March 22, 2025
  • March 22, 2025
Breaking News
September 25, 2022

ட்ரிகர் திரைப்பட விமர்சனம்

By 0 497 Views

மகன் தந்தைக்காற்றும் உதவியை பறைசாற்றும் படம். காவல்துறையிலிருந்த தந்தை தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையை அதே காவல்துறைக்குள் வந்து மகன் தீர்த்து வைக்கும் கதை.

காவல்துறை என்றால் இதுவரை போலீஸ் கமிஷனர், அசிஸ்டன்ட் கமிஷனர், இன்ஸ்பெக்டர், ஏட்டு என்று தான் நாம் சினிமா வாயிலாகத் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் அதே காவல்துறைக்குள் தவறு செய்யும் காவலர்களைக் கண்காணிக்க ஒரு குழு இருக்கிறது என்ற உண்மையை இந்தப் படத்தின் மூலம் நம் முன்வைக்கிறார் இயக்குனர் சாம் ஆண்டன்.

அப்படி ஒரு காவல்துறைப் பணியில் இருக்கிறார் நாயகன் அதர்வா. படத்தின் தலைப்புக்கேற்றார் போல் சண்டைக்காட்சிகளில் தீப்பொறி வேகம் காட்டுகிறார். நாயகி தான்யாவை சரிக்கட்ட அங்கங்கே அசடு வழிவதையும் அதர்வாவிடம் ரசிக்கலாம்.

காவல்துறையில் நேர்மையான அதிகாரியாக இருந்தால் என்ன விதமான விளைவுகளை எதிர் கொள்ள வேண்டுமோ அப்படி எதிர்கொள்வதுடன் அல்ஜைமர் எனப்படும் நினைவுமறதி நோய் வந்து அவதிப்படும் அருண்பாண்டியனின் நடிப்பு கவனிக்க வைக்கிறது.

நெருக்கமான காதல் காட்சிகளோ, உடைகளை மாற்றி மாற்றி ஆடிப் பாடும் பாடல்களோ, அரை லூசுத்தனமான வேடமோ இல்லாமல் கதைக்கு தேவையான கதாநாயகி வேண்டுமா தான்யாவை அணுகலாம் என்று எழுதப்படாத சட்டம் கோலிவுட்டில் இருக்கிறது போலும். இந்தப் படத்திலும் அப்படியே வந்து போகிறார் தான்யா.

அப்பா முரளியுடன் சேர்ந்து நடித்த சின்னி ஜெயந்த்துக்கு இந்தப் படத்தில் அவர் மகன் அதர்வாவுடன் நடிக்கக்கூடிய  வேடம். அதை உணர்ந்து நன்றாக நடித்திருக்கிறார்.

முனீஸ்காந்த், அழகம்பெருமாள், சீதா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் பிற நடிகத் தேவைக்கு உதவியிருக்கிறார்கள்.

வில்லன் ராகுல்தேவ்ஷெட்டி பார்வைக்கு அமைதியாகத்தான் இருக்கிறார். ஆனால் அந்த அமைதியே ஆபத்தை உணர்த்துவதாக இருக்கிறது.

ஜிப்ரானின் இசை வழக்கம்போல் விறு விறுப்பைக் கூட்டி இருக்கிறது. கிருஷ்ணன்வசந்த் ஒளிப்பதிவு அதன் காட்சி வடிவமாக இருக்கிறது.

ஆதரவற்ற குழந்தைகளின் நிலை குறித்தும் விவாதிப்பது படத்தின் பலமாக இருக்கிறது.

ட்ரிகர் – டுமீல்… டமால்..!