வெற்றி பெறுவது முக்கியம் அல்ல – வெல்ல முடியாது என்று தெரிந்தும் பெரும்பலம் கொண்ட எதிரியுடன் மோதுவதே வெற்றிதான். இந்த விஷயத்தைதான் ஏழாம் நூற்றாண்டில் நடந்ததாகச் சொல்லப்படும் சரித்திரப் புனைவின் வழியாக உணர்த்துகிறார் இயக்குனர் தரணி ராசேந்திரன்.
‘சோழர்கள் மீண்டும் வந்து விட்டார்கள்’ என்கிற பதாகையோடு உலகெங்கிலும் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கும் கல்கி எழுதி மணிரத்தினம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் அதிர்வலையை கிளப்பிக் கொண்டிருக்க, சந்தடி இல்லாமல் பாண்டிய பேரரசின் கதையை, தானே ஆய்வுகள் மேற்கொண்டு புனைவாக உருவாக்கி அதை படமாக்கியும் காட்டியிருக்கிறார் இயக்குனர்.
அந்த கெத்துக்கு அவருக்கு ஒரு பூங்கொத்து கொடுத்து படத்தின் நிறைகுறைகளைப் பார்க்கலாம்.
ஏழாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் சேர சோழர்களை எல்லாம் வென்று தனிப் பெரும் அரசாக பாண்டியப் பேரரசை நிறுவி தன் பலத்தை உணர்த்துகிறான் ரணதீர பாண்டியன்.
எஞ்சி இருந்த சோழர்களும் அவர்களுக்காக போரில் ஈடுபட்ட பழங்குடிகளான எயினர்களும் காடுகளில் தஞ்சம் புகுந்து வேட்டையாடி உயிர் வளர்த்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சோழர்களே இனி பாண்டியனை எதிர்க்க முடியாது என்கிற நிலையில் மிகச் சிறிய பழங்குடி எயினர் கூட்டத்துக்கு தலைமை தாங்கும் கொதி என்கிற இளைஞன் கொதித்தெழுந்து பாண்டிய பேரரசை வீழ்த்த சபதம் கொள்வதுதான் கதை. அதன் விளைவுகள் என்ன என்பதைக் கண் முன்னால் காட்டி இருக்கிறார் இயக்குனர்.
படத்தின் சிறப்பு எயினர்கள் கூட்டத்தின் சாமியாடியாக வரும் குரு சோமசுந்தரத்தைத் தவிர ஒரு முகமும் நாம் இதுவரை அறிந்திராத புது முகங்கள் என்பதுதான்.
எயினர் இனத் தலைவன் கொதியாக சேயோனும், ரணதீர பாண்டியனாக சக்தி மித்ரனும் வேடமேற்றிருக்கிறார்கள். இயல்பிலேயே இருவரும் கட்டுறுதி மிக்க உடற்கட்டுடன் இருப்பதே அவர்களை வீரர்களாக ரசிக்க வைக்கிறது.
இருவரும் உணர்ச்சிவசப்பட்டெல்லாம் நடிக்க முயலவில்லை – இயல்பான உணர்ச்சி வெளிப்பாடுகளிலேயே அவர்களின் மனநிலையை நாம் புரிந்து கொள்வது அவர்களின் ஆற்றல் மட்டுமல்ல … அந்த ஆற்றலை வெளிக் கொண்டு வந்த இயக்குனரின் ஆற்றலும்தான்.
குறிப்பாக கொதியாக வரும் சேயோன் சோழர்களும் கைவிட்ட நிலையில் தானே சபதம் எடுத்து ஒவ்வொரு முன்னெடுப்பையும் கச்சிதமாக எடுத்து ஒரு கட்டத்தில் பாண்டியன் கோட்டைக்குள்ளேயே புகுந்து அவன் அரியணையில் அமரும் பெருமிதம் ரசிக்க வைக்கிறது.
பாலை நிலத்தில் வேட்டையாடியே கழித்த வெம்மையை சோழர் தேசத்தின் வயல்களில் விளைந்திருக்கும் நெற்கதிர்களை கண்களை மூடி கன்னத்தில் வருடி போக்கிக் கொள்ளும் போது புரிகிறது.
ஒரே நாளில் அரச வாழ்வின் அத்தனை போகங்களையும் அனுபவித்து விடும் வேகமும் அதை விமர்சனம் செய்யும் வீரனை அடித்து விரட்டி விடுவதுமாக சுயநலத்தையும் காட்ட அவர் தவறவில்லை.
எதிர்பாராத கணப்பொழுதில் தன் ராஜ்ஜியம் கைவிட்டு போக அந்த நிலையிலும் பதட்டப்பட்டு விடாமல் ஒரு பெரும் வீரனாக அடுத்தடுத்த அடிகளை கவனமாக வைத்து ஆட்சியை மீட்கும் ரணதீரன், சக்தி மித்திரனும் ரசிக்க வைக்கிறார்.
