இந்த ஆன்மாக்களின் சீசனில் இது வேறு வகையான ஆன்மா கதை மட்டுமல்லாமல் காதலிலும் புதுவழி கண்ட படம் என்று சொல்லலாம். அப்படியொரு நூல் பிடித்து இந்தப்படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா பாண்டி.
டாக்டராக வரும் ரெஜித் மேனனுக்கு ஒரு வினோதமான கனவு தொடர்ந்து வருகிறது. அதையறியும்போழுது அவரைக் காதலிக்கும் ராதிகா ப்ரீத்தி பற்றித் தெரிய வருகிறது. அவர்களின் காதலைச் சேர்த்து வைக்க ராதிகாவின் இறந்து போன் தாத்தா மௌலியின் ஆன்மா செய்யும் லீலைகள்தான் அந்தக் கனவு மேட்டர் என்பதும் புரிய அந்தக் காதல் என்ன ஆனது என்பது கிளைமாக்ஸ்.
இயக்குநர் விக்ரமன் படத்தில் அறிமுகமான ரெஜித் மேனனுக்கு இது தமிழைப் பொறுத்தவரை இரண்டாவது படம். மருத்துவராக வரும் அவரது நடிப்பு திருப்தியாக இருக்கிறது. ஆனால், வசன உச்சரிப்பில்தான் தமிழ் கொஞ்சம் தடுமாறுகிறது. தமிழில் தொடர அவருக்குத் தேவை சரளமான தமிழ் உச்சரிப்பு.
ராதிகா ப்ரீத்திதான் படத்தின் உயிர்நாடி. இதுவரை பெரும்பாலான சினிமாக்களில் ஹீரோயினை உருகி உருகி ஹீரோ காதலிப்பதை மாற்றி ஹீரோவைத் துரத்தும் காதலியாக ராதிகா வருவது மாற்றமாகவும், புதியதாகவும் இருக்கிறது. அழகு தேவதையாக அவர் தோற்றமளிப்பதில் ஒளிப்பதிவாளர் புகழேந்திக்கு பெரும்பங்கு இருக்கிறது. ராதிகாவின் கண்களைக் காதலித்து படமாக்கியிருக்கிறார் அவர்.
சின்ன கேரக்டர் என்றாலும் மௌலி மனத்தில் நிறைகிறார். தன் குடும்பத்துப் பிள்ளைகள் மேல் பெரியவர்களுக்கு எத்தனை அக்கறை உள்ளது என்பதை அவரது கேரக்டர் உணர்த்துகிறது.
பிரசன்னாவின் பின்னாணி இசை அளவுக்குப் பாடல்கள் இல்லை என்றாலும் “நீ தோன்றும்….” பாடலில் அடையாளம் தெரிகிறார்.
புதிய கதை, சிறிய களம் என்றாலும் காட்சிகளில் இன்னும் சுவாரஸ்யம் கூட்டியிருந்தால் இன்னும் ரசிக்க வைத்திருக்கும். ஒன்று போலவே மீண்டும் வரும் காட்சிகளால் ஏற்படும் சோர்வை சரிக்கட்டியிருக்கவும் முடியும்.
என்றாலும், இன்றைக்குக் காதல் என்றாலே அரைகுறை ஆடைகள், லிப்லாக் முத்தங்கள், இரட்டை அர்த்த வசனங்கள் மலிந்து விட்ட சினிமாவில் இத்தனை டீசண்டாக ஒரு படத்தைக் கொடுத்த கிருஷ்ணா பாண்டியைப் பாராட்டலாம்.
எம்பிரான் – காதலின் ஆன்மா..!