சமீபத்தில் இப்படி ஒரு ஹாரர் படம் பார்த்ததில்லை. வழக்கமாக இது போன்ற ஹாரர் படங்களில் ஒரு ஆவி யாரையாவது பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும். இதில் அந்த வேலையை தெய்வத்துக்கு எதிரான சாத்தான் செய்கிறது.
இந்தியாவை மேலைநாட்டவர்கள் ஆண்ட காலத்தில் இருந்தே இது போன்ற சாத்தான் வழிபாட்டு நம்பிக்கைகள் இருந்து வந்ததை தொடக்கத்தில் கதையாகச் சொல்கிறார்கள். கடவுளை நம்பாதவர்கள் சாத்தானை வழிபட்டு, இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்று நிருபித்ததாக சொல்லப்படும் ஒரு புத்தகம், அதை பயன்படுத்திய மாந்திரீகரோடு புதைக்கப்படுகிறது.
இதெல்லாம் நடந்து நூற்றாண்டுகள் கடக்க கதை நடக்கும் சமயம் அஸ்தினாபுரம் என்ற ஊரில் மீண்டும் இந்த சாத்தான் வழிபாடு தலை தூக்குகிறது. அதைத்தொடர்ந்த நரபலிகளும் நடந்து முடிய… எல்லாம் முடிந்தது என்று நம்பும் நேரத்தில் ஒரு வீட்டில் தொடங்குகிறது கதை.
தன் மகளுடன் வாழ்ந்து வரும் கர்ப்பிணியான நடிகை மோனபத்ரேவின் வீட்டுக்குள் தாழிடப்பட்ட ஒரு அறைக்குள் இருந்து வினோதமான ஒரு கிழவி அலறும் ஒலிகள் வந்து கொண்டிருக்க, அதற்கு உணவு அளித்து வருகிறார் அவர்.
அத்துடன் மோன பத்ரேவின் நடவடிக்கைகளும் சந்தேகத்திற்கு இடமாக இருக்கின்றது. இப்படி சில ஆண்டுகள் கழிய அவரது மகள் ஐரா பருவ வயதை எட்டி பள்ளியில் படித்துக் கொண்டிருக்க, ஐராவின் தங்கைக்கு வாய் பேச முடியாமல் இருக்கிறது.
இந்நிலையில் மோன் பத்ரேவின் அட்டகாசங்கள் அதிகமாக ஊர் மக்கள் அவரை விரட்டும் நிலைக்கு ஆளாகிறார்கள். இது நாயகி ஐராவுக்கும் அவர் தங்கைக்கும் பெருத்த மன உளைச்சலை ஏற்படுத்த ஐராவை ஒருதலையாய் காதலிக்கும் பள்ளித் தோழன் எஃப் ஜே அவரது நிலை அறிந்து உதவ முன் வருகிறான்.
அதேபோல் எதற்கும் அஞ்சாத ஒரு இன்ஸ்பெக்டரும் இந்த மர்மத்தின் முடிச்சை அறிய ஆசைப்பட்டு அவரும் எஃப் ஜேவுமாக சேர்ந்து சாத்தானை பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள முற்படுகிறார்கள். அதன் முடிவு என்ன என்பதுதான் கதை.
இப்பொழுதெல்லாம் பள்ளி மாணவனாக நடிப்பது நாயகர்களுக்கு தண்ணீர் பட்ட பாடாக இருக்கிறது. அப்படியே இதில் பள்ளி மாணவனாக வரும் எஃப்.ஜெ, அந்த கேரக்டரில் சரியாக பயணித்திருக்கிறார். ஆரம்பத்தில் ஐராவுக்கு உதவ எண்ணம் கொண்டு, பின்னர் அவரும் அந்த பயங்கர சூழலில் மாட்டிக் கொள்ளும் போது பரிதாபமாக இருக்கிறது.
பள்ளி மாணவியாக நடித்திருக்கும் நாயகி ஐராவின் நிலை அதைவிட கொடுமையாக இருக்கிறது. அம்மாவையே வீட்டுக்குள் பூட்டி வைத்து விட்டு வரும் அவர் தன் குடும்ப சூழ்நிலைகளால் காதலையும் ஏற்க முடியாமல் தவிக்கிறார்.
படத்தில் அதிகம் கவர்வது ஐராவின் அம்மாவாக நடித்திருக்கும் மோன பத்ரேதான். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அவரை நேரில் பார்த்தால் கூட படம் பார்த்தவர்கள் அவரிடம் பேச பயப்படும் அளவுக்கு மிரட்டி இருக்கிறார் – அபாரமான நடிப்பு..!
டைட்டிலில் பெயர் இருக்கிறது – ஆனால் சாந்தினி தமிழரசனை காணோமே என்று பார்த்தால் இரண்டாவது பாதியில் படம் முடிவதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னால் வருகிறார். ஆனால் கொஞ்ச நேரமும் கூட அவர்தான் கதையை நடத்துபவராக இருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக வருபவருக்கு பாராட்டுக்கள். ஊரில் எல்லோரும் பயப்பட… அவர் ஒருவர் மட்டும் பயப்படாமல் நடித்து தைரியம் அளிக்கிறார்.
ஒளிப்பதிவாளர் பாலா ஜி.ராமசாமி, அந்த கிராமத்தையே ஒரு திகில் சூழ படமாக்கி இருக்கிறார்.
அஷ்வின் கிருஷ்ணாவின் இசை படத்தை ஆக்கிரமித்து இருக்கிறது. ஆனால் ஹாரர் படங்களில் நிசப்தமே இதைவிட பயப்பட வைக்கும் என்பதை அவர் உணர வேண்டும்.
எழுதி இயக்கியிருக்கும் மணிகண்டன் ராமலிங்கம், தான் பார்த்த அனைத்து ஹாரர் படங்களின் காட்சிகளையும் புனைந்து ஒரு கதையை உருவாக்கி இருக்கிறார், அதற்காக நிறைய ஆராய்ச்சிகளும் செய்து இருக்கிறார் என்பது புரிகிறது.
ஆனால் அதை நறுக்கு தெரிந்த மாதிரி புரியும் விதத்தில் சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆரம்பத்தில் அவசர அவசரமாக சொல்லப்படும் கதையை நாம் மனதில் வாங்கிக் கொள்வதற்குள் படம் வேறு இடத்துக்கு போய் விடுகிறது.
இந்த முதல் பாகமே கிட்டத்தட்ட 2:30 மணி நேரத்துக்கு பயமுறுத்த இதன் இரண்டாம் பாகம் பார்த்தால்தான் இந்த கதையே முடிவுக்கு வரும் என்கிற நிலையாக முதல் பாகம் முடிவு பெறுகிறது.
ஆக… புரியாத கதை பாதியிலேயே நிற்க அடுத்த பாகத்துக்கு நாம் காத்திருக்க வேண்டி வருகிறது.
சாத்தான் – தெய்வத்தை நம்பியவன் தோத்தான்..!
– வேணுஜி