November 21, 2024
  • November 21, 2024
Breaking News
November 19, 2020

தமிழகத்தில் கொரோனா குறைந்தது குடிநீர் தட்டுப்பாடு தீர்ந்தது – முதல்வர்

By 0 628 Views

சேலம் மாவட்டம் வனவாசி அரசு பல்வகை தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெறும் 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்தில் பயன்பெறும் ஏரிகளை புனரமைத்து மேம்படுத்தும் பணிகள் மற்றும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, வனவாசி அரசு பலவகை தொழில் நுட்ப கல்லூரி விடுதி கட்டிடங்கள் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.123.53 கோடி மதிப்பீட்டில் 86 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.118.93 கோடி மதிப்பீட்டில் 44 புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். பின்னர் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டால் அரசுப்பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர். தமிழக அரசின் நடவடிக்கையால் ஏழை, எளிய மாணவர்கள் டாக்டர் ஆக உள்ளனர். நான் முதலமைச்சரான பிறகு தமிழகத்திற்கு கூடுதலாக சுமார் 1900 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைத்துள்ளன.

தமிழக அரசு மீது ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்ற முனைப்பில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன. எதிர்க்கட்சிகள் மக்கள் நலனோடு செயல்பட வேண்டும்; அரசியலோடு செயல்படக்கூடாது.

கொரோனா தொற்று மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டதால் குடிநீர் பிரச்சனை தீர்ந்துள்ளது. காவிரி டெல்டாவில் சுமார் 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.