வங்கிப் பணியாளர்கள் மக்களுடைய பணத்தை எப்படி எல்லாம் கையாடலாம் என்று சொல்லும் தெகிடி என்றொரு படம் வந்தது. அதில் விட்ட விஷயங்களை எல்லாம் இரு வாரங்களுக்கு முன்பு வந்த லக்கி பாஸ்கர் சொன்னது.
அதில் எல்லாம் சொன்னதைக் காட்டிலும் கூட வங்கி பணத்தைக் கையாடல் செய்ய முடியும் என்று சொல்லி இந்தப் படம் வந்திருக்கிறது.
‘மைண்ட் கேம்’ என்று சொல்லக்கூடிய மூளைக்கான வேலைதான் படத்தின் அடிநாதம்.
வங்கி ஒன்றில் பணியாற்றும் நாயகன் சத்ய தேவ், பணத்தைக் கையாளுவதில் அல்லது கையாடல் செய்வதில் எவ்வளவு பெரிய கில்லாடி என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறார்கள். மற்றொரு வங்கியில் பணியாற்றும் காதலி பிரியா பவானி சங்கரின் பிரச்சனைக்காக நாலு லட்ச ரூபாயை கையாடல் செய்து உதவுகிறார்.
இவர் பலே கில்லாடி என்றால் அதைவிட கில்லாடியான யாரோ அதே வங்கி கணக்கில் இருக்கும் ரூ.5 கோடியை சத்ய தேவ் பெயரில் மோசடி செய்து எடுத்து விடுகிறார்கள். அந்தப் பிரச்சனையில் இரந்து எப்படி விடுபடுவது என்று தெரியாமல் சத்ய தேவ் விழிக்க, இன்னொரு கதையாக வில்லன் சுனிலுக்கும், வில்லாதி வில்லன் டாலி தனஞ்செயாவுக்கும் நடக்கும் ஈகோ கிளாஷ் ஒன்றும் சொல்லப்படுகிறது.
இந்த இரண்டு லைனுக்கும் உள்ள முடிச்சு தான் கதையின் முடிச்சு.
படம் முழுவதும் வங்கிப் பணியாளராகவே வருகிறார் நாயகன் சத்யதேவ். அவருக்கு என்ன வேடமோ அதில் எள்ளளவும் குறையாமலும் மிகாமலும் அற்புதமாக நடித்திருக்கிறார். தன்னை யாரோ சதியில் சிக்க வைக்கிறார்கள் என்று அவர் பதட்டப்படும் காட்சிகள் எல்லாம் நமக்கே பதட்டத்தை ஏற்படுத்துகிறது.
கிட்டத்தட்ட ஹீரோவுக்கு ஈடான வேடம் வில்லன் டாலி தனஞ்செயாவுக்கு, அவரது ஸ்டைலும் நடிப்பும் வேற லெவல்.
அவரையே பதற்றப்படுத்தும் வில்லனாக சுனில் நடித்திருப்பதும் அட்டகாசம். ஒருவர் குடுமி ஒருவர் கையில் என்று இருவருக்குமான பாத்திரப் படைப்பை அமைத்திருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்.
‘ஏ டூ ஒய் பாபா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜ் ஏன் ‘ஏ டு இஸட் ஆகவில்லை என்பது லகலக.
ஜெனிபர், சுரேஷ் மேனன் என பிற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கூட அசத்தலான பாத்திரங்களில் ஒன்றி இருப்பது இயக்குனரின் திறமையே.
சத்யா பொன்மரின் ஒளிப்பதிவு படத்துக்கு உடல் என்றால், ரவி பஸ்ரூரின் பின்னணி இசை படத்துக்கு உயிர்.
நம் பணம் வங்கியில் பத்திரமாக இருக்கிறதா என்கிற அளவுக்கு நம்மை பயமுறுத்தி இருக்கிறார் எழுதி இயக்கியிருக்கும் ஈஷ்வர் கார்த்திக். படத்தில் காட்டி இருப்பதெல்லாம் உண்மையோ பொய்யோ ஆனால் நாம் கவனமாக இருக்க வேண்டியதை இப்படத்தின் மூலம் நமக்கு உணர்த்தி இருக்கிறார்.
லாஜிக் மீறல்கள் இருந்தாலும் விறுவிறுப்பான கதை சொல்லல் படத்தைத் தூக்கி நிறுத்தி இருக்கிறது. ஆனால் முதல் பாதியில் நடந்தவையே இரண்டாவது பாதியிலும் நடந்து கொண்டிருப்பது சற்று அலுப்பு.
ஆனாலும் ஜீப்ரா… இந்த வார ரேஸில் முதலிடம் பிடிக்கிறது.