குரலுடன் முடிகிறது அந்தப் பகுதி. அதற்குப் பின் கேரள அரசியலுக்கு வந்து விடுகிறது படம்.
கடந்த பாகத்தில் கேரள அரசியல் கட்சிகள் இடையே அதிகாரத்தைக் கைப்பற்ற எல்லா வழிகளிலும் முயற்சிக்கும் முரணைத் தடுத்து நிறுத்த, தன் காட் ஃபாதர் ஆன … மரணித்த நிலையில் அவரது மகனான டோவினோ தாமசை முதல்வர் ஆக்கினார் மோகன்லால்.
ஆனால் இந்த பாகத்தில் சர்வாதிகாரியாக நடந்து கொள்ளும் டோவினோ தன் ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு மேற்படி மதவெறிக் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஒரு புதிய கட்சியைத் தோற்றுவிக்கிறார் இதன் மூலம் கேரளத்திலும் மாபெரும் மதப் பிரச்சினை உருவாக கூடும் என்று கணிக்கும் பத்திரிகையாளர் இந்திரஜித் சுகுமாரன் வெளிநாட்டில் நிழல் உலக மாபியாக்களை சுளுக்கெடுத்துக் கொண்டிருக்கும் மோகன்லாலை உடனடியாக கேரளத்துக்கு வரவழைக்க அவரைத் தேடி புறப்படுகிறார்.
கிட்டத்தட்ட இந்தியன் 2 டைப்பிலான கதை தான்.
வெளி உலகுக்கு குரோஷி ஆபிராம் என்ற பெயரில் சர்வதேச தாதாக்களே நடுநடுங்கும் சாத்தானாக இருந்து வரும் மோகன்லால், கேரளத்துக்கு மட்டும் ஸ்டீபன் நெடும்பள்ளி என்கிற எம்புரான் முகத்துடன் தோன்றுகிறார்.
கேரளத்துக்கு மீண்டும் வரும் அவர் என்ன விதமான மாற்றங்களைத் தருகிறார் என்பதுதான் இந்த லூசிபர் இரண்டாம் பாகத்தின் கதை.
இரண்டு முகங்கள் இருந்தாலும் இரண்டிலும் மோகன்லாலுக்கு சொல்லிக் கொள்ளும்படியான நடிப்புக்கு வாய்ப்பில்லை. காரணம் அவரை ஒரு இறை தூதர்… அல்ல… அல்ல… ஒரு இறைவனாகவே பிருத்விராஜ் நம்பிவிட்டதால் கண்ணசைவு, ஓரப் பார்வை இவற்றோடு முடித்துக் கொள்கிறார் லாலேட்டன். கிட்டத்தட்ட ஒரு ரோபோ போலவே வந்து போகிறார்.
சர்வதேச மாபியா சந்தைக்கு கோட்டு சூட்டும், உள்ளூர் பிரச்சனைக்கு வேட்டியும் மட்டுமே அவரை வேறுபடுத்திக் காட்டுகின்றன. அவர் திரைக்குள் வரும் ஒவ்வொரு காட்சியையும் ஹை ஸ்பீடில் காட்டி, தீம் மியூசிக் இசைப்பது ஒரு கட்டத்தில் போதும் போதும் என்றாகி விடுகிறது.
குண்டுவெடிப்பில் அவர் இறந்து போவதாக உலகமே நம்பும் காட்சியுடன் இடைவேளை விடப்படுகிறது. ஆனால் அவர் இறந்து விட்டார் என்பதை ஒரு எல்கேஜி குழந்தை கூட நம்பாது.
மற்றபடி கேரள முதல்வராக வரும் டோவினோ தாமஸ் நடிப்பு அற்புதமாக இருக்கிறது. நல்லவர் என்றாலும் அவர் பார்க்கும் பார்வை சரியாக இருக்கிறது – கெட்டவர் என்றாலும் அதே பார்வையில் வேறுபடுத்திக் காட்டி விடுகிறார்.
மதவெறித் தலைவராக வரும் அபிமன்யு சிங் ஒரு சதவீதம் கூட நல்லவராக இருக்க வாய்ப்பே இல்லை என்ற அளவில் நடித்திருக்கிறார். அவர் உண்மையில் எப்படிப்பட்டவரோ தெரியவில்லை, பாவம்..!
அவரது உருவமாவது பயப்பட வைக்கும் அளவில் இருக்கிறது. ஆனால் அவரது அல்லக் கையாக செயல்படும் முன்னா என்கிற பாத்திரத்தில் வருபவர், அந்தச் சின்ன உருவத்திற்குள் எவ்வளவு டெரர் காட்டுகிறார்..? அந்தப் பார்வையே பயமுறுத்துகிறது.
டோவினோவின் தங்கையாகவும் மீண்டும் கேரளத்தில் நல்லாட்சி வளர வேண்டும் என்கிற எண்ணத்துடனும் அரசியல் களம் புகும் மஞ்சுவாரியரின் பாத்திரம் ரசிக்க வைக்கிறது. அவரையும் இக்கட்டில் இருந்து காப்பாற்றிக் கை தூக்கி அவரது அரசியல் தலைமைக்கான அடிப்படையை ஏற்படுத்திக் கொடுக்கிறார் மோகன்லால்.
அடுத்த பாகம் வந்தால்தான் மஞ்சு வாரியார் என்ன செய்யப் போகிறார் என்பது தெரியும்.
இவர்களுடன் கிஷோர், சுராஜ் வெஞ்சரமூடு என்று ஏகப்பட்ட பாத்திரங்களும் நடித்திருக்கிறார்கள். எல்லோரும் நடிக்கத் தெரிந்தவர்கள் என்பதால் எந்த பிசிறும் எங்கும் இல்லை.
சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவில் இதை ஒரு இந்திய படம் என்று சொல்லவே முடியாது. குறிப்பாக ஆப்பிரிக்க பாலைவனத்தில் ஆரோகணித்து வரும் வண்டிகளை மூன்று ஹெலிகாப்டர்கள் வந்து தாக்கும் காட்சி அபாரம்.
ஆனால், இசையமைப்பாளர் தீபக் தேவ்தான் காட்சிக்குக் காட்சி ஆம்ப்ளிபையர்களை அலறவிட்டிருக்கிறார். மூன்று மணி நேரமும் காதுகளுக்குள் கூட்ஸ் வண்டி ஓடிக்கொண்டே இருக்கிறது.
படத்தை பிரம்மாண்டமாகப் படைத்திருக்கும் செய் நேர்த்தியில் இது ஒரு மலையாளப் படம் என்று சொல்லவே முடியாது – ஆனால் மிகச்சிறந்த திரைக்கதைகளை உருவாக்கும் மலையாளப் படங்களில் இருந்து வேறுபட்டு தட்டையான லைன் கொண்ட இந்தப் படம் அந்த வகையிலும் ஒரு மலையாளப் படம் என்று நம்ப முடியாத அளவிலேயே இருக்கிறது.
வெற்றிக்கு இந்த மாஸ் பிரம்மாண்டம் மட்டுமே போதும் என்று நினைத்திருக்கிறார் பிரித்விராஜ்.
அந்த எண்ணம் மெய்ப்பட்டால் எம்புரானும் ஒரு வெற்றிப் படம்தான்..!
– வேணுஜி