சென்னையிலிருந்து சேலத்துக்கு பசுமை வழிச்சாலையாக எட்டுவழிச்சாலை அமைக்க அரசால் தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு எதிராக விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக எதிர்ப்புகளைக் காட்டி வருகின்றனர்.
ஆனாலும், நிலம் கையகப்படுத்தும் பணிகளும், கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு கற்கள் நடும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், சேலம் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதிலிருந்து…
“சென்னை – சேலம் விரைவு சாலைக்காக பெரும்பான்மையான விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களைக் கொடுக்கின்றனர். நூறு பேரில் ஐந்தாறு பேர் மட்டுமே நிலம் கொடுக்க மறுக்கின்றனர். வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அதற்கான சாலையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது அரசின் கடமை.
கையகப்படுத்தும் நிலத்துக்கு முந்தைய காலங்களை விட அதிக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்கமும் தொழில்வளம் பெருக வாய்ப்புள்ளதால் நடைபெறுகிறது. இதற்காக ஏற்கனவே நிலம் எடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் என்பது பொதுவானது. அதன் தீர்ப்பை யாரும் விமர்சிக்க உரிமை இல்லை. சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்கள் கைது செய்யப்படுகின்றனர்..!”