July 19, 2025
  • July 19, 2025
Breaking News
July 19, 2025

யாதும் அறியான் திரைப்பட விமர்சனம்

By 0 14 Views

‘ அறியான் ‘ என்று ஒரு படம் வந்தது – அதற்குப்பின் ‘ பயம் அறியான்’ என்றொரு படம் வந்தது. இப்போது இந்த ‘ யாதும் அறியான்..!’ 

தமிழில் தலைப்புக்கு அத்தனை பஞ்சமா இயக்குனர் பெருமக்களே? யாம் அறியோம் பராபரமே..!

தலைப்புக்கே மெனக்கெடாதவர்கள் படத்தை எப்படி எடுத்து இருப்பார்கள் என்கிற எதிர்பார்ப்புடன் (!) தான் படத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறோம். 

10, 15 நிமிடங்களுக்குள் முடியக்கூடிய ஒரு குறும்படத்தை ஒன்றே முக்கால் மணி நேரத்திற்கு நெடும்படமாக நீட்டித்திருக்கிறார் இயக்குனர் எம்.கோபி..!

இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகும் நாயகன் தினேஷ்… (நாயகன் பெயருக்கும் பஞ்சமா..? ஏற்கனவே கோலிவுட்டில் ‘அட்டக்கத்தி’ தினேஷ்  இருக்கிறாரே..?) நாயகி பிரானாவுடன் நெருக்கமாக இருக்க ஆசைப்படுகிறார். ஆனால் பிரானாவோ பக்கத்தில் நெருங்க விடாமல் அவரைத் துரத்த… நண்பன் ஆனந்த் பாண்டியின் யோசனைப்படி பிரானாவை அழைத்துக் கொண்டு காட்டு பங்களாவுக்கு டூர் செல்கிறார். அவருடன் ஆனந்த் பாண்டியும் அவரது காதலி ஷியாமலும் வருகிறார்கள். 

அன்றைக்கு பிரானாவுக்கு பிறந்தநாள் ஆக இருக்க, ஒரு ‘ஷாக்’ குடன் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடிவிட்டு அவருடன் உறவு கொள்ள முயற்சிக்கிறார் தினேஷ். 

ஆனால் பிரானாவோ அதற்கு ஒத்துழைக்க மறுக்கிறார். நெடுநேர போராட்டத்திற்கு பின் (அதாவது இடைவேளை வரும் வரை…) பிரானாவை சம்மதிக்க வைத்து உறவு கொள்ளும் தினேஷுக்கு பேரதிர்ச்சி..! அதைத்தொடர்ந்து மேலும் அதிர்ச்சிகள் அதிகரிக்க, அந்த அப்பாவி தினேஷ், அடுத்தடுத்த காட்சிகளில் மகா பாவியாக மாறிவிடுகிறார். 

இதன் முடிவு எப்படித்தான் இருக்கும் என்று யூகிக்க முடியாத அளவில் சில பின்னல்களை போட்டுவிட்டு, அதை அவிழ்க்கத் தெரியாமல் ஒரு மாதிரி படத்தை குழப்பமாக முடிக்கிறார் இயக்குனர்.

அல்ப ஆசை கொண்ட அப்பாவியான வேடத்துக்கு தினேஷ் பொருத்தமாக இருக்கிறார். அடுத்தடுத்து அவர் நடந்து கொள்ளும் விதமும், நடிப்பும் சற்று சைக்கோவாக அவரை எண்ண வைக்கிறது. கடைசியில் அவர் ஒரு மனநல மருத்துவரிடம் வந்து சேர்வதால் அந்த நடிப்பு நியாயம் பெறுகிறது. 

முதல் படத்தில் தேறிவிட்ட தினேஷ் அடுத்தடுத்த படங்களைத் தனக்கேற்றவாறு எப்படித் தேர்ந்தெடுக்கிறார் என்பதில்தான் அவரது எதிர்காலம் இருக்கிறது.

சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்த பிரானாவுக்கு இதில் கதாநாயகியாக பிரமோஷன். தன்னைத் தொட விடாமல் தினேஷுக்கு கண்டிஷன் போடும் அளவுக்கு அவருக்கு என்ன பிரச்சனை என்பதைக் கடைசி வரை சொல்லவே இல்லை.

தினேஷின் நண்பராக நடித்திருக்கும் ஆனந்த் பாண்டிக்கு பெரிய வேலை இல்லை, அவரது காதலி ஷ்யாமல், நமது கண்களைக் கொஞ்சம் குளிர்விக்கிறார்.

காட்டு பங்களா காப்பாளராக வரும் அப்புக்குட்டிக்கு அங்கங்கே நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது . தினேஷ் அறைக்குள் பிணங்களை முதலிலேயே பார்த்துவிடும் அவர், அந்த அறைக்குள் தினேஷ் அழைப்பின் பேரில் செல்லும்போது தயக்கத்தையும், பதற்றத்தையும் நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார்.

மனநல மருத்துவராக வரும் தம்பி ராமையா தம் கட்டிப் பேசினாலும் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது தம்பிடி கூட நமக்குப் புரியவில்லை.

ஒளிப்பதிவாளர் எல்.டி, தனக்கு ஒதுக்கப்பட்ட சின்ன ஏரியாவில் எப்படி எல்லாம் படம் பிடிக்க முடியுமோ அப்படி எல்லாம் முயற்சி செய்திருக்கிறார்.

தர்ம பிரகாஷ் இசையின் தரமும் அப்படியே.

இயக்குநர் எம்.கோபி, விஜய்யின் ரசிகராக இருப்பதால் 2026 -ம் ஆண்டில் விஜய் முதல்வராக இருப்பது போல் செய்திகள் வருவதாக கற்பனை செய்து இருக்கிறார். 

ஆனால் அந்தச் செய்தியில் “இனி தமிழ்நாட்டில் எதற்கும் இலவசம் இல்லை..!” என்று விஜய் அறிவிப்பதாகக் கூறி இருப்பதில் அவருக்குக் கிடைக்க வேண்டிய ஓட்டுகளைக் கணிசமாகக் குறைத்தும் இருக்கிறார்.

இலவசம் இல்லாத தமிழ்நாடா..? வாய்ப்பில்லை ராஜா..!

யாதும் அறியான் – பட்ஜெட் திகில்..!

– வேணுஜி