தமிழ்ப்பட உலகின் ஹிட்ச்காக் என்று வர்ணிக்கப்படக்கூடிய எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில், ஏவிஎம் தயாரித்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1954 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அந்த நாள்’.
இன்றைக்குப் பார்த்தாலும் திரைக்கதையமைப்பில் புதிதாக இருக்கும் அந்தப் படம் அப்போது வெற்றியடையாவிட்டாலும் தமிழ்ப் படங்களில் முக்கியமான படம் என்பதை மறுக்க முடியாது..
அந்தப் படம் வெற்றி பெற்றிருந்தால் நடிகர்திலகம் சிவாஜி கணேசன், மிகையான நடிப்பைக் கைவிட்டு இயல்பான நடிப்பின் பக்கம் திரும்பி இருப்பார் என்பது அப்போதைய விமர்சகர்களின் கருத்து.
அந்தத் தலைப்பை இப்போது வைத்து அதுவும் அதே ஏவிஎம் வளாகத்தில் இருந்து வந்திருக்கும் ஹீரோவான ஆர்யன் ஷியாமை வைத்து ஒரு திகில் படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் வீ.வீ.கதிரேசன்.
ஆரியன் ஷியாம் ஒன்றும் லேசுப்பட்ட ஆள் இல்லை. மிஷ்கினின் கண்டுபிடிப்பாக இன்னொரு படத்தில் அறிமுகமாக இருந்த இவர், இப்போது இந்தப் படத்தின் மூலம் வெளிவருகிறார்.
படத்தின் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று இருக்கும் ஆரியன் ஷியாம் ஒரு திரைப்பட இயக்குனராக வருகிறார். ஒரு புதிய படத்தின் பணிக்காக ஈசிஆரில் உள்ள ஒரு பங்களாவுக்கு இரண்டு பெண்கள் உள்ளிட்ட டீமுடன் செல்லும் அவர் அங்கே சந்திக்கும் பயங்கர அனுபவங்கள்தான் கதை.
ஆறடி உயரம் இருக்கிறார் ஆர்யன். அதற்கேற்ற அழகு, திறமை எல்லாமே அவரிடத்தில் பொருந்தி வந்திருக்கின்றன. படத்திலும் அவருக்கு திறமையைக் காட்ட வாய்ப்புள்ள சவாலான கேரக்டர்தான்.
ஒரு பக்கம் பயம் பொருந்திய இளைஞராகவும் இன்னொரு பக்கம் பயமுறுத்தபவராகவும் இருமுகம் காட்டியிருக்கிறார் அவர். தகுதியான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ்த் திரையில் அவர் தவிர்க்க முடியாத ஹீரோவாக வலம் வருவார்.
நாயகியாக நடித்திருக்கும் ஆத்யா பிரசாத்தும், ஆர்யன் ஷியாமின் உதவியாளர்களில் ஒருவரான லிமா பாபுவும் அல்ட்ரா மாடர்னில் அளவான கிளாமருக்குப் பயன்பட்டிருக்கிறார்கள். கிஷோர் ராஜ்குமார், ராஜ்குமார், இமான் அண்ணாச்சி ஆகியோர் திரைக்கதையை ஓட்டப் பயன்பட்டிருக்கிறார்கள்.
என்.எஸ்.ராபர்ட் சற்குணத்தின் பின்னணி இசை படத்திற்கு ஏற்ப பயமுறுத்தியிருக்கிறது.
பெரும்பாலும் இரவு நேர காட்சிகள்தான் என்ற நிலையில் ஒளிப்பதிவாளர் சதிஷ் கதிர்வேல், அந்த சவாலை எதிர்கொண்டு வென்றிருக்கிறார்.
படத்தின் ஆச்சரியம் என்னவென்றால் நாயகன் ஆர்யன் ஷியாமே இயக்குநர் வீவீ கதிரேசனுடன் இணைந்து இந்தப் படத்தின் திரைக்கதைyai எழுதி இருக்கிறார் என்பது.
திரைக்கதையைத் திறம்பட எழுதத் தெரிந்தவர்களுக்கு போதுமான பட்ஜெட்டைப் பெறுவதில் சுணக்கம் இருந்திருப்பது புரிகிறது.
இடைவேளைக்குப் பின் வேகமாக நகரும் திரைக்கதை, நரபலி கேட்கும்போது பதட்டம் ஏற்படுகிறது.
ஆனாலும் எடுத்துக் கொண்ட கதையை எளிதாகக் கடத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
அந்த நாள் – பழிக்குப் பழி… பலிக்கு பலி..!
– வேணுஜி