இந்த சீரியல் கொலை சீசனில் அடுத்து வந்திருக்கும் படம். ஆனால், இதில் ஒரு வித்தியாசம், கொலைகளைத் துப்பறிவது போலீஸ் மட்டுமல்ல.
போலீசை விட புத்திக் கூர்மையுள்ள ஒருவரின் உதவியால் கொலைகாரன் எப்படிப் பிடிபட்டான் என்று சொல்லும் படம்.
அந்த மூளைக்காரானாக நாயகன் வெற்றி. புகழ்பெற்ற காலம்சென்ற கிரைம் எழுத்தாளரின் மகனான அவர், தான் தந்தையைப் பற்றிய ஒரு தொடருக்கான விஷயங்களைப் பகிர சென்னையில் உள்ள பத்திரிகை அலுவலகத்துக்கு மதுரையிலிருந்து வருகிறார்.
அவர் தந்தையைப் பற்றிச் சொல்லச் சொல்ல பத்திரிகை நிருபர் ஷில்பா மஞ்சுநாத் அந்தத் தொடரை எழுதுகிறார்.
அதேசமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தம்பி ராமையாவின் அறிமுகம் கிடைக்க, அவருக்குப் பல வழக்குகளில் தான் கிரைம் மூளையை வைத்து உதவிகள் செய்கிறார்.
அதன் அடிப்படையில் ஒரு இளம்பெண்ணின் கொலையை துப்பறிய சொல்லும் இடத்தில் அது தொடர் கொலையின் ஒரு பகுதி என்பதைக் கண்டுபிடிக்கிறார். அதைத் தொடர்ந்து அந்த சீரியல் கில்லரைக் கண்டுபிடிக்க அவர் புத்திசாலித்தனம் எப்படி உதவியது என்பதை சஸ்பென்ஸ் திரில்லராகத் தந்திருக்கிறார் இயக்குனர் அனீஷ் அஷ்ரப் .
வெற்றி நடித்தால் அது கதையம்சமுள்ள படம் என்பது தெளிவு. ஆனால், அவரது ஒரே மாதிரியான நடிப்பும் மாடுலேஷனும் கொஞ்சம் அலுப்பாகத்தான் இருக்கிறது.
ஆனால், இந்தப் படம் முதல் அவர் ஆக்ஷன் ஹீரோவாக முயற்சி செய்திருக்கிறார்.
இன்ஸ்பெக்டராக வரும் தம்பி ராமையா தான் வழக்கமான அடுக்கு மொழிக் காமெடியில் அங்கங்கே சிரிக்கவும், அங்கங்கே கடுப்பேற்றவும் செய்கிறார்.
அவரது மகளும் அந்த சீரியல் கில்லரிடம் மாட்டியதில் இருந்து குணச்சித்திர நடிப்புக்கு மாறுகிறார். அவருக்கும், மகளுக்குமான உணர்ச்சிபூர்வமான பிளாஷ்பேக் உருக்கம்.
ஷில்பா மஞ்சுநாத்துக்கு பெரிய வேலையில்லை.
பொலி காளை போல கட்டுமஸ்தான உடல் கொண்ட அந்த வில்லன் மிரள வைக்கிறார்.
கொஞ்ச நேரமே வரும் ரெடின் கிங்ஸ்லி கொஞ்சமாக சிரிக்க வைக்கிறார்.
அரவிந்த் ஒளிப்பதிவு இதம். ஏஜிஆரின் இசை பதம்.
ஆனால், ஒரு காவல்துறை அதிகாரி தன் வழக்குகளில் எல்லாம் இன்னொருவன் மூளைப்படி செயல்படுவதும், எல்லா சமயங்களிலும் அவன் வாயையே பார்த்துக் கொண்டிருப்பதும்… “பாவம் போலீஸ்..!” என்று சொல்ல வைக்கிறது.
அதேபோல் சீரியல் கில்லரைப் பிடித்தாதும் கதை மாறி வேறு ரூட் எடுப்பதால் கதையின் நோக்கம் குழப்பம் அடைந்து இன்னொரு படம் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது – இரண்டையும் தொடர்பு படுத்தினாலும்.
முதல் பக்கம் – பாவத்தின் சம்பளம்..!
– வேணுஜி