November 23, 2024
  • November 23, 2024
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • பாரம்பரிய இசையில் சரித்திரம் படைக்கும் ரமேஷ் வினாயகம் – அருணா சாய்ராம் புகழாரம்
July 18, 2018

பாரம்பரிய இசையில் சரித்திரம் படைக்கும் ரமேஷ் வினாயகம் – அருணா சாய்ராம் புகழாரம்

By 0 1593 Views

தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய இசை அறிந்த இசையமைப்பாளர்களில் ரமேஷ் வினாயகமும் ஒருவர். திரையிசை தாண்டி கர்நாடக இசை எனப்படும் நம் பாரம்பரிய இசையில் நல்ல அனுபவமும், தேர்ச்சியும் பெற்றவர்.

அவர் வெறும் இசையமைப்பாளர் மட்டுமல்லாமல் நல்ல பாடகர் இசை பயிற்றுவிக்கும் ஆசிரியர் மற்றும் ஒரு இசை ஆராய்ச்சியாளர் ஆவார். 
தமிழ் தவிர ஒரு ஹாலிவுட் திரைப்படத்திற்கு (பென் கிங்க்ஸ்லீ நடித்த ‘A Common Man’) இசையமைத்திருக்கும் இவர் இந்திய பாரம்பரிய இசைக்கு notation எனும் இசை வடிவங்களை உருவாக்கி சாதனை படைத்தவர்.

’ராமானுஜன்’ திரைப்படத்திற்கு அவர் அமைத்த இசையை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வெளியீடான The Cambridge Companion to Film Music விவாதித்திருக்கிறது.

இத்தனை பெருமைகளைக் கொண்ட இவர் இப்போது பாரம்பரிய இசைக்கு மகத்தான பங்களிப்பு ஒன்றை நிகழ்த்தவிருக்கிறார்.

Aruna sairam - Ramesh Vinayagam

Aruna sairam – Ramesh Vinayagam

‘கிளாஸ் ஆப் கிளாஸ்’ (CLASS OF CLASS) என்ற மூன்று மணிநேர இசை நிகழ்ச்சியை நிகழ்த்தவிருக்கும் இவர் இந்நிகழ்வில் பாரம்பரிய இசைக்கு திரையிசை வடிவம் கொடுத்த பாபநாசம் சிவன் போல இவரே இயற்றிய கீர்த்தனைகளை முன்னணி கர்நாடக இசைப் பாடகர்கள் ஒரே மேடையில் தோன்றி பாடவிருக்கிறார்கள்

இவ்வருட ‘சங்கீத கலாநிதி’ திருமதி அருணா சாய்ராம், திருமதி நித்யஸ்ரீ மகாதேவன், திரு.சிக்கில் குருசரண், திரு. அபிஷேக் ரகுராம், திரு. உன்னி கிருஷ்ணன், செல்வி ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன், திருமதி காயத்ரி வெங்கட்ராகவன், திருமதி அனுராதா ஸ்ரீராம், திரு ஸ்ரீராம் பரசுராம் மற்றும் திருச்சூர் சகோதரர்கள் ஆகிய 11 கர்நாடக இசை நட்சத்திரங்கள் அந்த நிகழ்ச்சியில் பாடவுள்ளனர்.

அதற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்த முன்னணிப் பாடகர்களில் அருணா சாய்ராம், பாரம்பரிய இசையில் புதிய சரித்திரம் படைக்கவிருப்பதாக ரமேஷ் வினாயகத்தைப் பாராட்டினார். முதன்முதலில் ரமேஷ் வினாயகத்தின் இசையில்தான் தனது ஒலிப்பதிவு நிகழ்ந்ததாக நினைவு கூர்ந்தார் உன்னிகிருஷ்ணன்.

வரும் ஜூலை 28ம் தேதி சென்னை சேத்துப்பட்டு ‘சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் ஹாலில் நிகழவிருக்கிறது இந்த இசை சங்கமம்..!