கதை ஒரே லைன்தான் – ‘நல்லவர்கள் வாழ்வார்கள், கெட்டவர்கள் வீழ்வார்கள்…’ ஆனால், இதைத் திரைக்கதைப் படுத்துவதற்கு இயக்குநர் ராஜன் மாதவ் ரொம்பவே மெனக்கட்டிருக்கிறார். அப்படி என்ன மெனக்கெடல் என்கிறீர்களா..? வாருங்கள்… பார்க்கலாம்.
விதார்த், அஜ்மல், அசோக், நந்தன் லோகநாதன், நிவாஸ் ஆதித்தன், பிளேட் சங்கர், வெற்றி, ஆடுகளம் நரேன், பஞ்சு சுப்பு, அழகம்பெருமாள், ஐசக், செவ்வாளை… ராதிகா ஆப்தே, காயத்ரி, நிவேதிதா, பிரியா பானர்ஜி… உஸ்… அப்பாடா..!
இத்தனைபேரும் படத்தில் வரும் கேரக்டர்கள். அத்தனி பேருக்கும் தனித்தனியாக கதை உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆனால், இவர்கள் அத்தனைப் பேருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினை பணத்தேவை. அது எதற்காக… அந்தத் தேவையை எப்படித் தீர்த்துக் கொள்ள நினைக்கீறார்கள்… அதற்கு என்ன பாடு படுகிறார்கள் என்பதுதான் முழுப்படம்.
அந்தக் கதைகளை சொல்ல ஆரம்பித்தால் தலைசுற்றிவிடும். பெட்டர்… நீங்களே நேரில் போய் படத்தைப் பார்ப்பது. ஆனால், ஒவ்வொருவர் கதையையும் சின்சியராக அணுகியிருப்பதில் ‘ராஜன் மாதவ்’ பலே வேலை பார்த்திருக்கிறார். அவரின் உதவி இயக்குநர்கள் என்ன பாடு பட்டிருப்பார்களோ தெரியவில்லை.
படத்தின் புதுமை என்றால் இது ஒரு ‘ஹைப்பர் லிங்க்’ வகைக் கதை என்பதுதான். இத்தனைக் கேரக்டர்களுக்கும் ஆளுக்கு ஒரு சீன் என்று வைத்துப் பாருங்கள். முதல் பாதிப் படம் முடிந்துவிடும்.
அதனால், ஒவ்வொரு காட்சியிலும் ஒரு புது நபர் அறிமுகமாகிக்கொண்டே இருக்கிறார். அவருக்கு ஒரு கதை சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரு சீனில் ஒருவர் கிராஸ் ஆனால் அவருக்கான கதை ஆரம்பித்துவிடுகிறது.
இடைவேளையில் இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்ற ஒற்றைக் கேள்வியுடன் நிறுத்தி, அதற்கான முடிவு தேடும் நகர்த்தல்களை இரண்டாம் பாதி சொல்கிறது.
நடிக, நடிகையரின் திறமைகளைத் தனித்தனியாக அலசினால் கூட பத்துப் பக்கம் தாண்டிவிடக் கூடிய அபாயம் உண்டு. நமக்குத் தெரிந்த நடிக நடிகையர் தங்கள் அனுபவத்தில் நன்றாக நடித்திருப்பதில் வியப்பில்லை. ஆனால், திரைக்குப் புதியவர்களான பாலியல் தொழிலாளி வேடத்தில் வரும் நிவேதிதாவும், மார ரவுடி பிளேடு சங்கரும் கூட ரசிக்க வைத்திருப்பது இயக்குநரின் ரசனையான வேலை வாங்கும் திறனால்தான் என்பது புரிகிறது.
பத்மேஷின் ஒளிப்பதிவு கதையின் தன்மையைக் கவனமாகக் கடத்துகிறது. சாஜன் மாதவ்வின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கவனிக்க வைக்கின்றன. அந்த ‘பிராவோ’ இடம் பெறும் பாடலும், ஆடலும் இன்னொரு முறை பார்க்கத் தூண்டும் வகை.
குறைகளும் இல்லாமலில்லை. ஆனால், ‘ஹைப்பர் லிங்க்’ வகைக் கதைகளில் அதன் பொருள் உணர்ந்து சீரியஸாக முதலில் முயற்சி செய்யப்பட்ட படம் என்பதில் இந்தப்படம் தனித்து நிற்கிறது.
அதற்காகவே சித்திரம் மீண்டும் பேசியிருப்பதற்கு கைத்தட்டலாம்..!
– வேணுஜி