June 18, 2025
  • June 18, 2025
Breaking News
June 21, 2019

விஜய் பிறந்தநாளுக்கு அட்லீ தரும் பரிசுகள்

By 0 1238 Views

விடிந்தால் (ஜூன் 22) விஜய்யின் பிறந்தநாள். அதைக் கொண்டாட விஜய் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் தருணத்தில் இன்று விஜய்யின் தற்போதைய படத்தை இயக்கி வரும் அட்லீ மகத்தான இரண்டு பரிசுகளைக் கொடுத்திருக்கிறார்.

ஒன்று மாலை ஆறு மணிக்கு வெளியானது. அது விஜய் படத்தலைப்பும், முதல் பார்வையும். அடுத்த பரிசு இன்று இரவு 12 மணிக்கு இரண்டாவது லுக்காக வெளியாகவிருக்கிறது.

‘பிகில்’ என்று தலைப்பும், முதல் பார்வையும் வெளியான நிமிடத்திலிருந்தே சமூக வலைதளங்கள் பற்றிக்கொண்டு இதுதான் நம்பர் ஒன் ட்ரெண்டிங்காகியிருக்கிறது.

‘பிகில்’ முதல் பார்வை வெளியான உடனேயே இதில் விஜய்க்கு இரண்டு வேடங்கள் என்று சொல்லாமல் தெரிந்து விட்டது. அதில் ஒன்று சற்றே வயதான வேடமும், இன்னொன்று இளமையான வேடமுமாக இருக்க, அந்த வயதான வேடம் பல ஆச்சரியங்களைக் கிளப்பியுள்ளது.

Bigil Foot Ball Coach Vijay

Bigil Foot Ball Coach Vijay

பயங்கர முரட்டு ஆசாமியாகத் தெரியும் அந்த வேடத்தில் விஜய் இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான வேடமிட்டுள்ளார். முகமெல்லாம் அம்மைத் தழும்புகளுடன் தெரியும் இந்த கெட்டப்பும், மேக்கப்பும் இதுவரை விஜய் எந்தப்படத்திலும் ஏற்காதது. அதில் அவர் மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்யும் நல்லெண்ண ‘தாதா’வாக வருகிறார் என்று தெரிகிறது.

இன்னொரு வேடத்தில் அதற்கு நேர் எதிரான கெட்டப்பில் அநியாயத்துக்கு இளைமையாகத் தெரிகிறார் விஜய். கையில் கால்பந்து. ஆக, அவர் இதில் பெண்கள் கால்பந்தாட்ட பயிற்சியாளராக வருகிறார் என்று ஏற்கனவே வந்த தகவல் உறுதிப்படுகிறது.

கல்பாத்தி எஸ்.அகோரம், அர்ச்சனா அகோரம் தயாரிக்கும் பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, விஷ்ணு ஒளிப்பதிவை மேற்கொண்டிருக்கிறார்.

விஜய்யுடன் படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராப், ரெபா மோனிக்க ஜான், வர்ஷா பொல்லம்மா, இந்துஜா, விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகிபாபு, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். 

அடுத்து நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகவிருக்கும் ‘பிகில்’ இரண்டாவது லுக் என்னென்ன தகவல்களை உள்ள்டக்கி இருக்கிறதோ பார்க்கலாம்..!

Bigil First Look

Bigil First Look