கரணம் தப்பினால் மரணம் என்று இருக்கிறது ஒரு படத்தின் நிலை. இதில் அரணம் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியிருப்பதுடன் அதில் கதாநாயகனாகவும் நடித்ததுடன், போராடி இந்தப் படத்தை வெளியே கொண்டு வந்திருக்கிறார் பிரபல பாடலாசிரியர் பிரியன்.
அந்த கெத்’துக்கு ஒரு பாராட்டு தெரிவித்துவிட்டு படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
கிராமத்துக்குள் தோட்டத்து பங்களா ஒன்றைக் கட்டி வைத்துக்கொண்டு வாழும் பெரிய மனிதருக்கு அவர் பெற்ற மகன் சரியில்லாமல் போக வளர்த்த இரு பிள்ளைகள் எப்படி வாரிசுகளாயினர் என்று சொல்லும் கதை.
படத்தின் ஆரம்பமே மேற்படி போக்கிரி மகன் பெரியவரிடம் சொத்தைப் பிரித்துத் தரச் சொல்லிக் கேட்க, நல்லவனாக வாழச் சொல்லி தந்தை அறிவுரை சொல்ல, அதற்கு அடுத்த காட்சியில் கால் இடறி விழும் மகன் பலியாகிறார்.
அதற்கு அடுத்து அந்த பங்களாவில் பல அமானுஷ்யங்கள் நடந்து கொண்டிருக்க, பெரியவரும் அகாலமாக மரணம் அடைகிறார். அது ஆவியின் வேலையா அல்லது ஆசாமிகளின் சதியா என்று புரியாத குழப்ப நிலையுடன் படம் தொடங்குகிறது.
பெரியவர் இறப்பதற்கு முன்பு தன் வளர்ப்பு மகனான நாயகன் பிரியனுக்கு தொலைபேசி வாயிலாக அவன் திருமணத்திற்கு பெண் பார்த்து வைத்திருப்பதாகக் கூற, அவளைச் சென்று பார்க்கும் பிரியன் அவளுடன் ஒரு பாட்டுப்பாடி பின் மணக்கிறார். அந்தப் பெண்தான் நாயகி வர்ஷா.
அந்த நேரத்தில்தான் பெரியவர் இறந்த பேரிடி பிரியனைத் தாக்க அவர் மரணத்திற்குச் சென்று திரும்பும் பிரியன் மீண்டும் அந்த கிராமத்து பங்களாவுக்கு மனைவியுடன் செல்கிறார். அங்கே அவர்கள் பல அமானுஷ்யங்களை சந்திக்க நேர, அதன் முடிவு என்ன ஆனது… அந்த பிரச்சனைகளை பிரியன் தீர்த்தாரா என்பதுதான் மீதிக்கதை.
முதல் படத்தில் முகம் அறிமுகமானால் போதும் என்கிற அளவில் அடக்கி வாசித்திருக்கிறார் பிரியன். அவரது மீட்டருக்கு மிகாத நடிப்பைப் பார்க்கும் போது விஜய் ஆண்டனியை பிரதி எடுத்தது போல் தோன்றுகிறது. அடுத்தடுத்த படங்களில் அவர் நடிப்பு பற்றி விவாதிப்போம்.
ஒரு புதுமணப் பெண்ணாகவே நம்மை உணர வைக்கிறது வர்ஷாவின் வசீகர தோற்றம். சினிமா கதாநாயகி போல் தோன்றாமல் புதிதாக மணமான பெண்ணாகவே தோன்றும் வர்ஷாவுக்கு இது போன்ற குடும்பச் சூழல் படங்களில் வளமான வாய்ப்பு இருக்கிறது.
பிரியனின் தம்பியாக ‘ ராட்டினம் ‘ லகுபரன். அவரும் ஒரு ஹீரோ என்பதால் ஒரு டூயட் பாடலும், ஒரு சண்டைக் காட்சியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘நல்ல தம்பி’ என்று பெயர் சொல்லும் அளவில் இலகுவாக நடித்திருக்கிறார் லகுபரன்.
அவருக்கு ஒரு ஜோடி வேண்டும் என்பதற்காகவே கீர்த்தனாவை இந்தப் படத்துக்குள் இணைத்து இருப்பது போல் இருக்கிறது.
படத்தில் முக்கியமான பாத்திரமாக வரும் அந்தப் பெரியவர் முகத்தைக் கடைசி வரை காட்டவில்லை. அவர் குரல் மட்டுமே நடித்துக் கொண்டிருப்பது புதுமையா அல்லது அடுத்த பாகத்தில் (??) அவர் முகம் தெரியுமா என்பது தெரியவில்லை.
மற்ற பாத்திரங்களை ஏற்று நடித்திருப்பவர்கள் அனைவரும் புதிய முகங்களாக இருக்க, அவர்களால் முடிந்ததை செய்திருக்கிறார்கள்.
நித்தின்.கே.ராஜ், இ.ஜே.நௌசத் ஆகியோரின் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது என்பதைத் தாண்டி புத்திசாலித்தனமாக செயல்பட்டு இருக்கிறது. பட்ஜெட் குறைவாக இருப்பதால் பல விஷயங்களை லைட்டிங்கிலேயே முடித்திருக்கிறார்கள்.
குறிப்பாக பெரியவர் இறந்த செய்தி கேட்டு வீட்டைப் பூட்டுகிறார் பிரியன். பூட்டப்பட்ட அந்தக் கதவின் ஷாட்டை அப்படியே வைத்து அதன் மீது இரவும் பகலுமாக வெளிச்சம் விழ, மூன்று நாட்கள் கடந்ததையும், அதன் மீது ‘வாய்ஸ் ஓவர்லேப்’ செய்து மூன்று நாட்களில் என்ன நடந்தது என்பதையும் விளக்கி விடுகிறார்கள்.
அப்படித்தான் கடைசியில் வரும் நீதிமன்ற தீர்ப்பையும் பட்டென்று ஒரே ஷாட்டில் முடித்து விடுகிறார்கள்.
தேவைக்கு சற்று அதிகமாகவே பாடல்கள் இருந்தாலும், இசையமைப்பாளர் சாஜன் மாதவ் ரசிக்கும்படியே இசைத்து இருக்கிறார்.
படத்தொகுப்பாளர் பிகே வும், நான்லீனியர் யுத்தியில் காட்சிகளை முன் பின்னாக வெட்டிப்போட்டு எதையும் வீணாகாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
தன் படம் என்று பாடல்களைத தான் மட்டுமே எழுதிக் கொள்ளாமல் முருகானந்தம், பாலா, சஹானாவுக்கும் பாடல் வாய்ப்பை பகிர்ந்து கொண்டிருப்பதிலும் பிரியனை பாராட்டலாம்.
ஆனால், கதையைக் கடத்துவதில் கொஞ்சம் சிரமப்பட்டு இருக்கிறார் என்று தெரிகிறது. தொடர்பற்ற இடத்தில் தொடர்பற்ற காட்சிகள் துண்டு துண்டாக நிற்கின்றன.
கூட்டு முயற்சியில் தயாரான இந்த படத்தின் பட்ஜெட் கையை கடித்ததால் இந்தக் குறைகள் வந்திருக்க வாய்ப்புண்டு.
இருந்தாலும் படத்தை முடித்து தியேட்டருக்குக் கொண்டு வந்ததே இன்றைய அளவில் இந்த படத்துக்கு கிடைத்த வெற்றிதான்.
மற்றபடி ரசிகனுக்கு அதிக ரணம் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது ‘அரணம் ..!’