சந்தானம் படத்துக்கு எதற்காகப் போகிறோமோ அதை நன்றாகவே திருப்திப்படுத்தி அனுப்புகிற கதைக்களமும், அதைத் திறம்படக் கொடுத்திருக்கும் திரைக்கதையும் படத்தின் பலம்.
வீரமிக்க ஒருவரை மணக்க விரும்பும் பிராமணப் பெண்ணான நாயகி தாரா அலிசா, சந்தானத்தை அப்படி ஒரு மோதலில் பார்க்கிறார். அப்பாவின் விரதத்துக்காக தீர்த்தம் வாங்கிவர கோவிலுக்கு வந்த சந்தானம் நெற்றியில் நாமமும் போட்டிருக்க, அவரை பிராமணர் என்று புரிந்து க்பொள்ளும் தாரா அவர்மீது காதல் கொள்கிறார்.
ஆனால், சந்தானம் பிராமணர் இல்லை என்று தெரிந்ததும் காதலை முறித்துக் கொள்கிறார். பின் ஒரு சந்தர்ப்பத்தில் சந்தானம் தாராவின் அப்பா உயிரைக் காப்பாற்ற மீண்டும் காதல். அது நிறைவேறியதா இல்லையா என்பதை முழுநீளக் காமெடிப் படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜான்சன்.
சந்தானம், வழக்கம் போல் தன்னுடைய டைமிங் காமெடியால் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். உடனிருக்கும் நண்பர்களுக்கும் அதிகப்படியாக நடிக்க வாய்ப்பு கொடுத்து காமெடியில் ஸ்கோர் செய்ய வைத்திருக்கிறார்.
முதல்பாதி கடந்ததே தெரியாத அளவுக்குக் காமெடி றெக்கை கட்டிப் பறந்திருக்கிறது.
நாயகி தாரா அலிசா பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். தன் பங்குக்கு வந்து செல்லாமல், கொடுத்த வாய்ப்பை திறம்பட செய்திருக்கிறார். சந்தானம் அப்பாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், அம்மாவாக வரும் மீரா கிருஷ்ணன் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார்கள். சந்தானத்தின் நண்பர்களாக வரும் மூன்று பேரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
எளிமையான கதையை காமெடி கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜான்சன். கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்து, அவர்களை அழகாக கையாண்டிருக்கிறார். காமெடியை மட்டுமே முன்னிருத்தி அதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர்.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாக இருக்கிறது. ‘மாலை நேர மல்லிப்பூ’ செம ஹிட். கோபி ஜெகதீஷ்வரனின் ஒளிப்பதிவு பளிச்சென்றிருக்கிறது.
ஏ1 காமெடி விருந்து..!