சினிமா வரலாற்றில் இயக்குனர் யார் என்பது தெரியாமலேயே வெளிவந்திருக்கும் படம் இது. அதற்குக் காரணம் அவர் பாதியிலேயே இந்தப் படத்திலிருந்து விலகி விட்டாராம்.
அந்தக் கதை என்னவென்று நமக்குத் தெரியாது. எனவே, படத்தின் கதையைப் பார்க்கலாம்.
இதுவும் ஒரு காதல் கதைதான், ஆனால், வழக்கமான காதல் கதைகளில் இருந்து வித்தியாசப்பட்டது. காதலுக்கு வித்தியாசமான வில்லனாக இதில் காதலி பருவமடையாத விஷயத்தை வைத்திருக்கிறார் அந்தப் பெயர் தெரியாத இயக்குனர்.
அதாவது நாயகி மனிஷா ஜித் பருவமடையாமலேயே இருக்கிறார். அவர் தங்கையே ஒரு கட்டத்தில் பருவமடைய, மனிஷாவின் அம்மா கவலைப்படுகிறார். இதற்கும் மனிஷா அவர் பெற்றோருக்குப் பிறந்த குழந்தை இல்லை, வளர்ப்புப் பெண் என்று ஒரு கதையும் சொல்கிறார்கள்.
இந்நிலையில் மனிஷாவின் கனவில் நாயகன் ஆர்.எஸ்.கார்த்தி வர, அவரைக் காதலிக்கிறார் மனிஷா. அதை உண்மை போலவே நினைக்கும் மநிஷாவின் ஊரில் திருவிழா வர, அங்கு வரும் கூத்துக் குழுவில் நாயகன் கார்த்தி இருக்கிறார். கனவில் பார்த்த காதல் நேரில் கை கூடுகிறதா என்பதே மீதி.
நாயகி முக்கியத்துவம் பெற்ற கதையில் நாயகனின் பங்கு இரண்டாம் பட்சம்தான். அந்த வேடத்தில் பொருந்தி இருக்கும் கார்த்தி, கூத்தில் காத்தவராயனாக அடையாளம் தெரிகிறார்.
அப்பாவித்தனமான அழகிய முகம் மனிஷா ஜித்துக்கு. அந்த முகத்தில் அந்தப் பருவத்துக்கென்றே தோன்றும் காதலும் அத்தனை அழகு. கடவுள் சிலையுடன் தனியாக பேச்சு வார்த்தை நடத்தும் அவருக்கு கடைசிவரை கடவுள் துணையாக நிற்காதது பரிதாபம்ந்தான்.
நாயகியின் முரட்டு மாமாவாக வரும் மாரிமுத்து மிரட்டுகிறார். கூத்து மாஸ்டர் சிவசங்கர், நாயகியின் அம்மா எலிசபெத், ஊர்ப்பெரியவர் தவசி உள்ளிட்டோரும் இயல்பான நடிப்பைத தந்திருக்கிறார்கள்.
இரவு காட்சிகள் அதிகம் மரம் கதையானதால் சிரத்தையுடன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் ஜெய்சங்கர் ராமலிங்கம். செல்வ நம்பியின் இசையில் பாடல்கள் இதம். பின்னணி இசையும் ஓகே.
வளர்த்த பெண்ணானாலும் சொந்த பெண் போலவே பாவிக்கும் தாய்ப்பாசம், அக்கா பருவமடையாததால் பருவமடைந்த தானும் பாவாடை சட்டை போட்டுக் கொண்டு அலையும் தங்கைப் பாசம், பருவமடைந்த தங்கைக்கு சீக்கிரம் வரன் அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் அக்கா பாசம் என்று பாசத்துக்குக் குறைவில்லாத படம்.
ஆனால் சில நாட்கள் தொடர்ந்து நடக்கும் கூத்தில் தினமும் காத்தவராயன் கதையை மட்டும் கூத்தாடிக் கொண்டிருப்பது என்ன கூத்து..? அல்லது மெகா சீரியல் போல தினமும் ஒரு எபிசோடு நடத்தினார்களா..? என்பது போன்ற லாஜிக்குடன் கேட்பதற்கு ஏகப்பட்ட கேள்விகள் படத்தில் இருக்கின்றன. இயக்குனர் யார் என்று தெரியாததால் யாரிடம் போய் இந்தக் கேள்விகளை கேட்க..?
ஆர்யமாலா – காதலுக்காக காத்த(வ)ராயன்..!