February 1, 2026
  • February 1, 2026
Breaking News
January 31, 2026

காந்தி டாக்ஸ் திரைப்பட விமர்சனம்

By 0 21 Views

இந்த காந்தி தேசத்தில் முழுவதும் காந்திதான் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் அது எப்படி என்பதுதான் படத்தின் அடிநாதம்…

மும்பையில் நடக்கிறது கதை. குடிசைப் பகுதியில் பரம ஏழையாக வாழ்ந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கும், அதே முமபையில் கோடீஸ்வரராக வாழ்ந்து கொண்டிருக்கும் அரவிந்தசாமிக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை பணம்தான். 

கொள்ளையடித்தாவது பணத்தை சம்பாதித்தாக வேண்டும் என்ற நிலையில் இருக்கும் விஜய் சேதுபதியையும், இருக்கும் அத்தனை சொத்தும் கைவிட்டு போன நிலையில் தனது பங்களாவும் ஏலத்துக்கு வந்து நிற்கும் அரவிந்தசாமியையும் தேவை ஒரு புள்ளியில் கொண்டு வந்து நிறுத்துகிறது. 

அவர்கள் என்ன செய்தார்கள்… அவர்கள் பிரச்சனையிலிருந்து மீள முடிந்ததா..? என்பதையெல்லாம் படத்துக்குள் ஒருவரையும் பேசவிடாமல் படம் எடுத்து இருக்கிறார் இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பெலகர்,

ஏழையான வேடத்தில் நடிப்பது விஜய் சேதுபதிக்கு ஒன்றும் புதிது அல்ல. பணம் தான் அவரால் சம்பாதிக்க முடியவில்லை தவிர நம் பரிதாபத்தை சம்பாதித்து விடுகிறார்.

அதிதி ராவுடனான மெல்லிய காதலும் அவருக்கு படத்தில் உண்டு.

விரக்தியின் விளிம்பில் எனக்கு இல்லாத வீடு இனி ஒருவருக்கும் கிடைக்கக் கூடாது என்று அரவிந்தசாமி எடுக்க முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. தன் தோல்வியின் ஒவ்வொரு கட்டத்தையும் அரவிந்தசாமி தனது நடிப்பாற்றலால் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நம்மை சிரிக்க வைக்க முயற்சி செய்யும் சித்தார்த் ஜாதவ், சில இடங்களில் மட்டுமே வெற்றி அடைகிறார்.

குடிசைப் பகுதிகளில் புகுந்து வரும்போது கரண் பி.ராவத்தின் கேமரா நகர்வதற்கும், அரவிந்தசாமியின் மாட மாளிகையில் இயங்குவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. 

படத்தில் வசனம் இல்லாமல் போனதால் அந்த வேலையை தானே எடுத்துக் கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஏதோ ஒரு ஹாலிவுட் படம் பார்ப்பது போன்ற பிரமையை இசை புயலின் இசை ஏற்படுத்துகிறது. 

வசனம் இல்லாத படத்தில் பாடல்கள் மட்டும் எப்படி வரலாம் என்பது புரியவில்லை.

ஆர் டைரக்டர் துர்கபிரசாத் மஹாபத்ராவுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

எழுதி இயக்கியிருக்கும் கிஷோர் பாண்டுரங் பெலகர், கமலின் பெரிய ரசிகர் போல் இருக்கிறது. 

வசனம் இல்லாத விதத்தில் மற்றும் விஜய் சேதுபதியின் கதாபாத்திர வடிவமைப்பில் பேசும் படம் நினைவிற்கு வருகிறது. அதேபோல் அரவிந்தசாமியின் பாத்திரப்படைப்பு உயர்ந்த உள்ளம் கமலை நினைவுபடுத்துகிறது. கூடவே நம்மவர், ஹேராம் படங்களின் நினைவும் அங்கங்கே வந்து போகிறது.

காந்தி என்ற அவர் சொல்வது எல்லாம் காந்தி படம் போட்ட பணத்தைதான். பணம்தான் எல்லா இடத்திலும் பேசுகிறது என்பதைத்தான் அப்படி ஜாடை மாடையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

அத்துடன் இந்த படத்துக்கு ஏன் வசனம் தேவை இல்லை என்பது புரியவில்லை. அதற்கான சாத்தியம் படத்தில் இருப்பதாகவும் தெரியவில்லை. தேவையே இல்லாமல் எல்லோரும் செய்கையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

அதைத் தவிர்த்து யாரும் பேசாமல் இருப்பதற்கான சாதகங்களை மற்றும் சாத்தியங்களை படத்தில் அவர் கொடுத்திருந்தால் பேச மறந்து கொண்டாடி இருக்கலாம்.

காந்தி டாக்ஸ் – பேசப்படும்..!

– வேணுஜி