கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னட திரையுலகின் முன்னணி நடிகரும், நடிகை மேக்னா ராஜின் கணவரும், நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனுமான சிரஞ்சீவி சார்ஜா நெஞ்சுவலி மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக தன் 39 ஆவது வயதில் திடீர் மரணமடந்தார்.
அந்த செய்தி அனைவரையும் உருக்கிய நிலையில் இப்போது அவரது மனைவியும் நடிகையுமான மேக்னாரஜ் தன் கணவருக்காக உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி தன் டுவிட்டர் பக்கத்தில் அதை பதிவிட்டுள்ளார்.
நெஞ்சை கனக்கச் செய்யும் அந்த கடிதத்தை கண்ணீர் வராமல் உங்களால் படிக்க முடிந்தால் நீங்கள் கல்நெஞ்சக்காரர்.
அதன் தமிழாக்கம் வருமாறு…
“சிரு, நான் உங்களிடம் பேச வேண்டும் என்று நினைத்ததை வார்த்தைகளாக்கிச் சொல்ல திரும்ப திரும்ப முயற்சித்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. இந்த உலகத்திலிருக்கும் அத்தனை வார்த்தைகளை சேர்த்தாலும் நீங்கள் எனக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதை விவரிக்க முடியாது. என் நண்பர், என் காதலர், என் கூட்டாளி, என் குழந்தை, என் நம்பிக்கைக்குரியவர், என் கணவர் – இவை அனைத்தையும் விட மேலானவர் நீங்கள். என் ஆன்மாவின் ஒரு பகுதி நீங்கள்.
ஒவ்வொரு முறையும் நான் வாசல் கதவைப் பார்த்து, நீங்கள் உள்ளே நுழைந்து நான் ‘வீட்டிற்கு வந்துவிட்டேன்’ என்று சொல்வதை எதிர்பார்க்கிறேன். ஆனால் அதைப் பார்க்க முடியாதபோது இனம் கண்டுகொள்ள முடியாத ஒரு வலி என் ஆன்மாவைத் தாக்குகிறது. ஒரு நாளின் ஒவ்வொரு நிமிடமும் உங்களைத் தொட முடியாததை உணரும்போது என் இதயத்தில் எல்லாம் மூழ்கிவிடும் ஒரு உணர்வு ஏற்படுகிறது. ஆனால், உடனடியாக நீங்கள் என்னருகில் இருப்பது போல ஒரு மாய தோற்றத்தை உணர்கிறேன். நான் சோர்வடையும் போதெல்லாம் நீங்கள் என்னைக் காக்கும் தேவதையாக என்னைச் சுற்றி இருக்கிறீர்கள்.
நீங்கள் என்னை அவ்வளவு காதலித்திருக்கிறீர்கள். உங்களால் என்னைத் தனியாக விட்டுப் போக முடியவில்லை. இல்லையா? நம் காதலின் சின்னமாக, நீங்கள் எனக்குத் தந்த விலை மதிக்க முடியாத பரிசுதான் நம் குழந்தை. அந்த இனிய அற்புதத்துக்காக நான் என்றென்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பேன்.
உங்களை நம் குழந்தை வடிவில் மீண்டும் இந்த பூமிக்குக் கொண்டு வரும் நாளை ஆர்வத்துடன் எதிர் நோக்கியுள்ளேன். மீண்டும் உங்களைத் தாங்கும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்கள் புன்னகையைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அறை முழுவதையும் ஒளிரச் செய்யும் உங்களின் சிரிப்பைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நான் உங்களுக்காகக் காத்திருக்கிறேன். நீங்களும் அந்தப் பக்கம் எனக்காகக் காத்திருங்கள். என் சுவாசம் இருக்கும் வரை நீங்கள் வாழ்வீர்கள். நீங்கள் என்னுள் இருக்கிறீர்கள். ஐ லவ் யூ..!”