“யாராலும் அசைக்க முடியாத பாண்டிய அரசையே அசைத்துப் பார்த்துவிட்ட அவன் ஒரு மாவீரன்தான்… அவனுக்கு வீர மரணத்தை பரிசாக அளிப்பேன்..!” என்ற உறுதியுடன் அதற்கு என்ன விலையும் தரத் தயாராக பெரும்பள்ளி பழங்குடியினப் பெண்ணையும் மணந்து கொள்ளும் ரணதீரனின் ராஜதந்திரத்தை மெச்சலாம்.
நேருக்கு நேர் மோதும் கடைசிக் காட்சியில் முறைப்படி வாளேந்திப் போரிட்டுப் பழக்கமில்லாத சேயோனுடன் மோத தன் வாள், கேடயத்தையும் தூக்கி எறிவது மட்டுமல்லாமல் தன் மார்புக் கவசத்தையும் கழற்றி வீசும் ரணதீரன் மாவீரனாகத் தெரிகிறார்.
நடந்த வரலாற்றுக்கு சாட்சியாக எஞ்சி இருக்கும் எயினர் இனக் குழுவின் மூத்த குடியாக வரும் சந்திரகுமார் விவரிப்பில் கதை தொடங்குகிறது.
சாமியாடியாக வரும் குருசோம சுந்தரம் இறை சக்திக்கு காணிக்கையாக கோழி, ஆடு, மாடு இவற்றுடன் நர பலியும் கொடுக்கும் கட்டம் பதற வைக்கிறது. அதைப் பார்க்கும் ஒரு கிழவியின் கண்ணில் மட்டும் வழிந்து ஓடும் கண்ணீர் பலி கொடுக்கப்படும் வீரனின் தாயாக இருக்கலாம் என்று சந்தேகிக்க வைக்கிறது.
பெரும்பள்ளி இனக்குழுவின் தலைவியாக வரும் சுபத்ரா சமயோசிதமாக தங்கள் இனக் குழந்தை அரசனின் வித்தாக இருக்க வேண்டும் என்று விரும்பி தன் இனப் பெண்ணை ரணதீரனுக்கு மணமுடித்து வைப்பது ராஜ தந்திரத்தை மீறிய மானுட தந்திரம்.
காத்திருந்தவன் – நேற்று வந்தவன் யாருடைய இச்சைக்கும் சிக்காத தேவரடியாராக வரும் ராஜலட்சுமி இயல்பான அழகில் ஆட்கொள்கிறார். பெண்ணுரிமை குறித்து ஏழாம் நூற்றாண்டிலேயே சிந்தித்த பெண்ணியவாதியான அவர் எடுக்கும் முடிவு அழுத்தமானது.
ஹாலிவுட் படங்களின் டிராக்குகளை அப்படியே பயன்படுத்தி விட்டாரோ என்று எண்ண வைக்கிறது சக்ரவர்த்தியின் பின்னணி இசை. பாடல்களுக்கான இசையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
அகிலேஷ் காத்தமுத்துவின் ஒளிப்பதிவு கோணங்களில் இயல்புத்தன்மை மாறாமலும், போர் காட்சிகளை சிறப்பாகவும் காட்டி இருக்கிறது. இந்த 4k யுகத்தில் துல்லியம் மட்டும் கொஞ்சம் மிஸ்ஸிங்.
கலை இயக்குனரும் இருப்பதைக் கொண்டு வடிவமைத்திருப்பதில் இயல்புத்தன்மை மாறாமல் இருக்கிறது. ஆனால் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்ட காட்சிகள்தான் இது பட்ஜெட் படம் என்பதை பறைசாற்றி விடுகிறது.
ஏழாம் நூற்றாண்டில் என்ன விதமான தமிழ் பேசி இருப்பார்கள் என்பதை ஆராய்ந்து அதை உரையாடலாக எழுதிப் பேசி நடிக்க வைத்திருக்கும் இயக்குனரின் திறமை பிரமிக்க வைக்கிறது. தமிழுக்கே தமிழில் சப் டைட்டில் போட நேர்வது இந்தப் படத்தில்தான்.
ஆனாலும் இப்படியான தமிழைத் தமிழ்ப் படமின்றி வேறு எந்த மொழிப் படத்தில் தான் பயன்படுத்தியிருக்க முடியும்..?
படத்தின் கருவைப் போலவே இந்த பான் இந்திய படங்களின் யுகத்தில் பிற பிரம்மாண்ட முயற்சிகளுடன் போரிட்டு களம் காண முயன்றிருப்பதே இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கான வெற்றிதான்.
யாத்திசை என்பதன் பொருள் தென்திசை என்று அறிக.
பட்ஜெட் கிடைத்திருந்து இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் ஆஸ்கர் கதவையே கூட இந்த படம் தட்டி இருக்க இயலும்.
இரண்டாம் பாகத்துக்கான சாத்தியத்துடன் படம் முடிகிறது. அதை தமிழ் ரசிகர்கள்தான் சாத்தியப்படுத்த வேண்டும்.
யாத்திசை – திறமைசாலிகளின் சேர்ந்திசை..!
– வேணுஜி