January 23, 2026
  • January 23, 2026
Breaking News
January 13, 2026

அனந்தா திரைப்பட விமர்சனம்

By 0 181 Views

புட்டபர்த்தியில் வாழ்ந்த ஆன்மிக குருவான சத்யசாய் பாபாவின் அற்புதங்களைச் சொல்லும் கதை.

அவரது இறுதிக் காலத்தில், தன் ஆத்ம பக்தர்களான ஐவரை உலகெங்கிருந்தும் அழைக்கிறார். அந்தப் பணியை நிழல்கள் ரவி செய்து முடிக்க, அந்த அழைப்பின் பேரில் மும்பை தொழிலதிபர் ஜெகபதி பாபு,, பாலக்காட்டைச் சேர்ந்த ஒய்.ஜி.மகேந்திரா, காசியைச் சேர்ந்த சுகாசினி மணிரத்னம், சென்னையைச் சேர்ந்த அபிராமி வெங்கடாச்சலம், கலிபோர்னியாவை சேர்ந்த அமெரிக்கர் ஜான் ஆகிய ஐவரும் புட்டபர்த்தி வருகிறார்கள்.

வந்து தங்கள் வாழ்க்கையில் சத்ய சாய் செய்த அற்புதங்களைப் பகிர்ந்து கொள்வதுதான் கதை.

அதன்படி மும்பையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையில் பாபா நடத்திய அற்புதங்களை ஜெகபதி பாபு சொல்ல, தன் 30 வயது திருமண நாளில் தான் மனைவி இறந்து போக, அதன் காரணத்தை புட்டபர்த்தி சென்று கண்டுகொண்டதை ஒய் ஜி மகேந்திரா சொல்கிறார்.

அதேபோல் தவமிருந்து பெற்ற தன் மகன் உயிருக்கு போராடி வேலை பாபா நிகழ்ச்சி அற்புதத்தால் அவன் மீண்டு வந்ததை சுகாசினியும், நடன கலைஞரான அபிராமி முக்கிய போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலையில் பாபாவின் அருளால் அதில் வென்றதையும், கலிபோர்னிய காட்டு தீ தங்கள் வீட்டை மட்டும் தீண்டாத அதிசயத்தை அமெரிக்கராக ஜானும் சொல்லி முடிக்க அனைவரும் புல்லரித்து போகிறார்கள்.

வழக்கமாக படங்களில் வில்லனாக குற்றச் செயல்கள் புரியும் ஜெகபதி பாபு இதில் நல்லவராகவும், பக்திமானாகவும் வந்து கொள்ளையர்களை நல்வழிப் படுத்துவதே அற்புதமான ஆச்சரியம்தான்.

ஒய். ஜி மகேந்திராவின் பாலக்காட்டு நடிப்பு பற்றி ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை. அவரது மனைவி ஶ்ரீ ரஞ்சனியின் நெகிழ்ச்சியான நடிப்பும் நன்று. சுகாசினி உலகம் பூர்வமான நடிப்பு அபிராமியின் அழகான நாட்டியமும், அமெரிக்க ஜானின் பக்தியும் பாபா பற்றாளர்களின் நம்பிக்கையை பல மடங்கு உயர்த்தும் அளவில் இருக்கின்றன.

தேவாவின் இசை பாடல்களிலும், பின்னணியிலும் பக்தி மணம் பரப்புகிறது.

அண்ணாமலை, பாட்ஷா படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவா இந்த பக்திப் படத்தை இயக்கியது என்பதும் இன்னொரு ஆச்சரியம்.

இப்படிப் பல ஆச்சரியங்களை உள்ளடக்கி சத்ய சாயின் அற்புதங்களைச் சொல்லி முடிகிறது படம். 

அவர்களே சொல்வது போல் அவரை நம்பியவர்கள் அதைப் புரிந்து கொள்வார்கள். அதிலிருந்து விலக மாட்டார்கள்.

ஜனவரி 16 முதல் Hot Star OTT யில்  இப்படம் காணக்கிடைக்கும்..!

 அனந்தா – சத்தியம்… நித்தியம்..!

– வேணுஜி