வசதிகள் குறைவான வனப்பகுதியில் வாழும் மக்கள் கல்வியில் சிறந்தாலும் நல்ல நோக்கத்துக்காக நகர்ப்புறம் வரும்போது இங்குள்ள நாகரிகம் அவர்களை எப்படி சிறுமைப்படுத்துகிறது என்பதை தற்கால நிஜ நிகழ்வுகளோடு கதையாக்கி தந்திருக்கிறார் இயக்குனர் விஜயசேகரன்.எஸ்.
தேனிக்கு மேல்… மூணாறுக்கு கீழ்… இருக்கும் சென்ட்ரல் ஸ்டேஷன் என்கிற பகுதியில் பெற்றோர் இல்லாத நிலையில் தங்கை சுவாசிகாவைக் கண்ணும் கருத்துமாக வளர்க்கிறார் அண்ணன் நபி நந்தி.
பாலூட்டும் காலத்திலிருந்து அவர் தங்கையை கண்ணை இமை காப்பது போல் வளர்த்து வருவதை அந்த ஊரே அறிந்து வைத்திருக்கிறது. வளர்கிற பொழுதில் தங்கையைத் தாண்டி இன்னொரு பெண்ணின் மீதும் அன்பு போகிறது அவருக்கு.
அது பதின் பருவக் காதலாக இருக்கும் நிலையில் அந்த ஊரை விட்டு அவள் செல்ல நினைவுப் பரிசினை அவளிடம் கொடுத்து நினைவை மட்டும் பத்திரப்படுத்தி கொள்கிறார் நபி நந்தி.
வளர்ந்த பொழுதில் பள்ளி மேல்நிலைத் தேர்வில் சுவாசிகா மாநிலத்திலேயே முதலாவது மாணவியாக வெற்றி பெற மருத்துவ வசதி இல்லாத தன் கிராமத்துக்கு அதைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் பட்டணத்துக்கு சென்று மருத்துவம் பயில ஆரம்பிக்கிறார்.
நபி நந்தியின் பதின் பருவ காதலி இப்போது பூனம் கவுராக வளர்ந்து நிற்க, அந்தக் காதல் துளிர்க்கும் சாத்தியமும் அதிகரிக்கிறது.
ஆனால் மருத்துவக் கல்லூரியில் நடக்கும் ஒரு குற்றம் ஒன்று இவர்கள் அத்தனை பேரின் வாழ்வையும் புரட்டிப் போடுகிறது. அது என்ன… அவற்றின் முடிவு என்ன என்பதுதான் மீதிக் கதை..!
பட்டணத்துக்கு வந்து சேர்ந்தாலும் ஒரு கிராமத்து மனிதனாகவே நபி நந்தி தோற்றமளிக்கிறார். தங்கை மீதான பாசத்தில் பாசமலரையே மிஞ்சுகிறார். அப்படிப்பட்ட தங்கைக்கு நேர்ந்த அநீதி கண்டு அவர் பொங்குவது நம்ப வைக்கிறது.
எப்படிப்பட்ட வேடம் ஆனலும் அதில் தன்னை எளிதாக பிணைத்துக்கொள்ளும் சுவாசிகா இந்தப் படத்தின் சுவாசமாகவே மாறி இருக்கிறார். கிராமத்தில் சாமி வந்ததாக நம்ப வைத்து குடிகாரனை திருத்துவதில் தொடங்கி, படிக்கும் கல்லூரியில் அநீதி கண்டு பொங்கி வில்லனின் கொடுமைக்கு இலக்காவது வரை சுவாசிகா மலைக்க வைக்கிறார்.
‘ நான் கடவுள்’ படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில்தான் நம்மை அதிகமாக பயமுறுத்துகிறார் மொட்ட ராஜேந்திரன். இப்போதெல்லாம் அவரைப் பார்த்தாலே சிரிப்பு வருகிறது. அதை அப்படியே புரட்டிப் போட்டு அவரைப் பார்த்தாலே பயம் கொள்ள வைக்கிறது இதில் வரும் வேடம்.
சுவாசிகாவை மணக்க விரும்பி வித்தியாசமாக அதை செயல்படுத்தும் சரத், சுவாசிகாவுக்கான நீதிக்காக நபி நந்தியுடன் கைகோர்ப்பது நன்று.
இன்ஸ்பெக்டராக வேல ராமமூர்த்தி, பள்ளித் தலைமை ஆசிரியராக சங்கிலி முருகன், ஒரு சிறிய வேடத்தில் எம் எஸ் பாஸ்கர் வந்து போகிறார்கள்.
படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களில் முதல் பாராட்டு பெறுவது ஒளிப்பதிவாளர் ராஜா. சி சேகர்தான். காண்பதற்கே மூச்சு வாங்கும் அந்தக் கடினமான மலைப்பகுதியில் கேமராவை இங்கும் அங்கும் தூக்கிக் கொண்டு பறந்து இருக்கிறார் மனிதர்.
பட்டணத்துக்கு வந்த பின்பும் அந்த சுவாரஸ்யம் குறையாமல் படமாக்கி இருப்பதில் வெல்டன் ராஜா…!
இரண்டு காட்சிகள் முடிந்தால் ஒரு பாட்டு வந்துவடுகிறது. அந்த அளவுக்கு பாடல்கள் நிறைந்த இந்தப் படத்தில் தன் முத்திரையை பதிக்கிறார் இசை அமைப்பாளர்.
மார்ச்சுவரியில் வைத்து இளம் பெண்களுக்கு நேரும் கொடுமை, எங்கும் நிறைந்திருக்கும் சிசிடிவி மற்றும் செல்போன் கேமராக்களால் நேரும் ஆபத்து, பிணவறையில் பயன்படுத்தும் ஐஸ் கட்டிகளை லோக்கல் கடைகளில் சர்பத்துக்காக விற்கும் கொடுமை என்று நாட்டில் நாம் கேள்விப்பட்ட அனைத்து நிகழ்வுகளையும் இந்தக் கதைக்குள் வைத்திருக்கும் இயக்குனர் விஜய் சேகரன் பாராட்டுக்குரியவர்.
ஆனால் காட்சிகளுக்குள் ஒரு தொடர்பில்லாத தன்மை தொடர்ந்து கொண்டே இருப்பது தெளிவான கதை ஓட்டத்துககு நெருடலாக அமைந்திருக்கிறது. எடுத்துக்கொண்ட எந்த ஒரு விஷயமும் முடிவுக்கு வந்ததாகவே உணரப்படவில்லை.
படத்தின் முடிவு கூட எதிர்பாராத இடத்தில் பட்டென்று முடிந்து இரண்டாவது பாகத்தில் தொடர்வதாக வருகிறது.
அந்த இரண்டாவது பாகத்திலாவது இந்த நெருடல்கள் இல்லாமல் படமாக்கினால் பாராட்டுகள் குவியும்.
போகி – தீமை கண்டு பொங்கல்..!
– வேணுஜி