வகை: சைக்கலாஜிக்கல் திரில்லர்
ஹாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகராக வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கும் மேட் ஹேகனின் வாழ்க்கை, ஒரு கொடூரமான தாக்குதலால் தலைகீழாக மாறுகிறது.
முகம் சிதைக்கப்பட்டு, தனது அடையாளத்தையும் எதிர்காலத்தையும் இழந்து தவிக்கும் அவருக்கு, நவீன மருத்துவச் சிகிச்சை மூலம் மீண்டும் பழைய தோற்றத்தைப் பெறும் வாய்ப்பு கிடைக்கிறது.
ஆனால், அந்தச் சிகிச்சையே அவனை மனித உருவத்தைக் கடந்து, பயங்கரமான சக்திகளைக் கொண்ட ஒரு உயிரினமாக மாற்றுகிறது.
மனிதன் அரக்கனாக மாறுகிறானா, அல்லது அவனைச் சுற்றியுள்ள உலகம்தான் அவனை அரக்கனாக்குகிறதா?
என்ற கேள்வியை முன்வைக்கும் இப்படம், வழக்கமான சூப்பர் வில்லன் கதைகளிலிருந்து வித்தியாசமான பாதையில் பயணிக்கிறது.
உருமாறும் உடல், சிதையும் முகம், அதிர்ச்சியூட்டும் காட்சிகள் என திகில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் காட்சியமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, உடல் மாற்றங்களைக் காட்சிப்படுத்தும் தொழில்நுட்பமும் விஷுவல் எஃபெக்ட்ஸும் படத்தின் முக்கிய பலமாக அமைகின்றன.
நாயகன் மேட் ஹேகனின் மனப்போராட்டம், இழந்த வாழ்க்கையை மீட்டெடுக்க வேண்டும் என்ற வெறி, அவனைச் சுற்றியுள்ளவர்களால் ஏற்படும் ஏமாற்றங்கள் என உணர்வுபூர்வமான அம்சங்களும் கதையில் முக்கியத்துவம் பெறுகின்றன. டாம் ரைஸ் ஹாரிஸின் நடிப்பு, கதாபாத்திரத்தின் வலியையும் தனிமையையும் வெளிப்படுத்த உதவுகிறது.
இருப்பினும், பழிவாங்கும் படலத்தில் சில இடங்களில் யூகிக்கக்கூடிய திருப்பங்களும், இரண்டாம் பாதியில் தொய்வடையும் திரைக்கதையும் படத்தின் வேகத்தைக் குறைக்கின்றன. அதேசமயம், இறுதிக்கட்டத்தில் மீண்டும் சூடுபிடிக்கும் கதை, ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான திகில் அனுபவத்தை வழங்குகிறது.
மொத்தத்தில், இது வெறும் உருவம் மாறும் வில்லனின் கதை மட்டுமல்ல; அழகு, அடையாளம், மனிதாபிமானம் ஆகியவற்றை இழக்கும் ஒரு மனிதனின் இருண்ட பயணமும் கூட!