ஏளனம் செய்தால் எதிர்த்து அடிக்கும் நண்பர்களின் கதை. கபடி விளையாட்டு வீரர்களான அவர்களில் ஷேன் நிகம் மற்றும் சாந்தனுவின் பாத்திரங்கள் வலுவானவை.
அந்த இணக்கமான நட்பு எல்லாம் உள்ளூர் தாதா செல்வராகவனுக்காக கபடி விளையாடு போகும்போது திசை மாறுகிறது. விளையாட்டுக்காக போனவர்கள் பழக்கத்திற்காக வன்முறை பாதைக்கு போக எல்லாமே தலைகீழாகிறது.
கையில் மண் ஒட்டும்வரை இருந்த நட்பு, ரத்தம் ஒட்டியதும் என்ன ஆகிறது என்பது மீதி கதை.
ஷேன் நிஹத்தின் அப்பழுக்கில்லாத நடிப்பு கவர்கிறது. நண்பனின் வார்த்தைக்காக அவன் பின்னால் நடக்கும் போது ஆகட்டும், காதலியை கண்ட மாத்திரத்தில் ஆட்டத்தை கோட்டை விடுவதில் ஆகட்டும்… நண்பனே துரோகம் செய்ததாக நினைக்கும் போது துடிக்கும் போது ஆகட்டும் சிறப்பாக செய்திருக்கிறார்.
அவரை விட ஒரு படி மேலாக தியாகம் செய்யும் வாய்ப்பு இருந்தும் துரோகம் சுமக்கிறார் சாந்தனு. தானே ஒரு பகடை காயாக இருக்கிறோம் என்பது தெரியாமல் நட்புக்கு துரோகம் செய்தவராக அவர் மாறித்தெரிவதுடன் படம் முடிகிறது.
ஆனாலும், நடிக்கக் கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
நாயகி ப்ரீத்தி அஸ்ரானிக்கு ஏன் டல் மேக்கப் போட்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவரது பாத்திரமும் படத்துக்கு பெரிதாக உதவவில்லை.
அமைதியாக பேசிய அதிரடி காட்டும் தாதாவாக வரும் செல்வராகவன் மிரட்டுகிறார். ஈட்டி எழுவதில் கோல்டு மெடல் சாம்பியன் போல இரக்கிறது. என்னா வீச்சு?
அவருக்கு நிகரான இன்னொரு தாதாவாக அல்போன்ஸ் புத்திரன். ஆனால் அவர் மீது நமக்கு எந்த பயமும் ஏற்படவில்லை.
இவர்கள் இருவருக்குள்ளும் புகுந்து மிரட்டும் மூன்றாவது தாதாவாக வரும் அந்த பெண்மணியும், அவரது அசிஸ்டன்ட் பெண்ணும் அசத்தல்.
டைரக்டர் உன்னி சிவலிங்கம் தன் முதல் படத்திலேயே ஜெயித்திருக்கிறார். ஆனால் அடுத்தடுத்த காட்சிகள் எல்லாமே நாம் யூகிப்பவையாக வருவது குறை.
சாய் அப்யங்கரின் இசை உணர்வுடன் ஒலிக்கிறது.
அலெக்ஸ் ஜே புலிக்கலின் ஒளிப்பதிவு அபாரம். ஆக்ஷன் காட்சிகளில் மட்டுமல்லாது கபடி காட்சிகளிலும் அவரது கேமரா (வும்) புகுந்து விளையாடுகிறது.
பல்டி – இரண்டாம் பகுதியை எதிர்பார்க்கலாம்..!
– வேணுஜி