October 11, 2025
  • October 11, 2025
Breaking News
September 25, 2025

அந்த 7 நாட்கள் திரைப்பட விமர்சனம்

By 0 146 Views

அறிவியலும் அமானுஷ்யமும் கலந்த கதை. அதை சற்றும் சலிப்பு ஏற்படுத்தா வண்ணம் திரைக்கதை ஆக்கித் தந்திருக்கிறார் இயக்குனர் எம். சுந்தர்.

வான் அறிவியல் பயிலும் நாயகன் அஜிதேஜ், ஒரு கிரகண ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது அதிசயமான சக்தியை பெறுகிறார். அதன்படி யார் கண்ணிலாவது அவர் அந்த கிரகணத்தை பார்க்க நேர்ந்தால் அவர்கள் இறந்து விடுகிறார்கள். எத்தனை நிமிடத்தில் அல்லது எத்தனை நாட்களில் அவர்கள் இறந்து போவார்கள் என்பதும் அஜிதேஜுக்கு தெரிகிறது.

இந்நிலையில் நாயகி ஸ்ரீஸ்வேதாவை காதலித்து களிப்புறும் வேளையில் அவர் கண்களிலும் கிரகணம் தெரிய இன்னும் ஒரு வாரத்தில் அவர் இறந்து விடுவார் என்பது புரிகிறது. 

ஒரு பக்கம் காதலுக்கு இரண்டு வீட்டிலும் எதிர்ப்பு இருக்க, சவாலாக இருக்கும் அந்த ஏழு நாட்களில் ஸ்ரீ ஸ்வேதாவை காப்பாற்ற என்ன வழி என்று புரியாத அஜிதேஜ் அவரை தனிமையில் கொண்டு போய் கண்ணும் கருத்துமாக பாதுகாக்கிறார். 

ஆனால் இந்த உண்மை தெரியாமல் இவர்கள் காதலித்து ஊரை விட்டு ஓடிப் போய் விட்டதாக, இருவரின் அப்பாக்களும் வலை வீசி தேடி வருகிறார்கள். 

பெற்றோரின் கையில் அவர்கள் அகப்பட்டார்களா? நினைத்தது போல் ஸ்ரீஸ்வேதாவை அஜிதேஜ் காப்பாற்றினாரா என்பதெல்லாம் விறுவிறுப்பான பின் பாதி கதை.

அஜிதேஜ் அறிமுக  நாயகன் என்பதை நம்பவே முடியவில்லை. நடிப்பில் அப்படி ஒரு முதிர்வு. காதல் காட்சிகளிலும் சரி, காதலி இறந்து போய்விடுவார் என்று தெரிந்ததும் அதிர்வதும்  பின்னர் அவரைக் காப்பாற்ற ஒவ்வொரு கட்டத்திலும் முயற்சி எடுத்து அது கை கூடாமல் போன நிலையில் கலங்குவது என்று காட்சிக்கு காட்சி நடிப்பில் மிளிர்கிறார்.

அவரை விட ஒரு படி மேலாக இருக்கிறது நாயகி ஸ்ரீஸ்வேதாவின் நடிப்பு. இந்த கதையைக் கேட்கும் எந்த நடிகையும் இந்த பாத்திரத்தில் நடிக்க ஒத்துக் கொள்வது கடினம். அதிலும் டிகிளாமரைஸ் செய்து நடிக்க வேண்டிய கடைசிக் காட்சிகளில் அசத்தியிருக்கிறார் ஸ்ரீஸ்வேதா.

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் நமோ நாராயணன், அமைச்சர் கே பாக்யராஜின் மகளுக்கு தன் மகனை மணம் முடித்து தருவதாக வாக்கு கொடுத்துவிட்டு மகனை காணாமல் தேடுவதும் பாக்யராஜை சந்திக்கும் கட்டங்களில்  புருடா விட்டுக் கொண்டிருப்பது அட்டகாசம். 

இசையமைப்பாளர் சச்சின் சுந்தரின்  பின்னணி இசை இந்த கதைக்கு உணர்வுபூர்வமாக உதவி இருப்பதுடன் பாடல்களுக்கான இசையும் பரவசம் தருகிறது.

கண்ணுக்குத் தெரியாத இன்னொரு நாயகன் ஆகியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபிநாத் துரை. ஒவ்வொரு காட்சியையும் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் என்ற அளவுக்கு தரத்தில் மேம்பட்டு தெரிகிறது இவரது திறமை.

எழுதி இயக்கியிருக்கும் எம்.சுந்தர், இந்த கதையை எப்போது எழுதினாரோ தெரியாது ஆனால் தெருநாய்கள் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருக்கும் இந்த நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் நிறைய விவாதத்தை கிளப்பும்.

கொடுமையான பாதிப்பான ரேபிஸ்க்கு சித்த மருத்துவத்தில் மருந்து உண்டு என்பதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

அந்த வகையில், கதையாகச் சொல்லிப் பார்க்கும்போது நிறைய ‘ கதை விடுவது’  போல் உணர்ந்தாலும் காட்சிகளாக பார்க்கும்போது உணர்வுபூர்வமான படமாக இருக்கிறது இந்த படத்தின் நேர்த்தி.

அந்த ஏழு நாட்கள் – காதல் வைரஸ்..!

– வேணுஜி