தடையை மீறி தமிழ்நாட்டில் குட்கா முதலான போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இதன் பொருட்டு உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட தி.மு.க. சார்பில் கோரப்பட்டதை அடுத்து ஐகோர்ட்டு கடந்த ஏப்ரல் மாதம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ. அதிகாரிகள் ஜூன் மாதம் விசாரணையைத் தொடங்கினார்கள். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள குட்கா வியாபாரி மாதவராவிடம் விசாரணை நடத்தி அவரது குட்கா குடோனுக்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பிவி ரமணா மற்றும் காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகள், பினாமிகள் வீடுகளிலும் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.