இப்போதுதான் ரஜினியின் ‘தர்பார்’ ஆரம்பித்தது போலிருக்கிறது. ஆனால், படம் 2020 ஜனவரி 8-ம் தேதி அமெரிக்காவில் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்டு, 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க ரஜினி நடிப்பில் வெளியாவதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய நிலையில் படத்தை உருவாக்கியவரான ஏ.ஆர்.முருகதாஸிடமே ‘தர்பார்’ உருவான விதத்தைக் கேட்டோம்… அதற்கு அவரது பதில்…
“ரஜினிக்கு நான் படம் இயக்க ஒத்துக்கொண்டது இன்றல்ல… ரமணா படம் முடிந்ததுமே “எனக்கு ஒரு கதை சொல்லுங்கள்…” என்றார் ரஜினி. அது அப்படியே தள்ளிப்போனது. அதற்குப்பின் நான் ‘கஜினி’ ஒத்துக்கொள்ள, பிறகு இந்திக்குப் போக, அவர் எந்திரன், 2.ஓ என்று கமிட்டாக அந்தத் திட்டம் அப்படியே தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. அது சமீபத்தில்தான் முடிவுக்கு வந்தது.
ரஜினியைப் பொறுத்தவரை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அவர் என்னைக் கூப்பிட்டுக் கதை கேட்டார் என்பதாலேயே அந்தப் படம் முடிவாகி விட்டதாக அர்த்தமில்லை. என்னிடம் கேட்டது போலவே இன்னும் சில பேரிடமும் கேட்டிருப்பார். அதில் எதைச் செய்வது என்று அவர்தான் முடிவெடுப்பார். அப்போதுதான் யார் இயக்குநர் என்று முடிவாகும்.
அப்படித்தான் ‘தர்பாரு’ம் முடிவானது. இந்தக் கதையை அவர் ஒத்துக்கொண்டதற்குக் காரணம் ‘மூன்று முகத்’திற்குப் பின் அவர் சீரியஸான போலீஸ் கதை எதுவும் செய்யவில்லை. அதனால் ஒரு இடைவெளிக்குப் பின்பு அப்படி ஒரு கதை சொன்னதால் அவர் ஒத்துக்கொண்டார்.
இந்தக் கதைக்கு முன்னால் ‘சந்திரமுகி 2’ செய்யலாம் என்று ஒரு ஐடியா சொன்னேன். அவரும் உற்சாகமானார். ஆனால், அதைச் செய்வதில் நிறைய அனுமதி பெற வேண்டியிருந்தது. முந்தைய படம் எடுத்த ‘சிவாஜி பிலிம்ஸ்’ மற்றும் இயக்குநர் வாசு எல்லோரிடமும் இது குறித்துப் பேச வேண்டியிருந்தது. அதை நானே பொறுப்பேற்றுக்கொள்ள ரஜினி சொன்னார். ஆனால், அது நீண்ட வேலை என்பதால் இந்தக் கதையைச் சொல்ல, அவர் ஒத்துக்கொண்டார்.
இடையில் அவரை ‘தாதா’வாக, வில்லனிக் ஹீரோவாக, எந்திர மனிதனாகவெல்லாம் பார்த்ததில் இருந்து இந்தக் கேரக்டர் முற்றிலும் புதிதாக இருக்கும்.
இந்தி, தெலுங்கிலும் அவருக்கு மிகப்பெரிய மார்க்கெட் இருப்பதால் மூன்று மொழி ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் பிரமாண்டமான சூப்பர் ஸ்டாரின் ஆக்ஷன் படமாக ‘தர்பார்’ இருக்கும்..!”