மூன்று தலைமுறையாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து சேவை செய்த குடும்பம் விஷால் உடையது. விஷாலும் இப்போது ராணுவத்தில் இருக்க அவரது தந்தையின் சேவைக்காக அவருக்கு சக்ரா விருது வழங்கப்பட்டிருக்கிறது.
இது ஒருபுறமிருக்க சென்னையில் சுதந்திர தினத்தன்று 50 வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்ட அதில் விஷால் வீடும் ஒன்று.
போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் சுதந்திர தினம் என்பதால் போலீசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த காரணத்தால் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பித்து விடுகின்றனர்.
கொள்ளையர்கள் தாக்கியதில் விஷாலின் பாட்டி கே ஆர் விஜயா மயக்கமடைந்து விடுகிறார். விஷயம் அறியும் விஷால், ஊருக்கு விரைகிறார்.
விஷாலின் காதலியும், போலீஸ் உயர் அதிகாரியுமான நாயகி ஷ்ரத்தா இந்த கொள்ளை வழக்கை விசாரிக்கிறார். தன் தந்தையின் சக்ரா விருதை திரும்ப பெறும் முயற்சியில் விஷால், அவருக்கு உறுதுணையாக இருக்க, அவர்கள் எப்படி கொள்ளையர்களை பிடித்தார்கள் என்பது மீதிக்கதை.
ராணுவ அதிகாரியாக வரும் விஷாலுக்கு அவரது மிடுக்கான உடற்கட்டு பொருத்தமாக இருக்கிறது. அத்துடன் அதிரடி ஆக்ஷன் நடிப்பில் மிரட்டி இருக்கிறார். அவருக்கு ஈடான உடற்கட்டுடன் நாயகி சுரதா காட்சியளித்தாலும் அவர்களுக்கிடயேயான ரசிக்கத்தக்க காதல் காட்சிகள் இல்லாதது ஒரு குறைதான்.
நாயகி ஷ்ரத்தா போலீஸ் அதிகாரியாக வந்து கவனிக்க வைப்பதுடன் ஆக்ஷன் காட்சிகளிலும் அடடே போட வைக்கிறார். ஆனால் அவரது புத்திசாலித்தனத்திற்கு படத்தில் காட்சிகள் இல்லை.
படத்தின் இன்னொரு முக்கிய கதாபாத்திரம் ரெஜினா. இப்படி ஒரு கேரக்டரில் நடிப்பதற்கு அவருக்கு துணிச்சல் அதிகம் தான். மாஸ்டர் விஜய் சேதுபதியை நினைக்க வைக்கும் அவருடைய கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது.
இவர்களுடன் கே.ஆர்.விஜயா, மனோபாலா, ரோபோ சங்கர் வந்து போகிறார்கள். மிகவும் சிறிய ஒரு பாத்திரத்தில் சிருஷ்டி டாங்கே வருகிறார்.
அறிமுக இயக்குனர் எம்.எஸ்.ஆனந்த், வெளியீட்டுக்கு முன்பே இந்தப் படக் கதை தொடர்பாக ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.
அதை மெய்ப்பிக்கும் விதத்தில் படத்தின் கதை சிறப்பாக அமைந்திருக்கிறது. விருவிருப்பான இயக்கத்தில் படம் நகர்வதே தெரியவில்லை என்றாலும் திரைக்கதையில் இன்னும் சுவாரசியம் மற்றும் லாட்ஜ்கள் சேர்த்திருந்தால் மிகச் சறந்த படமாக இருந்திருக்கும் .
யுவனின் பின்னணி இசையும், பாலசுப்ரமணியம்மின் ஒளிப்பதிவும் படத்தின் தரத்தை கூட்டி இருக்கின்றன. சண்டைக் காட்சிகள் சிறப்பாக அமைந்திருப்பதால் இந்த ஆக்ஷன் படத்துக்கு வலு சேர்க்கிறது.
முழுக்க காவல்துறையின் களமாக திரைக்கதை சென்றாலும் அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக சில காட்சிகள் இருந்திருக்கலாம். எல்லா விஷயத்தையும் ராணுவ அதிகாரியான விஷாலே கண்டுபிடிப்பது வழக்கமான ஹீரோயிச கதையாக அமைந்து விடுகிறது.
நாட்டுப்பற்று மிக்க இந்தக்கதை அர்ஜூனின் கைக்கு போகாதது ஆச்சரியம்தான்.
சக்ரா – சல்யூட்..!
Related