போலீஸ் கதைகளில் இதுவரை நல்ல போலீஸ், தீய போலீஸ் என்று இரண்டு வகை போலீஸைத்தான் காட்டியிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் போலீஸ் எப்படி இயங்குகிறார்கள் என்று சொன்ன படங்கள் குறைவு. அந்த வகையில் தமிழ் சினிமாவில் தொடாத இரண்டு போலீஸ் விஷயங்களை முன்னிறுத்தி இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார் புதுமுக இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப்.
அவை பல காலமாக கேட்கப்பட்டு வரும் போலீஸ் சங்க விவகாரம் ஒன்று. இன்னொன்று நெருக்கடிக்குள்ளாக்கப்படும் காவலர்களின் தற்கொலை. இதற்காகவே பிராங்க்ளினைப் பாராட்டலாம்.
திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ரைட்டராக பணிபுரியும் சமுத்திரக்கனி காவலர்களுக்கு தனி யூனியன் வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடிக்கொண்டிருக்க, அதற்காகவே ஓய்வு பெறும் நிலையில் சென்னைக்கு மாற்றம் செய்யப்படுகிறார். அங்கும் சமுத்திரக்கனிக்கு ரைட்டர் வேலை கொடுக்காமல் ஒரு கேஸ் விஷயமாக காவல் நிலையத்தில் இல்லாமல் லாட்ஜில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஹரியை பார்த்துக் கொள்ளும் வேலை கொடுக்கிறார்கள்.
உயர் அதிகாரியின் தலையீட்டால் சமுத்திரகனி உதவியுடன் ஹரியை பொய் வழக்கில் போலீசார் கைது செய்கிறார்கள். ஒரு கைதியைக் கை நீட்டி அடித்தாலே வருத்தப்படும் சமுத்திரக்கனிக்கு குற்ற உணர்ச்சி மேலிட ஹரியை பொய் வழக்கில் இருந்து மீட்க நினைக்கும் அவரது போராட்டம் வெற்றி பெற்றதா என்பதே கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி வயதுக்கு மீறிய வேடத்தில் அப்படியே வாழ்ந்திருக்கிறார். இரண்டு மனைவிகளை சமாளிப்பது, குற்ற உணர்ச்சியில் புலம்புவது, ஹரியை காப்பாற்றத் துடிப்பது என நடிப்பில் பல பரிமாணங்கள் காட்டுகிறார்.
அந்த வயதில் தன் வயதில் குறைந்த அதிகாரியிடம் அடி வாங்கும் போது அதை எதிர்க்க இயலாத கையறு நிலையில் அவர் பார்க்கும் பார்வையில் அப்படி ஒரு ஆழம். இந்தப்படத்தில் நடித்திருப்பதில் அவருக்கு தேசிய விருது உள்பட பல விருதுகள் காத்திருக்கிறது.
அவருக்கு அடுத்து நம்மைக் கண்கலங்கச் செய்கிறார் கைது செய்யப்பட்டிருக்கும் அப்பாவி ஹரி. நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார். அடுத்த தளத்துக்கு பயணப்பட இருக்கும் முதல் தலைமுறை மாணவனாக வரும் அவர் நிலை சமூகத்தில் ஒருவருக்கும் வரக் கூடாது.
அவரைவிட அப்பாவியாகவும், படிக்காதவராகவும் வரும் அவரது அண்ணன் சுப்பிரமணி சிவா பாசத்தால் நெகிழ வைத்து இருக்கிறார். அவரது உடல் மொழி, வெள்ளந்தித்தனம் எல்லாமே கச்சிதம். சிவாவுக்குள்ளிருக்கும் திறமையான நடிகனை இந்தப்படம் வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
இரண்டாம் பாதியில் வரும் இனியா நடிப்பில் மிரட்டி இருக்கிறார். குறிப்பாக சாதி முத்திரையால் தன்னைக் கேவலப்படுத்தும் போலீஸ் அதிகாரியின் வாகனத்திற்கு முன் குதிரையில் நிற்கும் காட்சி அசத்தல். சிறிது நேரமே வந்து மின்னலாக மனத்தில் பதிந்து மறைந்து போகிறார்.
தங்கராஜாக வரும் சமுத்திரக்கனியை “தங்கோராஜ்…” என அழைக்கும் வட இந்தியக் காவல் அதிகாரியும், அவரது வசன மாடுலேஷனும் கூட மிரட்டல். வக்கீலாக வரும் ஜிஎம் சுந்தர், மகேஸ்வரி, லிசா என்று அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.
காவல்துறையில் நிலவும் அரசியல், பணிச்சுமை, சாதிக்கொடுமை என அனைத்தையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
அதிகாரம் கொண்ட துறையில் அதிகாரத்தில் இல்லாதவர்கள் அனைவரும் அடிமைகளே என்பதுதான் படத்தின் அடிநாதம். அதை நூல் பிடித்ததுபோல் சொல்லிக் கடைசியில் நெகிழ வைத்த பிராங்க்ளினுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் அற்புதமாக அமையும்.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் உணர்வோடு கலந்து ஒலிக்கின்றன. பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு நிற்க வேண்டிய இடத்தில் நின்று ஓட வேண்டிய இடத்தில் ஓடி நர்த்தனம் புரிந்திருக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு அருமையான ஸ்கிரிப்டின் மீது நம்பிக்கை வைத்து தன் நீலம் புரடக்ஷன்ஸ் நிறுவனத்தில் படத்தைத் தயாரித்த பா. ரஞ்சித்துக்கும் பூங்கொத்துடன் வாழ்த்துகள்.
ரைட்டர் – ராயல் சல்யூட்..!