November 22, 2024
  • November 22, 2024
Breaking News
May 30, 2024

புஜ்ஜி அட் அனுப்பட்டி திரைப்பட விமர்சனம்

By 0 415 Views

தெருவுக்குத் தெரு சிக்கன், மட்டன் பிரியாணி கடைகள் பெருகிவரும் இந்தக் காலகட்டத்தில் கோலிவுட்காரர்களுக்கு மட்டும் கோழி, ஆடுகளின் மேல் புதிதாகக் கரிசனம் வந்திருக்கிறது. 

இதில் பாராட்டப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் எடுப்பது இதன் மூலம் பெருகி இருப்பதுதான்.

இப்படி சைவம், கிடா போன்ற ஜீவகாருண்யப் படங்களின் வரிசையில் இணைந்திருக்கிறது இந்த ‘ புஜ்ஜி அட் அனுப்பட்டி ‘

புஜ்ஜி என்று பெயரிட்டு ஒரு ஆட்டுக்குட்டியை செல்லமாக வளர்த்து வருகிறார்கள் சிறுமி பிரணிதியும் அவளது அண்ணன் கார்த்திக் விஜய்யும்.

ஆனால் அவர்களது குடிகார அப்பா குடிப்பதற்குக் காசு இல்லாமல் போகும் வேளையில் தன் குழந்தைகள் வளர்க்கும் புஜ்ஜியை விற்று விடுகிறார்.

பரிதவித்துப் போய்விடும் குழந்தைகள்  புஜ்ஜியைக் கண்டுபிடிக்க ஊர் ஊராக அலை (பாய்)கிறார்கள். புஜ்ஜியை அவர்கள் கண்டுபிடிக்க முடிந்ததா என்பது மீதிக் கதை.

சிறுமி பிரணிதியும், கார்த்திக் விஜய்யும் உண்மையிலேயே அந்த ஆட்டுக்குட்டியிடம் பாசமாய் பழகினார்கள் போல. புஜ்ஜியைப் பிரிந்த அந்த நடிப்பில் அத்தனை உணர்ச்சியைப் பார்க்க முடிகிறது.

புஜ்ஜியைத் தேடும் அவர்களது முயற்சியில் இணையும் அவர்களது அப்பாவின் முதலாளி கமல்குமாரும், லாவண்யா கண்மணியும் கூட மனதில் பதிகிறார்கள். 

காணாமல் போன புஜ்ஜி கிடைத்ததா இல்லையா என்பதுதான் ஒன்லைன் ஆக இருக்க ஆனால் அது மட்டுமே கதை இல்லை –  இதை ரசிகர்கள் ரசிக்கவும் வேண்டும் என்கிற நோக்கத்தில் குழந்தைகளின் தயாள உள்ளம், குழந்தைகள் கடத்தல், காவலர்களின் சின்னப் புத்தி என்றெல்லாம் பல உணர்ச்சிகளின் அடிப்படையில் பரபரப்பைக் கூட்ட முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர் ராம் கந்தசாமி.

அதில் புஜ்ஜி கசாப்பு கடைக்காரரிடம் சென்று சேர்ந்து, அவர் அதை அறுக்க முற்படும் போது நமக்கு பதைபதைப்பு மேலிடுகிறது.

ஒட்டுமொத்தமாக போலீஸ் துரை தவறானவர்கள் கையில் இல்லை, அதில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்கிற உண்மையை காவல்துறை அதிகாரியாக வரும் நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரியின் நேர்மை புரிய வைத்து விடுகிறது..

இவர்களுடன் நாடித்திருக்கும் மற்ற பாத்திரத்தை ஏற்றவர்களும் கூட நியாயமான நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.

அருண்மொழிச் சோழனின் ஒளிப்பதிவும், கார்த்திக் ராஜாவின் இசையும் படத்தின் பலம் எனலாம். ‘புஜ்ஜி புஜ்ஜி என் செல்லத்தங்கம்’ பாடல் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்தால் தான் புஜ்ஜியை மீட்க முடியும் என்கிற நிலையில் குழந்தைகள் மக்களிடம் பணம் வசூலிப்பது கொஞ்சம் லாஜிக் குறையுடன் இருந்தாலும், பணத்தின் அருமையைக் குழந்தைகளுக்கு புரிய வைக்கும் முயற்சியாக இருக்கிறது.

உச்ச ஸ்டார்கள் நடக்கும் படங்களை எந்த லாஜிக்கையும் பார்க்காமல் வெற்றி பெறச் செய்யும் மக்கள் இதுபோன்ற பட்ஜெட்டுக்குள் எடுக்கப்படும் நல்ல படங்களையும் அந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் சினிமா வளம் பெறும். 

புஜ்ஜி – மே விடுமுறையில் குழந்தைகளுக்காக வந்திருக்கும் “மே…” படம்..!