ஜெயம் ரவி நடிப்பில் நாளை மறுநாள் சுதந்திர தினத்தன்று வெளியாகும் ‘கோமாளி’ படம் குறிப்பட்டபடி வெளியாகுமா என்ற அளவில் திடீர்ப் பிரச்சினைகள் முளைத்தன.
ஒன்று படத்தை வெளியிடும் நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட ஒரு படத்தின் நஷ்ட ஈட்டைத் தந்தால்தான் திருச்சியில் இந்தப்படத்தை வெளியிடுவோம் என்று திருச்சியைச் சேர்ந்த வினியோகஸ்தர்கள் சிலர் போர்க்கொடி தூக்க, அந்த விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்தின் பார்வைக்கு வந்து பிரச்சினையைத் தீர்க்க பேச்சு வார்த்தைகள் நடந்து வந்தன.
இன்னொரு பக்கம் படத்தின் கதை தன்னுடையது என்று நடிகர்/இயக்குநர் பார்த்திபனின் உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் கதாசிரியர் சங்கத்தில் முறையிட அதை விசாரித்த கே.பாக்யராஜ் அதை உறுதி செய்தார்.
இந்த இரண்டு பிரச்சினைகளும் கோமாளி வெளியீட்டை கேள்விக்குறியாக்கிய நிலையில், முதல் பிரச்சினைக்கு தங்கள் உடன்பாட்டுக்கு ஒத்துவராதிருந்தால் திருச்சி விநியோகஸ்தர்களின் மேலான நடவடிக்கையாக தயாரிப்பாளர் சங்கம் இனி தங்கள் படங்களைத் திருச்சியில் திரையிடுவதில்லை என்று முடிவு செய்யுமென்று தெரிகிறது.
இந்த நடவடிக்கையால் நாளை இந்தப் பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கதை விவகாரத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியின் பெயரை படத் தொடக்கத்தில் பதிவிட்டு அவருக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவிப்பதாக படக்குழுவினர் ஒப்புக் கொண்டனர்.
ஆக, படத்தின் பிரச்சினைகள் தீர்ந்து சுதந்திரமாக ஆகஸ்டு 15-ல் கோமாளி படம் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.