September 10, 2026
  • September 10, 2026
Breaking News
September 7, 2026

ஐ’ம் கேம் திரைப்பட விமர்சனம்

By 0 3 Views

படத்தின் தலைப்பு மற்றும் ட்ரெய்லரை பார்த்தவர்களுக்கு இது ஏதோ Money Heist படமாகத்தான் இருக்கும் என்றுதான் தோன்றும். படமும் அப்படித்தான் ஆரம்பிக்கிறது. ஆனால் அதுவே முழுக்கதை அல்ல.

குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்படும் பெரிய வீட்டு பிள்ளையான துல்கர் சல்மான் சூதாட்டங்களில் ஈடுபட்டு பல கோடி ரூபாய் கடனாளியாக நிற்கிறார். சொந்தத் தொழில் ஆரம்பித்துக் கொடுத்தும் அதில் திறமையைக் காட்டாமல் இப்படி சூதாடிக் கொண்டு அலைவதை அவரது அப்பா கடுமையாக கண்டிக்க, அம்மாவோ கையில் இருக்கும் பணத்தை கொடுத்து கடன்களை அடைக்கச் சொல்கிறார்.

ஆனால் அந்தப் படத்தையும் சூதாடி தோற்கும் துல்கர் இழந்த பணத்தை திருடிக் கொண்டு தப்பிக்கும் வேளையில் விபத்தில் சிக்கி வலது கையை இழக்கிறார். அதனால் அவருக்கு ஒரு மாற்றுக்கை பொருத்துகிறார்கள்.

அது பெரிய மாற்றத்தை தர கிரிக்கெட் சூதாட்டத்தில் பெரும் பணம் அவருக்கு கிடைக்கிறது. ஆனால் அந்த சந்தோஷம் கொஞ்ச நாள்தான் நீடிக்கிறது. அந்த மாற்றுக்கை தன் போக்கில் செயல்பட்டு அவர் சொல்வதைக் கேட்க மறுக்கிறது. 

அத்துடன் பிரிமியர் லீக் போட்டிகளில் சென்னை அணி உரிமையாளரான மிஷ்கினை கொல்லத் துடிக்கிறது.

இதன் விளைவாக துல்கருக்கு மிஷ்கின் வில்லனாவதுடன் அதன் விளைவுகளை ஆராயப் போகும்போது பிரிமியர் லீக் சென்னை அணி குறித்த அபாயகரமான தகவல்கள் துல்கருக்கு கிடைக்கிறது. 

இந்த விஷயங்கள் அவரை எங்கே கொண்டு போய் நிறுத்தின… தன்னிச்சையாக செயல்படும் துல்கரின் கை நினைத்ததை சாதித்ததா.? என்பதெல்லாம் பின் பாதிக்கதையில்.

பெரிய வீட்டுப் பிள்ளையாக நடித்திருக்கும் துல்கர் சல்மான், நடை உடை பாவனை என்று அத்தனை அம்சங்களிலும் தன் பாத்திரத்தை நிலை நிறுத்தி இருக்கிறார். அத்துடன் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் அவரது தீய எண்ணத்தை நடிப்பின் மூலமே வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு. 

ஆனால் மாற்றுக்கை பொருத்தப்பட்டதும், அவரது வாழ்க்கைக்குள் நாயகி கயாடு லோகர் வந்ததும் அந்த நடிப்பில் நம்பிக்கையான மாற்றங்கள் தெரிவது நயம்.

நாயகியாக நடித்திருக்கும் கயாடு லோஹர், அழகிலேயே அள்ளிக் கொண்டு போகிறார். இவர் நடித்தால் என்ன… நடிக்காவிட்டால் என்ன… திரையில் வந்தாலே போதும் என்கிற அளவில் தேவையான நடிப்பையும் வழங்கி இருப்பது அழகுக்கு அழகு.

மிஷ்கின் தோற்றமும், உடல் மொழியும், நடிப்பும் மிகவும் பயமுறுத்துகின்றன. தான் நினைப்பது நடக்கவில்லை என்றால் வெறி கொண்ட மிருகமாக அவர் மாறுவது டெரர்..!

அது என்னவோ மலையாள தயாரிப்புப் படங்களில் தமிழர்களையே வில்லனாகுகிறார்கள். மிஷ்கின் மெயின் வில்லனாக இருக்க இன்னொரு வில்லனாகிறார் சென்னை பிரீமியர் லீக் அணியின் கேப்டனாக வரும் கதிர்.

ஆண்டனி வர்கீஸ் இடம்பெறும் பிளாஷ்பேக் நெகிழ்ச்சியானது. மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன், வினய் ஃபோர்ட் தங்கள் பாத்திரங்களில் பளிச்சிடுகிறார்கள்.

இது போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவுதான் முதுகெலும்பு என்று இருக்க, கிரிக்கெட் போட்டிகளையும் அது தொடர்பான சூதாட்டக் களங்களையும் அற்புதமாக படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜிம்ஷி காலித்.

ஜேக்ஸ் பிஜாய் இசையில் பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி… உயிர்ப்புடன் ஒலித்து இருக்கின்றன..!

நம்பவே முடியாத கதைதான் என்றாலும் அதை நம்ப வைப்பதில் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார்கள் திரைக்கதையை எழுதி இருக்கும் சஜீர் பாபா, பிலால் மொய்து, இஸ்மாயில் அபூபக்கர்.

கதை எழுதி இயக்கியிருக்கும் நஹாஸ் ஹிதாயத், நம்மை சூதாட்ட களத்திற்குள் அழைத்துச் சென்று நன்றாகவே அவற்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதிலும் கிரிக்கெட் சூதாட்டங்கள் குறித்து நிறைவே ஹோம் ஒர்க் செய்திருப்பார் போலிருக்கிறது.

இப்படி ஒரு களத்துக்குள் ஹீரோயிசம், வில்லனிசம் கொஞ்சம் திரில், கொஞ்சம் ஆக்சன் எல்லாம் கலந்து ஒரு பொழுதுபோக்கு படத்தை நியாயமாக தந்திருப்பதில் அவரைப் பாராட்டலாம். 

ஐ’ம் கேம் – வின்னர் ஆன லூசர்..!

– வேணுஜி