சமையல் எரிவாயுவின் விலை அதிகபட்சமாக உயர்த்தப்பட்ட தற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது….
“சமையல் எரிவாயு ஒரு உருளையின் விலை மீண்டும் ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் எரிவாயுவின் விலை மூன்றாவது முறையாக உயர்ந்திருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விலை உயர்வு நியாயமல்ல.
சமையல் எரிவாயு விலை கடந்த 21 நாட்களில் மட்டும் ரூ.100 உயர்ந்திருக்கிறது. கடந்த 4-ந்தேதி சமையல் எரிவாயு விலை உருளைக்கு ரூ.25 உயர்த்தப்பட்டது. அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து விலகும் முன்பே கடந்த 15-ந்தேதி சமையல் எரிவாயு உருளை விலை மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று முதல் சமையல் எரிவாயு விலை மூன்றாவதாக ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் சமையல் எரிவாயு விலை உருளைக்கு ரூ.810 ஆக உயர்ந்திருக்கிறது.
இன்றைய நிலவரப்படி மானியத்துடன் கூடிய எரிவாயு உருளையின் விலையும், மானியமில்லாத எரிவாயு உருளை விலையும் ரூ. 810 என்ற ஒரே விலையில் விற்கப்படுவதால் எரிவாயு உருளைக்கான மானியம் நிறுத்தப்பட்டு விட்டதாக தெரிகிறது.
வாடிக்கையாளர்கள் இனி உருளைக்கு ரூ.810 செலுத்த வேண்டும். அவர்களுக்கு இனிமேல் எந்த மானியமும் கிடைக்காது.
இந்த விலை உயர்வை மக்களால் தாங்க முடியாது. எனவே சமையல் எரிவாயுவுக்கான அடிப்படை விலையாக ரூ.500 நிர்ணயித்து மீதமுள்ள தொகை முழுவதையும் மானியமாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…”