பல படங்கள் சினிமாவை நம்பியிருப்பவர்களை வாழவைக்கும். சில படங்கள் மட்டுமே சினிமாவை வாழ வைக்கும். அந்த வரிசையில் இந்தப்படத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.
பெற்றோரை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு எத்தனை மேன்மையானது என்பதை தனக்கே உரிய ‘கிளாஸிக் டச்’ கொடுத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராதாமோகன். அதைத் தோள் கொடுத்துத் தூக்கிச் சுமந்திருக்கிறார்கள் கதையின் நாயகனாகியிருக்கும் பிரகாஷ்ராஜும், துணிந்து இந்தப்படத்தைத் தயாரித்திருக்கும் கலைப்புலி எஸ்.தாணுவும்.
அம்மா புற்றுநோயால் இறந்துவிட, அன்பைப்பொழிந்து வளர்ந்த அப்பாவும் ‘அல்சைமர்’ என்னும் மறதிக்குறைபாட்டால் அவதிப்பட, அவரை காப்பகத்தில் சேர்த்துவிட்டு பணிக்காக மும்பை சென்றுவிடும் விக்ரம்பிரபு, மூன்று வருடங்கள் கழித்து சென்னைக்குத் திரும்புவதிலிருந்து தொடங்குகிறது திரைக்கதை.
தன் வேலை விஷயமாக வந்தாலும் அப்பாவைப் பார்த்துவிட்டுப் போவதும் சென்னை வந்ததன் முக்கியமான நோக்கமாக இருக்க, அவரைப் பார்த்துவிட்டு துணிமணிகள் வாங்கிக்கொடுத்துவிட்டு காப்பக வாசலில் விட்டுவிட்டுத் திரும்பும்போது அவருக்கு அதிர்ச்சி தரும் தகவல் வருகிறது, அப்பா அங்கிருந்து காணாமல் போய்விட்டார் என்று.
காப்பக மருத்துவர்களைக் குறை சொன்னாலும், வாசலில் பொறுப்பில்லாமல் விட்டுவிட்டுச் சென்ற தன் தவறும் உணர்ந்து மருகும் விக்ரம் பிரபுவும், காப்பக பெண் மருத்துவர் இந்துஜாவும் சேர்ந்து அவரைக் கண்டுபிடித்தார்களா என்பது கதை.
பிரகாஷ்ராஜ் நன்றாக நடிக்கிறார் என்பது சூரியன் வெளிச்சம் தருகிறது என்பதைப்போல. அவர் நடிப்பதில் வியப்பில்லை. ஆனால், இதுவரை நாம் கண்ட அவரது முகக்குறிகள் தவிர்த்து சலனமற்ற ஒரு புதிய முகம் காட்டி நடித்திருப்பதுதான் ஆகச்சிறந்த ஆச்சரியம். மனைவி இறந்த நிலையில் மகனுக்காக மட்டுமே வாழும் அவர், உலகமே மறந்த நிலையில் கூட மகன் பெயரையும், நலனையும் மட்டும் மந்திரம் போல் உச்சரித்துக் கொண்டிருப்பது அற்புதம்.
மற்றவர்கள் அவரைத் தொலைத்தாலும் அவர் தன் மகனுடன் வாழ்வதாகவே நினைத்து தனக்கு எதிர்ப்படுபவர்களை எல்லாம் மகனாகவே பாவிக்கும் அன்பு கொலைகாரனையும் திருத்துகிறது என்பது நியாயமே.
விக்ரம் பிரபு இதுவரை எத்தனைப் படங்களில் நடித்திருந்தாலும் அவர் ‘நன்றாக நடித்திருப்பது’ இந்தப் படத்தில் மட்டுமே எனலாம். தன் கையறு நிலை குறித்து அவர் இந்துஜாவிடம் வருந்தும்போது அவரது தாத்தா ‘நடிகர் திலகம்’ எட்டிப்பார்த்து “ஹாய்..!” சொல்லிவிட்டுப் போகிறார்.
இந்துஜாவுக்கு மருத்துவர் பணியைத் தாண்டி விக்ரம் பிரபுவின் வாழ்வில் ஒளியேற்றத்துடிக்கும் வேடம். விக்ரம் பிரபுவைக் காணும்போதெல்லாம் அவர் கண்களில் பல்பு எரிய… ‘பளிச்’.
சமுத்திரக்கனிக்கு இதில் வாய்த்த அடியாள் வேடம் ‘யானைப்பசி… சோளப்பொரி’ கதைதான். ஆனால், பிரகாஷ்ராஜைப் போல் ஒருவரை அவர் சந்தித்து வாழ்வில் தெளிவு பெற வேண்டிய அவசியத்தில் அவரது கேரக்டரின் நியாயம் புரிகிறது.
அவரும், அவரது அஸிஸ்டன்டாக வரும் பையனும் அமர்க்களம்..!
கதைக்குள் திடீரென்று முளைக்கும் குமரவேல் அசத்துகிறார். அவருக்குக் கிடைக்கும் கைத்தட்டல்களில் பெரும்பகுதி வசனகர்த்தா விஜிக்குச் சேர வேண்டியவை. சில சாம்பிள்கள்…
“நாங்க மிடில் கிளாஸ் ஃபேமிலிதான். ஆனா, இந்த வீட்டைக் கட்டி ‘லோயர் மிடில் கிளாஸ்’ ஆகிட்டோம்…”
“டிமானிடைசேஷன் அறிவிச்சப்ப, நான் அரைமணிநேரம் சிரிச்சுக்கிட்டு இருந்தேன். ஏன்னா, என் கையில அப்ப இருந்தது ரெண்டே ரெண்டு நூறு ரூபா நோட்டு..!”
குமரவேலின் மனைவி – “ஏங்க இந்த திருடங்க எப்ப நம்ம வீட்டை விட்டுப் போவாங்க..?”
குமரவேல் – “இன்னைக்கு நைட் வரைக்கும் பாக்கலாம். இல்லாட்டி நாளைக்கு உன் சாம்பாரை வச்சுடு. ஒரேயடியா அனுப்பிடலாம்..!”
குமரவேலின் மனைவி – “இந்தத் திருடங்க என்னை ஏதாவது பண்ணிடுவாங்களோன்னு பயமா இருக்கு..!”
குமரவேல் – “நீ ரொம்ப ஓவரா எதிர்பார்க்கிறே..!”
– டாப் கிளாஸ் டயலாக்ஸ் விஜி சார்..!
சின்ன கேரக்டரில் வந்தாலும் நட்புக்கு உதாரணமாகி முத்திரை பதிக்கிறார் மோகன்ராம்.
இளையராஜாவின் இசை அவரது பாணியிலேயே வசீகரிக்கிறது. ஒளிப்பதிவும் உன்னதம்..!
பிரகாஷ்ராஜ் தனித்து விடப்படும்போதெல்லாம் நாமே தொலைந்த உணர்வு ஏற்படுவது ராதாமோகனின் வெற்றி.
60 வயது மாநிறம் – அரிதான அனுபவம்..!
– வேணுஜி