அஜித் படத்துக்கு பிடித்ததைப் போல் அருமையான தலைப்பு பிடித்து விட்ட இயக்குனர் கே.எல்.கண்ணன், அஜித் கிடைக்காத நிலையில் ஆளில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பது போல் விதார்த்தைப் பிடித்து விட்டார்.
ஆனால் விதார்த் ஒன்றும் நடிக்கத் தெரியாத நாயகன் இல்லை. படத்துக்குப் படம் வித்தியாசமான கதைகளைத் தேடித் தேடி நடித்து வரும் அருமையான நடிகர் அவர் என்றிருக்க, இந்த படத்தில் அப்படி என்ன வித்தியாசமான கதை?
அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்ட விதார்த், கார் மெக்கானிக் சார்லியின் மகனாகப் பிறந்த ஒரே காரணத்தால் முன்னேற முடியாமல் இருக்கிறார். சமூக நலனுக்கான ஒரு ப்ராஜெக்ட் ஆரம்பிக்க பத்து லட்ச ரூபாய் தேவை என்று அப்பாவிடம் அவர் வருத்தப்பட, அதற்கு நான் இருக்கிறேன் என்று உறுதி தருகிறார் சார்லி.
இன்னொரு பக்கம் நான்கு கொள்ளையர்கள், செல்வந்தர்கள் மற்றும் வங்கியில் இருந்து பணம் எடுத்துக்கொண்டு வருவோர் பற்றிய தகவல்களை முன்பே தெரிந்து கொண்டு அவர்களைக் கொன்று கொள்ளையடிக்கும் வேலையை செய்து வருகிறார்கள்.
இந்த சூழலில் மகனுக்காக சார்லி ஏற்பாடு செய்து கொண்டு வரும் 10 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டு சார்லி கொல்லப்படுகிறார்.
இதே போன்ற ஒரு கொலை, கொள்ளையை நேரில் பார்த்து விடும் விதார்த், இப்படித்தான் தந்தையும் கொல்லப்பட்டு இருப்பார் என்று நினைத்து சரியாக திட்டமிட்டு அந்தக் கொள்ளையர்களை ஒழிக்க நினைக்கிறார்.
அது முடிந்ததா என்பதுதான் மீதிக் கதை.
வசதியில் ஏழையாக இருந்தாலும் உதவும் மனதில் பணக்காரனாக வாழும் கேரக்டர் விதார்த்துக்கு. டிரைவிங் இன்ஸ்டிட்யூட்டில் வேலை செய்யும் நாயகி ஷ்ரிதா ராவ், அன்று ஒப்படைக்க வேண்டிய டிரைவிங் லைசென்ஸ்களை மொத்தமாக தொலைத்து விட அதைக் கண்டெடுக்கும் விதார்த், அவளிடம் ஒப்படைத்துவிட்டு முகம் காட்டாமல் திரும்பிச் செல்வது அவரது நல்ல உள்ளத்துக்கு ஒரு உதாரணம்.
வாய்மொழி உத்தரவுக்கு கட்டுப்பட்டு இயங்கும் பொம்மை கார் ஒன்றை சிறுவர்களுக்கு இயக்கி காட்டி அவர்களின் சந்தோஷத்தைப் பெற முயல்கையில் ஒரு சிறுவன் மட்டும் அவரது தந்திரத்தைக் கண்டுபிடித்துவிட “அதுக்கு என்ன இப்போ..?” என்று கேட்கும் பாவனையில் விதார்த்தின் நடிப்பு ‘ யதார்த்..!’.
அதே ட்ரிக்கை வைத்து கடைசியில் கொள்ளையர்களை அவர் பிடிப்பது புத்திசாலித்தனம்.
நாயகியாக வரும் ஷ்ரிதா ராவுக்கு பிஞ்சு முகம். பள்ளி செல்லும் பருவத்துக்குத் தோதாக இருப்பவர் நாயகியாக நடிக்க வந்ததில், தானும் இளமையாக தெரிய விதார்த் மெனக்கெட்டு இருப்பது புரிகிறது.
பாந்தமான அப்பாவின் வேடம் சார்லிக்கு. மகன் கேட்கும் பெரும் பணத்தை தன்னால் புரட்ட முடியாது என்று தெரிந்தும், “ஒரு கார் மெக்கானிக்கா நீ கேட்கிற பணத்தை என்னால தர முடியாது. ஆனா ஒரு அப்பாவா தர முடியும்..!” என்று நம்பிக்கையைத் தரும் இடத்தில் மிளிர்கிறார் சார்லி.
வில்லன் வம்சி கிருஷ்ணாவும் ஒரு விஞ்ஞானியாக இருப்பது ஆச்சரியம். அவரது கண்டுபிடிப்பான ‘ஸ்பை கேம் ஈ’, ஒவ்வொரு கொள்ளை இடத்துக்கும் சென்று நோட்டம் விடுவது ரசிக்கும்படி இருக்கிறது.
கொள்ளையர்கள் ஈவு இரக்கமில்லாமல் கொள்ளையடிக்கும் இடங்களில் எல்லாம் கொலைகளாக செய்து கொண்டிருக்க போலீஸ் துறை என்ன செய்கிறது என்பதை ஒரு காட்சியிலாவது காட்டி இருக்கலாம்.
அவ்வளவு கொடூர கொலை புரிபவர்கள் தங்களுடைய டீமில் ஒருவன் இறந்து விட்டான் என்பதற்காக பிளாஷ்பேக் எல்லாம் நினைத்து பார்த்து கண்ணீர் விடுவது நமக்கு எந்த நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தவில்லை.
அதேபோல் அத்தனை கொலைகாரர்களும் சேர்ந்து விதார்த்தை கொல்ல முடியவில்லை என்பதும் நம்பும்படி இல்லை.
கடைசியில் கொள்ளைக் கூட்டத்தையும் வில்லனையும் ஒரு வழியாக ஒழித்துவிட்டு இனி எந்த பிரச்சனையும் இல்லை என்று விதார்த் நினைக்கையில் இயக்குனர் வைக்கும் ஒரு டிவிஸ்ட் அடடே போட வைக்கிறது.
கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவும், அஸ்வின் ஹேமந்தின் இசையும் படத்தின் தேவையை நிறைவு செய்திருக்கிறது.
ஆற்றல் – அறிவியல் சொச்சம் – ஆக்சன் மிச்சம்..!