நலிந்து வரும் நாடகத்துறையில் கோமாளியாக இருக்கிறார் நாயகன் வைபவ். நாடகங்கள் குறைந்து வருவதால் இதிலிருந்து முன்னேற முடியாது என்று வெளிநாடு செல்ல ஆசைப்பட்டு அதற்கு பணம் சேர்ப்பதற்காக ஒரு இடத்தில் டிரைவர் பணியில் சேர்கிறார்.
உப்பை ஏற்றி வரும் அவரது வண்டிக்குள் போதை மருந்து இருக்க போலீசில் வகையாக சிக்கிக் கொள்கிறார். அங்கிருந்து தப்பித்து குற்றத்துக்கு மேல் குற்றமாக செய்து கொண்டிருப்பவர் கடைசியில் என்ன ஆனார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
ஒரு ஆக்ஷன் கதைக்கு நாயகனாக இருப்பவர் கோமாளி வேடம் போடுபவர் என்று எப்படித்தான் இயக்குனர் அசோக் வீரப்பன் கற்பனை செய்தாரோ தெரியவில்லை. ஆனாலும் அந்த கோமாளி வேடத்திலும் சரி, ஆக்சன் சண்டை அதிரிபுதிரி காட்சிகளிலும் சரி வைபவ் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
நாயகி அனகாவை காதலித்தாலும் அதற்கென்று பாடல்களோ காதல் காட்சிகளோ இல்லாமல் அடக்கி வாசித்திருப்பதும் ரசிக்க வைக்கிறது.
அனகா ஈழத் தமிழ் பெண்ணாக வருகிறார். இங்கிருக்கும் போலீஸ் பற்றி அவர் ஏகத்தாளமாக கூறும் விஷயங்கள் அனுபவபூர்வமாக இருக்கின்றன. ஆனாலும் போலீசில் அடி வாங்கி அவர் உண்மைகளை சொல்லி விடுகிறார்.
வைபவின் நண்பராக வரும் பாடகர் ஆத்தங்குடி இளையராஜா, வைபவுக்கு உதவுவதை விட, வைபவ்தான் அவருக்கு உதவுவதாக இருக்கிறது திரைக்கதை.
போதை மருந்து தடுப்பு காவல் பிரிவில் அதிகாரியாக வரும் தமிழரசன் அற்புதமாக நடித்திருக்கிறார். ஒரு இயக்குனராகவும் இருப்பதால் அந்தப் பாத்திரத்தை உள்வாங்கி அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்த அவரால் முடிந்திருக்கிறது.
கடைசியில் அவர் தேடிய கடத்தல் புள்ளியை அரசியல் காரணங்களால் கைது செய்ய முடியாமல் போக அது பற்றி விசாரிக்கும் இன்னொரு அதிகாரியிடம் அவர் அடிக்கும் நக்கல் தியேட்டரையே அதிர வைக்கிறது.
முக்கிய கடத்தல் புள்ளியாக வரும் ஜோஜு ஜார்ஜ் இரண்டு மூன்று காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தனது தனி நடிப்பால் முத்திரை பதிக்கிறார். ஆனால் படம் நெடுக அவரைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பதால் படம் முழுவதும் அவர் வருவதைப் போன்ற ஒரு பிரமை ஏற்படுகிறது.
அரசியல் தலைவர் வ.ஐ.ச.ஜெயபாலன், அமைச்சர் ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் கொடுத்த வேடங்களை சரியாக செய்திருக்கிறார்கள்.
பிற பாத்திரங்களில் வருபவர்களில் தெரிந்த தெரியாத முகங்கள் பல இருந்தாலும் எல்லோரும் அந்தக் கேரக்டற்களில் பொருந்தி இருப்பது இயக்குனரின் திறமையைக் காட்டுகிறது.
முக்கால்வாசி படம் வரை வைபவுக்கு சிக்கல்கள் மேல் சிக்கல்களாக ஏற்படுத்திக் கொண்டே போகும் இயக்குனர் எப்படித்தான் இந்த பிரச்சனையை தீர்த்து வைக்கப் போகிறாரோ என்று நாம் நினைக்க அதை மிகச் சரியாக தீர்த்து வைப்பது திறமையான அணுகுமுறை.
இயக்குனர் அசோக் வீரப்பன் இனி முதல் நிலை நடிகர்களின் படங்களை இயக்க நேர்ந்தால் அதில் ஆச்சரியம் இல்லை. ஒரு கதையை எப்படி அணுகுவது எப்படி எடுப்பது என்பதில் கைதேர்ந்தவராக இருக்கிறார் அவர்.
தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு வறட்சியான பகுதிகளைக் கூட அழகியல் கலந்து காட்டுகிறது.
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை பின்னி எடுக்கிறது. பாடல்களிலும் அவரது முத்திரை பதிக்கப்பட்டு இருக்கிறது.
எதை நோக்கி கதை நகர்கிறது என்கிற கேள்வியை ஒதுக்கி விட்டுப் பார்த்தால் தற்கால சமூக நிகழ்வுகளை சரியாக தோலுரித்து காட்டுகிறது இந்தப் படம் என்று சொல்லலாம்.
தலைப்பை இன்னும் கொஞ்சம் சீரியஸாக யோசித்து இருந்தால் இன்னும் கவனம் பெற்ற படமாக இருந்திருக்கும். அதேபோல் இன்னும் பெரிய நடிகர் நடித்திருந்தால் பெரிய படமாகவும் ஆகி இருக்கும்.
பபூன் – சிரிக்க வைக்கும் தலைப்பில் சீரியஸ் படம்..!